பட மூலாதாரம், Getty Images
1970-ஆம் ஆண்டு இது வரையிலான இயற்கை சார்ந்த இசை ஆல்பங்களில் அதிகம் விற்பனையான ஆல்பம் வெளியானது, திமிங்கலப் பாடலை உலகுக்கு அறிமுகப்படுத்தியதோடு நாம் திமிங்கலங்களை பார்க்கும் விதத்தை அது என்றென்றும் மாற்றியமைத்தது.
1952-ஆம் ஆண்டு பனிப்போர் உச்சத்தில் இருந்தபோது அமெரிக்க சோனார் பொறியாளர் ஃபிராங்க் வாட்லிங்டன் பெர்முடா கரை அருகே பணியில் இருந்தார். அங்கு சோவியத் நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் நில அதிர்வு செயல்பாடுகளை கடலின் ஆழத்தில் கவனித்துக் கொண்டிருந்தார்.
வாட்லிங்டன் ஆரம்பகால வகையைச் சேர்ந்த நீருக்கடியில் ஒலி அறியும் கருவி ஒன்றைப் பயன்படுத்தி வந்தார். ஒரு முனையில் ஒலிவாங்கியுடன் நீண்ட கேபிள்கள் கொண்ட அந்தக் கருவியை கடலுக்குள் செலுத்தி ஆய்வு செய்து வந்தார். அவர் என்ன மாதிரியான ராணுவச் செயல்பாடுகளைக் கண்டறிந்தார் என்பது தெரியவில்லை. ஆனால் அவர் வேறு ஒன்றை கண்டுபிடிக்கத் தொடங்கியிருந்தார்.
துயரமான, மனதை நிலைகுலையச் செய்யும் அந்த ஒலிகள் சில சமயங்களில் மணிக்கணக்கில் நீடிக்கும். வாட்லிங்டன் பிரமித்துப் போனார். ஆனால் அவரால் உறுதியாகக் கூற முடியவில்லை. ஆனால் அவை ஹம்பேக் திமிங்கலங்களால் எழுப்பப்படுகின்றன என்று அவர் நினைக்கத் தொடங்கினார்.
அவரின் கணிப்பு சரியாக இருந்தது. வாட்லிங்டன் மற்றும் மற்றும் சிலர் ஹம்பேக் திமிங்கலங்களின் தொடர்பு பற்றி ஆரம்ப காலத்தில் மேற்கொண்ட ஒலிப்பதிவுகள் நாம் திமிங்கலங்களைப் பார்க்கும் விதத்தை என்றென்றும் மாற்றியமைத்தது.
இந்த ஒலிப்பதிவுகள் 1970-இல் வெளியான ஹம்பேக் திமிங்கலத்தின் பாடல் ஆல்பத்தில் இடம்பெற்றது, திமிங்கலப் பாடல் என ஒன்று இருப்பதையே அதற்கு முன்னர் அறியாத உலகத்திற்கு அதனை அறிமுகப்படுத்தியது.
திமிங்கலப் பாடல் மக்கள் கலாசாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. வளர்ந்து வந்த ‘திமிங்கலங்களைப் பாதுகாப்பதற்கான இயக்கத்தின்’ பாடலாக அது மாறிப்போனது. இறுதியாக சரிவிலிருந்த ஹம்பேக் திமிங்கலங்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
திமிங்கல பாடல் கண்டுபிடிக்கப்பட்ட தருணம்
பட மூலாதாரம், MAURO PIMENTEL/AFP via Getty Images
வாட்லிங்டன் தனது பதிவை உள்ளூர் மக்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களிடம் பகிரத் தொடங்கினார். 1967-ஆம் ஆண்டில் அவர் பெர்முடாவிற்குப் பயணம் மேற்கொண்டிருந்த ஒலிசார் உயிரியலாளர்களான கேட்டி மற்றும் ரோஜர் பெய்ன் ஆகியோரைச் சந்தித்தார்.
