நெட்பிளிக்ஸ் ஓடிடியில் புதிதாக வெளியான ஆங்கில படமான ‘அபெக்ஸ்’ குறித்து கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் பதிவில் பாராட்டியுள்ளார்.
அவரது பதிவில், ஓர் ஆங்கிலப் படம் பார்த்தேன் ‘Apex’. கதை என்னவோ சிறியதுதான்; களம் பெரிது; காட்சி பெரிதினும் பெரிது.
அவள் ஒரு மலையேறி, எட்டாத சிகரங்களை ஏறித் தொடுவதே அவள் லட்சியம். ஒரு மலையேற்றத்தில் தான் கணவனையே இழக்கிறாள். ஆனாலும் லட்சியத்தை இழந்தாளில்லை.
அதே சிகரம்தொடத் தனியாக முயல்கிறாள். அத்துவானக் காட்டில் ஒரு மனிதன் துணைக்கு வருகிறான்.
போகப் போகத் தெரிகிறது, அவன் ஒரு ‘நரமாமிசம் தின்னி’ என்று. அவன் துரத்தலிலிருந்து மீள்வதும், தொட நினைத்த சிகரத்தைத் தொடுவதும் மிச்சக் கதையின் உச்சம்
காட்சிகளின் சாகசத்தில் உயிர் திரண்டு கண்ணில் தேங்கிவிடுகிறது. உடலும் மனமும் உறுதிப்பட்டால் ஒரு பெண் எதையும் சாதிப்பாள் என்ற பெருமிதம் எழுகிறது.
இதுவொரு படமல்ல; அறியாத பூகோளம்; அடையாத அனுபவம்” என்று மெச்சியுள்ளார்.