• Wed. Oct 7th, 2026

24×7 Live News

Apdin News

கச்சத்தீவு ஒப்பந்தங்களை மீண்டும் திறக்கும் எண்ணமில்லை: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டம்

Byadmin

Oct 7, 2026


கச்சத்தீவு மற்றும் கடல்சார் எல்லை தொடர்பான இந்தியா – இலங்கை இடையிலான ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்யவோ அல்லது மீண்டும் திறக்கவோ எந்தவொரு எண்ணமும் இல்லை என இந்திய மத்திய அரசு, அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் தெளிவுபடுத்தியுள்ளது.

கச்சத்தீவு விவகாரத்தில் 1974 மற்றும் 1976ஆம் ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், இந்திய உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் குமார் மற்றும் சஞ்சீவ் சச்சிதேவா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, மத்திய அரசு இந்த நிலைப்பாட்டை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

மத்திய அரசு சார்பில் முன்னிலையான இந்திய அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி, இந்திய மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளை இந்திய அரசு தொடர்ந்து தூதரக ரீதியிலேயே கையாண்டு வருவதாகத் தெரிவித்தார். அதேநேரம், இந்தியாவின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ளுமாறோ அல்லது அதற்கேற்ப செயற்படுமாறோ இலங்கை அரசை இந்தியாவால் ஒருபோதும் கட்டாயப்படுத்த முடியாது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

1974ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் மூலம் கச்சத்தீவு இலங்கையிடம் கையளிக்கப்பட்டமை மற்றும் 1976ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் ஊடாக இலங்கை கடல் பிராந்தியத்தில் இந்திய மீனவர்களின் மீன்பிடி உரிமைகள் கட்டுப்படுத்தப்பட்டமை ஆகியவற்றை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதே அட்டர்னி ஜெனரல் இந்த விளக்கங்களை முன்வைத்தார்.

மேலும், எல்லை தாண்டிச் செல்லும் இந்திய மீனவர்களின் தொடர் விவகாரம் குறித்தும் நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இந்திய கடல் எல்லையில் மீன் வளம் குறைவடைந்து வருவதே தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசிப்பதற்கு பிரதான காரணமாக அமைகின்றது எனவும், சர்வதேச கடல் எல்லையைத் தாண்டுவதைத் தவிர்க்கும் வகையில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த விடயத்தில் தமிழக அரசும் இப்பிரச்சினைகளுக்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இவ்விசாரணைகளின் முடிவில், குறித்த இரு ஒப்பந்தங்களின் அரசியலமைப்பு மற்றும் சட்டப்பூர்வமான செல்லுபடியாகும் தன்மை குறித்து உச்சநீதிமன்றம் எந்தவொரு இறுதித் தீர்ப்பையும் வழங்கவில்லை. இதன் காரணமாக, ஒப்பந்தங்களுக்கு எதிராகத் தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைகள் தொடர்ந்தும் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன.

By admin