இரண்டாம் உலகப் போரின்போது கண்ணிவெடிகளை அகற்றும் கப்பலாகப் பயன்படுத்தப்பட்ட தனது மரத்தாலான ஆய்வுக் கப்பலின் இயந்திர அறையில், பின்னணியில் ஜெனரேட்டர் இரைச்சலிட்டுக் கொண்டிருக்க, அவர் அந்தப் பதிவுகளை அவர்களுக்கு ஒலிக்கச் செய்தார்.
“கேட்பதற்கு மிகவும் மோசமான சூழலில் நான் கேட்டது, அதுவரை எந்தவொரு விலங்கிடமிருந்தும் நான் கேட்டிராத மிகவும் அசாதாரணமான, வியக்கத்தக்க ஒலி வெளிப்பாடாக இருந்தது,” என ரோஜர் 2020-இல் பிபிசியின் தி டாக்குமெண்டரி பாட்காஸ்டில் தெரிவித்திருந்தார். அவர் 2023-ஆம் ஆண்டில் உயிரிழந்தார்.
அழகான மற்றும் வியக்கத்தக்க வகையில் மாறுபடும் அந்த ஒலிகளைக் கேட்டு அந்தத் தம்பதியினர் மலைத்துப் போயினர். “நாங்கள் பின்னர் அறிந்துகொண்டபடி, அவை ஒரே ஒரு விலங்கின் ஒலிகள்தான்.” என்று கேட்டி 2015-இல் அமெரிக்க தேசிய வானொலியிடம் கூறினார். “
வாட்லிங்டன் அவர்களுக்கு ஒரு ஒலிப்பதிவை வழங்கினார்; அதனைப் புரிந்துகொள்ளும் முயற்சியில் கேட்டி, ரோஜர் மற்றும் அவர்களுடன் இணைந்து பணியாற்றியவர்கள் (இயற்கை பாதுகாப்பு ஆர்வலர் ஸ்காட் மெக்வே, கணிதவியலாளர் ஹெலா மெக்வே மற்றும் ஆராய்ச்சியாளர் எலியனோரா டி’ஆர்ம்ஸ்) ஈடுபட்டனர்.
அந்த ஒலிகள் நீண்ட மற்றும் கணிக்கக்கூடிய பாணியில் மீண்டும் மீண்டும் ஒலிப்பதை அவர்கள் உணர்ந்தனர்.
“நான் செய்ததைப் போல நூறு முறை அதைக் கேட்டுவிட்டு, அந்த விஷயத்தை மெல்லமெல்ல உணராமல் இருக்க முடியாது,” என்று ரோஜர் 2020-இல் பிபிசியிடம் கூறினார்.
ஒரு விலங்கு சீரான தாளத்துடன் மீண்டும் மீண்டும் ஒலியை எழுப்பும்போது, அது ‘பாடுதல்’ என்று வரையறுக்கப்படுவதாக அவர் கூறினார். சில நேரங்களில் பாடல்கள் அரை மணி நேரம் வரை நீளும், அதன்பின் அவை மீண்டும் மீண்டும் பாடப்படும்.
அந்தக் காலகட்டத்தில் திமிங்கலங்கள் ஒலிகளை உற்பத்தி செய்யும் என மக்கள் இயல்பாகவே அறிந்திருந்தனர் என்கிறார் குக் தீவுகளில் உள்ள கடல் பாலூட்டிகள் ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்புக்கான மையத்தில் இயக்குநரும் திமிங்கல ஆராய்ச்சியாளருமான நான் ஹவுசர்.
ஆனால் இவை பாடல் என உணர்வது “சத்தங்களை எழுப்பும் விலங்கு என்பதிலிருந்து மிகவும் நுணுக்கமான, ஒழுங்கமைக்கப்பட்ட ஒலி வெளிப்பாட்டை உருவாக்கும் ஒரு விலங்கு என்பது வரையிலான “கருத்துரு ரீதியான ஒரு மிகப்பெரிய பாய்ச்சல்” என்று அவர் குறிப்பிடுகிறார்.
