• Sun. Sep 13th, 2026

24×7 Live News

Apdin News

ஐந்துமுனைப் போட்டி: இடைத்தேர்தலை தனித்து களம் காணும் இடதுசாரிகள் – தாராபுரத்தில் சிபிஐ போட்டி!

Byadmin

Sep 13, 2026


இடைத்தேர்தல்

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்டோபர்.6ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் அறிவித்துள்ளது.

இத்தேர்தலில் தவெக, திமுக, அதிமுக, நாதக போட்டியிடுவதாக அறிவித்து, நாதகவை தவிர மற்ற மூன்று கட்சிகளும் வேட்பாளர்களையும் அறிவித்துள்ளது.

தவெக அரசுக்கு ஆதரவு அளித்தாலும், கூட்டணியில் இடம்பெறாததால் இந்த இடைத்தேர்தலில் இடதுசாரிகள் யாருக்கும் ஆதரவு அளிப்பார்கள் என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் தேர்தலுக்கு யாருக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை இன்று அறிவிப்பதாக இடதுசாரி கட்சிகள் அறிவித்தன.

இந்நிலையில் யாருக்கு ஆதரவு என்பதை அறிவிப்பது தொடர்பாக இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார்.

எந்தக் கூட்டணியிலும் இல்லை

செய்தியாளர்களிடம் பேசிய அவர்., “இடைத்தேர்தல் தொடர்பாக இரண்டு நாட்கள் சிபிஐ செயற்குழு கூட்டம் நடைபெற்றது. தற்போது நிலவும் அரசியல் சூழலில் எந்தக் கூட்டணியிலும் இடம்பெறுவதில்லை என்ற முடிவை நீட்டிக்க முடிவு செய்துள்ளோம்.

ஆளுநர் ஆட்சி வரக்கூடாது என்பதற்காகவே சிபிஐ தவெகவிற்கு ஆதரவு அளித்தது. அமைச்சரவையிலும் நாங்கள் பங்கேற்கவில்லை, கூட்டணியிலும் நாங்கள் பங்கேற்கவில்லை.

ஐந்துமுனை போட்டி

இது ஒரு திணிக்கப்பட்ட இடைத்தேர்தல். இடதுசாரிகள் இந்த தேர்தலை எதிர்கொள்வது என முடிவு செய்துள்ளோம். சிபிஐ இந்த முடிவை எடுத்தது. மார்க்சிஸ்ட் கட்சி உடன் எங்கள் கருத்தை பகிர்ந்தோம்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தாராபுரத்திலும், மார்க்சிஸ்ட் கட்சி மதுராந்தகத்தில் போட்டியிட வேண்டும் என செயற்குழு கூட்டத்தில் நாங்கள் முடிவு செய்துள்ளோம். இந்த செய்தியை பெ.சண்முகமும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்.

இடதுசாரிகள் கூட்டோடு சிபிஐ தாராபுரத்தில் போட்டியிடுகிறது. நாங்கள் 60,70 ஆண்டுகளாக நாடாளுமன்ற ஜனநாயகத்திற்காக பெரும் பங்களிப்பை செலுத்தியுள்ளது. விழுமியங்களை பற்றி நின்றுள்ளோம்.

உழைக்கும் மக்களின் உரிமைக் குறலாக ஒலித்துள்ளார்கள். எனவே தமிழ் கூறும் நல்லுலகம் இடதுசாரிகளுக்கு இந்தத் தேர்தலில் வாய்ப்பளிக்கும் பட்சத்தில் உழைக்கும் மக்களின் குரலை, ஒடுக்கப்பட்ட எளிய மக்களின் குரலை, தமிழகம் நலன்சார்ந்த குரலை இடதுசாரிகள் சட்டமன்றத்தில் எழுப்புவோம், முழங்குவோம்.

அதற்காக தமிழ் உலகம் எங்களுக்கு ஆதரவு தரவேண்டும்.” என தெரிவித்தார்.

By admin