ஹம்பேக் திமிங்கலப் பாடல்
பட மூலாதாரம், Joseph Prezioso/Anadolu via Getty Images
தான் “காட்டு உலகம்” எனக் குறிப்பிடும் ஒன்றைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட சுற்றுச்சூழல் ஆர்வலரான ரோஜர், தனது கைகளில் இருப்பது ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு என்பதை விடவும் மேலானது என்பது விரைவாக உணர்ந்தார்.
திமிங்கலங்களை வேட்டையாடுவதற்கு எதிரான போராட்டங்கள், மாநாடுகள் மற்றும் இரவு விருந்துகள் என இந்த பாடல்களைக் கேட்கும் யாரிடத்திலும் அதனை ஒலித்துக் காட்டினார் ரோஜர்.
“புதிய பொம்மை கிடைத்த ஒரு சிறு குழந்தையைப் போல அவர் இருந்தார், எல்லோரும் அவர் பேச்சைக் கேட்க வேண்டியிருந்தது,” என்கிறார் அமெரிக்காவைச் சேர்ந்த லாப நோக்கற்ற அமைப்பான ஓஷன் அலையன்ஸின் தலைமை அதிகாரியான இயன் கெர். இந்த அமைப்பை ரோஜர் பெய்ன் நிறுவியிருந்தார்.
“உண்மையிலேயே அது ஒரு மிகப்பெரிய உந்துசக்தியாக அமைந்தது. இவை ஒருவிதமான பாடகர்-கவிஞர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் என்று திடீரென உணர்ந்த தருணம் அது,” என்று குறிப்பிடுகிறார் இயன்.
இயற்கை உலகில் பாடல் என்பது மிகவும் வழக்கத்திற்கு மாறான ஒரு நடத்தை. அவை திமிங்கலங்களுடன் தொடர்புபடுத்தப்பட்டது மக்களின் மனதைக் கவர்ந்தது என்கிறார் ஆன்டி ரோகன். இவர் ஓஷன் அலையன்ஸில் கடல்சார் பாலூட்டிகள் உயிரியலாளராகவும் அறிவியல் மற்றும் பாதுகாப்பு இயக்குநராகவும் உள்ளார். மனிதர்களைத் தவிர்த்து பறவைகள் மட்டும் தான் பாடும் என அறியப்பட்டு வந்ததாக அவர் தெரிவிக்கிறார்.
“ஒரு விதத்தில் அது மற்ற விலங்குகளின் நடத்தையிலிருந்து எந்த அளவிலும் வித்தியாசமாக இருக்கவில்லை. ஆனால் அதிக மனத்திறன் எடுத்துக்கொள்ளும் ஒரு விலங்கு இந்தச் செயலை அரை மணி நேரத்திற்கும் மேல் தொடர்வதற்கான நோக்கம் என்ன?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
1970-இல் ரோஜர், கேட்டி மற்றும் வாட்லிங்டன் ஹம்பேக் திமிங்கலப் பாடல்களை வெளியிட்டனர். இதில் ஹம்பேக் திமிங்கலங்களின் ஒலிப்பதிவுகளில் 5 இடம்பெற்றிருந்தன. அவை அவற்றின் அழகுக்காகவும், மனிதர்களை நெகிழவைக்கும் ஆற்றலுக்காகவும் குறிப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவை.
அந்த இசைத்தொகுப்பு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன், மனதை ஈர்க்கும் திமிங்கலங்களின் ஒலிகளை மிக விரைவாக லட்சக்கணக்கான மக்களிடம் கொண்டு சேர்த்தது. அது 1,25,000-க்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகி வரலாற்றில் அதிக அளவில் விற்பனையான இயற்கை சார்ந்த ஆல்பம் என்கிற பெயர் பெற்றது.
அதன் ஒரு பகுதி ‘நேஷனல் ஜியோகிராபிக்’ இதழின் 1 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களுக்கு அனுப்பப்பட்டது. இது ஒலிப்பதிவு வரலாற்றிலேயே ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய அளவிலான விநியோகமாகும்.
“அதற்கு முன்னர் இதுபோன்ற ஒன்றை எவரும் கேட்டதில்லை,” என்கிறார் கெர்.
திமிங்கலப் பாதுகாப்பிற்கான ஆதரவைத் திரட்டுவதற்காக ரோஜர் அந்த ஆல்பத்தைப் பயன்படுத்தினார். பீட்டில்ஸ் முதல் பாப் டிலன் வரை அனைவருக்கும் அதன் பிரதிகளை அனுப்பினார். பாடகர்கள் ஜூடி காலின்ஸ் மற்றும் கேட் புஷ் ஆகியோர் தங்கள் ஆல்பங்களில் திமிங்கலப் பாடல்களை இடம்பெறச் செய்தனர்.
அழிவின் விளிம்பில் உள்ள ஹம்பேக் திமிங்கிலங்களைக் காப்பாற்றுவது குறித்த காலப் பயணம் சார்ந்த கதைக்களத்தைக் கொண்ட 1986-ஆம் ஆண்டு வெளியான ‘ஸ்டார் ட்ரெக்’ திரைப்படத்தில் இதன் பகுதிகள் பயன்படுத்தப்பட்டன. 1977-இல், ‘வாயேஜர் 1’ விண்கலத்தில் இருந்த ‘கோல்டன் ரெக்கார்ட்’ ஒலித்தட்டில் இதன் ஒரு பகுதி விண்வெளிக்கே அனுப்பப்பட்டது.
திமிங்கலம் பற்றிய பார்வையில் ஏற்பட்ட மாற்றம்
பட மூலாதாரம், Ocean Alliance
1970-க்கு முன்பு பெரிய திமிங்கலங்களின் ஒலிகளைக் கேட்பது மிகவும் அரிதானது என்கிறார் மேக்ஸ் பிரிட்ஜ். அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் வரலாற்றாசிரியராக இருக்கும் இவர் ஹம்பேக் திமிங்கலப் பாடல் வரலாறு பற்றி சமீபத்தில் ஆய்வுக் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.
“1960களில் பிரபலமான திரைப்படங்கள் மற்றும் கார்டூன்களில் கற்பனையான பெரிய திமிங்கலங்கள் வழக்கமாக அமைதியாகவும் அல்லது மிருகத்தனமான உறுமல் மற்றும் முனகல் ஒலிகளை எழுப்புவதாகவும் இருந்தன,” என்று அவர் கூறுகிறார்.
இந்த ஆல்பம் வெளியானது, அந்தக் காலத்தில் திமிங்கலங்கள் பற்றிய மக்களின் பார்வையில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றத்தின் ஓர் அங்கமாக இருந்தது என்கிறார் ரோகன்.
திமிங்கலங்கள் அதற்கு முன்பாக போபி டிக் போன்ற கதைகளில் வருவதைப் போன்ற அச்சப்பட வேண்டிய ஒன்றாகவும் அல்லது ஒரு சரக்காகவுமே பார்க்கப்பட்டதாக அவர் கூறுகிறார்.
“இன்று திமிங்கலங்கள் நாம் வளரும்போது கேள்விப்பட்ட கவர்ச்சிகரமான விலங்குகளில் மேலடுக்கில் உள்ளன. இந்தப் பாடல்கள் வருவதற்கு முன்பாக அப்படியான சூழல் இல்லை,” என்றார் ரோகன்.
விளக்குகள் மற்றும் சோப்புக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய் முதல் வாசனை திரவியங்களில் பயன்படுத்தப்படும் அம்பர்கிரிஸ் வரை அனைத்திற்காகவும் பல நூற்றாண்டுகளாக திமிங்கலங்கள் வேட்டையாடப்பட்டு வந்த நிலையில் 1970களில் பல்வேறு வகை திமிங்கலங்கள் அழிவின் விளிம்பிற்கே சென்றன.
இதில் ஹம்பேக் திமிங்கலங்களும் அடங்கும். அவை வேட்டையாடப்படுவதற்கு முன்பிருந்த எண்ணிக்கையில் 5 சதவிகிதம் மட்டுமே இருந்தன.
1970களின் நடுப்பகுதியில் புதிதாக உருவாக்கப்பட்ட கிரீன்பீஸ் அமைப்பால் எடுக்கப்பட்ட, ஈட்டிகளால் குத்தப்படும் திமிங்கலங்களின் புகைப்படங்களுடன் சேர்ந்து, ‘ஹம்பேக் திமிங்கலங்களின் பாடல்கள்’ புதிதாகத் தோன்றி வளர்ந்து வந்த திமிங்கல வேட்டை எதிர்ப்பு இயக்கத்திற்குப் புத்துயிர் ஊட்ட உதவியது.
“இது சாதாரண மக்கள் தங்கள் வீடுகளிலேயே திமிங்கிலங்களின் ஒலியைக் கேட்க வழிவகுத்தது. அதனால் ஈர்க்கப்படுவதற்கு நீங்கள் ஒரு விஞ்ஞானியாக இருக்க வேண்டிய அவசியமில்லை,” என்று ஹவுசர் கூறுகிறார்.
அதிகரித்து வந்த அழுத்தத்திற்கு மத்தியில் 1972-ஆம் ஆண்டு அமெரிக்க நாடாளுமன்றம் கடல்சார் பாலூட்டிகள் பாதுகாப்பு சட்டத்தை இயற்றியது. அதன்பிறகு 1982-இல் வணிக நோக்கில் மேற்கொள்ளப்படும் திமிங்கல வேட்டையைத் தடுக்கும் உலகளாவிய சட்டப்பூர்வ தற்காலிகத் தடை கொண்டு வரப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1985-86 காலகட்டத்தில் நிரந்தரத் தடை அமலுக்கு வந்தது.
சில திமிங்கல இனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. குறிப்பாக, ஹம்பேக் திமிங்கலங்கள் குறிப்பிடத்தக்க வகையில் மீட்சியடைந்துள்ளன. சில இடங்களில், அவை இப்போது ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானவற்றைக் கொண்ட மிகப்பெரிய குழுக்களாகக் கூட காணப்படுகின்றன.
1970களின் திமிங்கலப் பாடல்கள்
பட மூலாதாரம், Ocean Alliance
திமிங்கலங்களின் பாடலைக் கண்டறிந்த நிகழ்வானது, அந்தக் காலத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விலங்குகளின் அறிவுத்திறன் குறித்த புரிதல் ஆகியவற்றில் ஏற்பட்ட பரந்த அளவிலான புரட்சியின் ஒரு பகுதியாக அமைந்தது.
செயற்கைப் பூச்சிக்கொல்லிகளின் சுற்றுச்சூழல் தாக்கத்தை ஆராய்ந்து, ரேச்சல் கார்சன் 1962-இல் ‘சைலண்ட் ஸ்பிரிங்’ நூலை வெளியிட்டார்.
1970-இல் நடைபெற்ற முதல் பூமி தினம் சுமார் 2 கோடி மக்களைத் திரட்டிய அதே வேளையில், ஜேன் குடால் மற்றும் டயான் ஃபோஸ்ஸி போன்ற விஞ்ஞானிகள், மற்ற அறிவார்ந்த இனங்கள் குறித்த நமது புரிதலை மாற்றுவதில் மும்முரமாக இருந்தனர்.
திமிங்கலங்களின் பாடல்கள் ஒரு பரந்த சூழலியல் நெருக்கடியின் குறியீடாகவும், “இயற்கை உலகின் துயரார்ந்த மன்றாடலாகவும்” கூடக் கருதப்படத் தொடங்கியதாக பிரிட்ஜ் கூறுகிறார்.
இருப்பினும், 1970-களின் பிற்பகுதியில், திமிங்கலங்கள் அல்லது அவற்றின் இசை போன்ற தீவிரமான சுற்றுச்சூழல் ஆர்வத்தின் குறியீடுகள் மீது அமெரிக்கப் பொதுப் பண்பாடு ஒருவித அவநம்பிக்கையான அல்லது கண்ணோட்டத்தைக் கொள்ளத் தொடங்கியது.
“பின்னர் 1980-களில், இந்த ஒலி ‘நியூ ஏஜ்’ (New Age) இசையின் முக்கிய அங்கமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இன்றும் கூட, அலுவலகம் சார்ந்த பணிவாழ்வின் மன அழுத்தத்தைத் தணிக்கும் ஒரு வழியாகவே இது பெரும்பாலும் பார்க்கப்படுகிறது,” என்கிறார் பிரிட்ஜ்.
“அதே வேளையில் திமிங்கலப் பாடல் கண்டுபிடிப்பு அதற்கு முன்னர் மிகவும் குறைவாகவே ஆய்வு செய்யப்பட்ட விலங்குகளில் நவீன திமிங்கல உயிரியலைத் தொடங்குவதற்கு உதவியது,” என்கிறார் ரோகன்.
ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள அனைத்து ஆண் உயிரினங்களும் ஏறக்குறைய ஒரே மாதிரியான பாடலைப் பாடுவதையும், அப்பாடல் காலப்போக்கில் மாறுதலுக்கு உட்படுவதையும் கேட்டி கண்டறிந்தார்.
இப்பாடல்கள் மிகப் பெரிய தொலைவுகளுக்கு அப்பால் ஒரு கூட்டத்திலிருந்து மற்றொரு கூட்டத்திற்குப் பரவக்கூடியவை என்றும், சில சமயங்களில் அப்பகுதியில் முன்பு மிகவும் விரும்பப்பட்ட பாடல்களின் இடத்தைப் பிடிக்கக்கூடியவை என்றும் இப்போது நமக்குத் தெரியும்.
இதனை விவரிக்கையில் “கடலின் ஊடே கலாசாரம் நகர்வதை நாம் பார்க்கிறோம்,” என்கிறார் ஹவுசர்.
திமிங்கலங்களின் பாடல்களில் ஹம்பேக் திமிங்கலங்கள் மிகவும் சிக்கலான பாடல்களை (அவை மனித மொழியில் சில அடையாளங்களையும் காட்டின) கொண்டிருக்கும் வேளையில் மற்ற திமிங்கலங்களின் சத்தங்களும் ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளன.
உதாரணமாக, கோடாக்கள் எனப்படும் மோர்ஸ் குறியீடு போன்ற சொடுக்கு ஒலித் தொடர்களில் உரையாடும் ஸ்பெர்ம் திமிங்கலங்களுக்கு பிராந்திய வட்டார வழக்குகள் இருப்பது தற்போது அறியப்பட்டுள்ளது.
அதே சமயம், ஆண் திமிங்கலங்கள் தனித்தனியாக மெதுவான, ஆழமான மற்றும் மிகவும் உரத்த சொடுக்கு ஒலிகளையும் எழுப்புகின்றன. மனிதர்களால் கேட்க முடியாத நீலத் திமிங்கலத்தின் சத்தம் சுமார் 1,600 கிமீ வரை பயணிக்கக்கூடியவை.
சில ஆராய்ச்சியாளர்கள் திமிங்கலங்களுடன் உரையாடவும், அவை என்ன சொல்கின்றன என்பதைப் புரிந்துகொள்ளவும் கூட முயற்சித்து வருகின்றனர். பிற்காலத்தில் ரோஜரும் இம்முயற்சியில் ஈடுபட்டார்.
தற்போது, திமிங்கலங்களின் ஒலிகள் மற்றும் மனிதக் காதுகளுக்கு இனிமையான பிற இயற்கை ஒலிகள் அடங்கிய ஆயிரக்கணக்கான ஒலிப்பதிவுகள் உள்ளன.
இருந்தபோதிலும் 1970களில் ஒலிப்பதிவுகளில் இருந்த “இணக்கம் அல்லது அது போன்ற ஒரு வசீகரமான தன்மை” இவை எவற்றிலும் இல்லை என வாதிடுகிறார் கெர்.
“ஆழத்திலிருந்து எழும், அந்தச் சலசலப்புடன் கூடிய, மனதை ஆட்கொள்ளும் குரலில் ஒரு அற்புதமான அழகியல் இருக்கிறது.” என்றார் அவர்.
ஒருவேளை அந்தக் காலகட்டம் ஹம்பேக் திமிங்கலத்தின் அழகிய பாடலை பதிவு செய்திருக்கலாம் என்கிறார் அலிசா வைல். 1950கள் தொடங்கி 1990கள் வரையிலான கடல்சார் பாலூட்டிகளின் ஒலிகள் அடங்கிய ஓஷன் அலையன்ஸின் பரந்த சேகரிப்புக் காப்பகத்தை டிஜிட்டல்மயமாக்கி ஆவணப்படுத்தும் பொறுப்பில் உள்ளார். இவற்றில் கேட்டி மற்றும் ரோஜரின் பதிவுகளும் அடங்கும்.
குழந்தைப் பருவத்தில் ஹம்பேக் திமிங்கலத்தின் பாடல்களை முதல்முறையாக கேட்டதை வைல் தற்போதும் நினைவில் வைத்துள்ளார். “அது அசாதாரணமானது. நான் அதை ஒவ்வொரு முறை கேட்கும்போதும் எனக்கு மெய்சிலிர்க்கிறது.” என்றும் அவர் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Jose OSORIO / AFP via Getty Images
இன்று, மனித நடவடிக்கைகளால் ஏற்படும் இரைச்சல்கள் நிறைந்த முற்றிலும் மாறுபட்ட ஒலிச் சூழலில் திமிங்கலங்கள் போட்டியிட வேண்டியுள்ளதால், பழைய ஒலிப்பதிவுகளைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானது என்று அவர் கூறுகிறார்.
“இந்தப் பதிவுகள் ஒரு குறிப்பிட்ட இடத்தையும் காலத்தையும், அத்துடன் குறிப்பிட்ட சில தனி நபர்களையும் அப்படியே பாதுகாத்து வைத்துள்ளன. காலப்போக்கில் ஏற்படும் மாற்றங்களை, அதாவது திமிங்கலங்கள் எவ்வாறு மாறுபட்ட விதத்தில் தகவல் பரிமாறிக் கொள்கின்றன என்பதையும், ஒலியமைப்பே எவ்வாறு மாறியுள்ளது என்பதையும் நாம் இதன் மூலம் கண்காணிக்க முடியும்.” என்று அவர் கூறுகிறார்.
கப்பல்கள் மோதுவது, வலைகளில் சிக்கிக் கொள்வது தொடங்கி ஒலி மாசுபாடு, வெப்பமடைந்து வரும் கடல் மற்றும் சில நாடுகளில் நடைபெற்று வரும் திமிங்கல வேட்டை வரை திமிங்கலங்கள் தற்போதும் பல அச்சுறுத்தல்களைச் சந்திக்கின்றன. இன்று நான்கில் ஒரு திமிங்கல இனங்கள் அழிவில் விளிம்பில் உள்ளன. இது 1991-இல் ஏழில் ஒன்று என்கிற ரீதியில் இருந்தது.
இருப்பினும், திமிங்கலங்களைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளில் ‘ஹம்பேக் திமிங்கலத்தின் பாடல்கள்’ சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு முக்கிய உந்துசக்தியாகத் திகழ்ந்தன என்று ஹவுசர் கூறுகிறார்.
“பெரும்பாலான மக்கள் உயிருள்ள ஹம்பேக் திமிங்கிலத்தை ஒருபோதும் நேரில் பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், திடீரென ஒரு ஒலிப்பதிவை ஒலிக்கவிட்டு அவற்றின் குரலைக் கேட்க முடிந்தது. திடீரென, ‘எத்தனை திமிங்கலங்கள் எஞ்சியுள்ளன?’ என்பது மட்டுமே விவாதமாக இருக்கவில்லை. மாறாக, ‘நாம் எத்தகைய உயிரினங்களைக் கொன்று கொண்டிருக்கிறோம்?’ என்பதே முக்கிய விவாதமாக மாறியது.” என்று அவர் கூறுகிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு