24
* நீதித்துறையின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குட்படுத்திய நீதியரசர், இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவரா?
* ”நாங்கள் என்ன ஆடுகளா, மாடுகளா?” என அன்று பொலிஸ் அதிகாரி ஏளனம் செய்த அதே கேள்வியுடன், இன்றுவரை காத்திருக்கும் தாய்மார்கள்!
—- —- —-
நீதி என்பது இங்கு வெறும் வார்த்தையல்ல; அது அரசதிகாரத்தின் கரங்களால் திட்டமிட்டு மறுக்கப்படும் ஒரு கூட்டுப் பெருந்துயரம்.
இலங்கையின் முப்பதாண்டுகாலப் போர் மற்றும் 2009 இறுதிப் போருக்குப் பின்னரான சூழலில், தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதிகள் அனைத்தும் தற்செயலான தவறுகள் அல்ல; அவை அரச கட்டமைப்பாலும் அதன் பாதுகாப்புப் பொறிமுறைகளாலும் மிக நுணுக்கமாக அரங்கேற்றப்பட்ட ஒரு ‘கட்டமைக்கப்பட்ட நீதி மறுப்பு’ (Structural Denial of Justice) என்றே சித்திரிக்க முடியும்.
இப்பின்னணியில்தான், கிழக்கு மாகாணம் மட்டக்களப்பில் அரங்கேறிய வலம்புரிப் படுகொலைகளின் விபரிப்பு உற்றுநோக்கப்பட வேண்டியது பிரதானமாகிறது.
இது சிதைக்கப்பட்ட இரு பிஞ்சுயிர்களின் துயரக் கதை மட்டுமல்ல. மாறாக, நீதியின் பெயரால் இங்கு நடத்தப்படும் அதிகார நாடகங்களையும், பணத்தைக் கொடுத்துப் பாதிக்கப்பட்டவர்களின் மௌனத்தை விலைக்கு வாங்க முற்படும் ”இலங்கை அரசு” என்ற கட்டமைப்பின் கோர முகத்தையும், அறிவுபூர்வமாகவும் உணர்வுபூர்வமாகவும் கண்முன்னே நிறுத்தும் ஓர் அசைக்க முடியாத சாட்சியமாகும்.
2008 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் மட்டக்களப்பில் அரங்கேறிய ‘வலம்புரி மளிகைக் கடைச் சிறுவர்களின்’ படுகொலையானது, வெறும் இரு தனிநபர்களின் மரணம் மட்டுமல்ல. அது இலங்கையின் பாதுகாப்புப் படைகள், சட்டத்துறை மற்றும் நீதித்துறை ஆகியவற்றின் கூட்டுப் பக்கச்சார்பையும், ஈழத்தமிழர்கள் மீதான கட்டமைக்கப்பட்ட அரச வன்முறையையும் அம்பலப்படுத்திய ஒரு கொடூரமான வரலாற்றுப் பதிவாகும்.
* சம்பவப் பின்னணியும் சட்டவிரோதக் கைதும் —
இலங்கையின் அப்போதைய தலைமை நீதியரசர் சரத் என். சில்வா, புதிய நீதிமன்ற வளாகமொன்றைத் திறந்து வைப்பதற்காக 2008 ஒக்ரோபர் 4 ஆம் திகதி மட்டக்களப்பிற்கு வரவிருந்தார்.
இதனால் மட்டக்களப்பு நகரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளும் நோக்கில், பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் (STF) மற்றும் இராணுவத்தினர் இணைந்து ஒக்ரோபர் 3 ஆம் திகதி பாரிய சுற்றிவளைப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டனர்.
இச்சுற்றிவளைப்பின்போதுதான், மட்டக்களப்பு காந்தி வீதியில் அமைந்துள்ள ‘வலம்புரி’ மளிகைக் கடையின் ஊழியர்களான 25 வயதான செல்வராசா குணசீலன், 17 வயதான கந்தசாமி குகதாஸ் ஆகிய இரு தமிழ் இளைஞர்களும் குற்றச்சாட்டுகள் எதுவுமின்றிக் கைது செய்யப்பட்டனர்.
குணசீலன் 1983 கறுப்பு ஜூலைக்குச் சற்று முன்பு பிறந்து, 2009 முள்ளிவாய்க்கால் பேரழிவிற்குச் சில மாதங்களுக்கு முன்னதாகக் கொல்லப்பட்ட ஒரு துரதிர்ஷ்டசாலி. வறுமை காரணமாக ஒன்பதாம் வகுப்போடு கல்வியைக் கைவிட்டு, முதலாளியின் நம்பிக்கைக்குரிய பிள்ளையாக வங்கியில் பணத்தை வைப்புச் செய்யும் அளவுக்கு நேர்மையாக உழைத்தவன்.
பொலிஸார் குணசீலனைத் தேடி வரவில்லை; வேறொருவரை அவர்கள் இழுத்துச் சென்றபோது, ஓரளவு சிங்களம் பேசத் தெரிந்த குணசீலன், “ஏன் இவரை அழைத்துச் செல்கிறீர்கள்?” என்று மரியாதையுடன் கேள்வி எழுப்பினான்.
அவன் கேட்ட அந்த ஒரே கேள்விக்காக, குணசீலன் மற்றும் குகதாஸ் உட்பட அங்கிருந்த கடை ஊழியர்கள் அனைவரும் பொலிஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டனர்.
தங்களுக்கு அன்றாடம் அரிசியும் சோப்பும் பொதி செய்து கொடுக்கும் அந்தச் சிறுவர்களைப் பொலிஸாருக்கு நன்றாகத் தெரிந்திருந்தும், இந்தச் சட்டவிரோதக் கைது அரங்கேறியது.
குகதாஸ், விறகு வெட்டியும் கல் உடைத்தும் உழைத்து வந்த ஒருவன். அதன் பின்னர் அந்தக் கடையில் சேர்ந்து வெறும் எட்டு மாதங்களே ஆகியிருந்த நிலையில்தான், அவன் சம்பாதிக்கவே தொடங்கியிருந்தான்.
* பொலிஸ் நிலையத்து வாசலும் தாய்மார்களின் தவிப்பும்–
கைது செய்யப்பட்ட மறுநாள், ஒக்ரோபர் 4 ஆம் திகதி சனிக்கிழமை, குணசீலனின் தாய் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு எதிரே உள்ள வீதியின் இருக்கையில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பசியோடும் கண்ணீரோடும் காத்திருந்தார்.
அப்போது, சிறைக் கம்பிகளுக்கு பின்னால் இருந்து “அம்மா எங்களைச் சும்மாதான் கூட்டிட்டு வந்திருக்கிறார்கள், விட்டுவிடுவார்கள்” என்று மகன் அச்சமின்றி தாயாரிடம் இயல்பாகவே கூறினான்.
கழிவறைக்கு அருகில் இருந்த சிறை அறையின் துர்நாற்றம் தாளாது அவன் சாப்பிட மறுத்தபோது, வாயின் கசப்பு மாற வெற்றிலையும் பாக்கும் மட்டும் தாயிடம் கேட்டு வாங்கினான்.
அன்று இரவு, தனது பிள்ளைகளுக்கும் உள்ளே இருந்த ஏனையோருக்கும் அந்தத் தாய் வாங்கி அனுப்பிய ஏழு சோற்றுப் பார்சல்களையும், கம்பிகளுக்கு ஊடாக நீட்டி வாங்கியது குணசீலனின் கைதான்.
பொலிஸார் தங்களின் பிள்ளைகளைப் பிடித்துச் செல்லும்போது, தமிழ்த் தாய்மார்கள் செய்யும் முதலாவது காரியம் அவர்களுக்கு உணவளிப்பதும், உள்ளே இருப்பவர்களைக் கணக்கெடுத்து மனதில் ஒரு பட்டியலை உருவாக்குவதும்தான்;
ஏனெனில் பொலிஸார் அதனை ஒருபோதும் நேர்மையுடன் செய்ய விரும்பமாட்டார்கள்.
அன்று மாலை ஐந்து மணிக்குத் தாய் நீதிகேட்டபோது, “விடுதலைப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கிவிட்டோம், ஐந்து மணிக்கு விட்டிடுவோம்” என்றனர்.
இரவு ஏழு மணிக்கு மீண்டும் அவர் தன் மகனைக் கேட்டபோது, அங்கிருந்த பொலிஸ் அதிகாரி மிகவும் அலட்சியமாகத் திமிருடன் கூறிய வார்த்தை அந்தத் தாயின் நெஞ்சில் இன்றும் ஈட்டியாகப் பாய்கிறது:
“ஆடு மாடுகளை அடைத்து வைப்பது போலத்தான் இவர்களையும் அடைத்து வைத்துள்ளோம்; இருட்டிய பின்னர் அடைப்பைத் திறந்து வெளியே அனுப்ப இது என்ன தொழுவமா? காலையில் வாருங்கள்” என்றார்..
அதை நம்பித் தாய் வீடு திரும்பிய அன்றிரவு நள்ளிரவில், பலத்த பாதுகாப்பு முற்றுகை நிலவிய வேளையில், பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்த நான்கு ஆயுததாரிகள் இருவரின் கண்களையும் வாயையும் துணியால் கட்டி, ஒரு வாகனத்தில் கடத்திச் சென்றனர்.
அடுத்த நாள் காலையிலிருந்து பொலிஸாரின் கதைகள் நேரத்துக்கு நேரம் மாறின. கொழும்புக்கு அனுப்பிவிட்டோம், உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டார்கள், விசா எடுத்து வெளிநாடு சென்று விட்டார்கள் என அவர்கள் பொய் உரைத்தனர்.
பொலிஸாரின் இந்த மாற்றி மாற்றிக் கூறிய பதில்களால் ஆத்திரமடைந்த குணசீலனின் மூத்த மகன், “இரவோடு இரவாகவா இவர்களுக்கு விசா கொடுத்தீர்களா?” என்று பொலிஸாரைப் பார்த்துக் கோபத்துடன் கேட்டான்.
அதைக் கண்டு பதறிய தாய், “அவர்கள் உன்னை அடித்தால் இன்னும் பெரிய ஆபத்து வந்துவிடும் மகனே, சத்தத்தை உயர்த்தாதே” என்று அழுதுகொண்டே அவனது கையைப் பிடித்துப் பின்னுக்கு இழுத்தாள்.
* கடல் செய்த கொடூரக் கருணையும் சிதைக்கப்பட்ட உடல்களும்–
ஒக்ரோபர் 9 ஆம் திகதி மாலை, காத்தான்குடி, பாலமுனை கடற்கரையில் இருந்து இரு சடலங்கள் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்தன.
தாய் ஓடிச்சென்று பார்த்தபோது அங்கே சித்திரவதையின் உச்சக்கட்டம் அரங்கேறியிருந்தது.
தோடக் காணி எல்லைகளுக்கும் இராணுவ முகாம்களுக்கும் பயன்படுத்தப்படும் ஒரு கனமான கொங்றீட் வேலித் தூணின் இருபுறமும் இருவரினதும் உடல்கள் பச்சையும் நீலமும் கலந்த நைலோன் கயிற்றால் கால்களோடு சேர்த்துப் பிணைக்கப்பட்டிருந்தன.
அவர்களின் தலைகள் மொட்டையடிக்கப்பட்டு, கழுத்துகளில் மெல்லிய தொலைபேசிக் கம்பிகள் முறுக்கிக் கட்டப்பட்டிருந்தன.
குணசீலனின் பற்கள் உடைக்கப்பட்டு, முகம் அடித்துச் சிதைக்கப்பட்டிருந்ததால் தாயால் அவனது முகத்தை அடையாளமே காண முடியவில்லை.
“அம்மா, இது தம்பி உடுத்தியிருந்த காற்சட்டை” என்று மூத்த மகன் காட்ட, மகனின் கையில் அடையாளமாக இருந்த அந்த நான்கு கைரேகைகளை உற்றுப்பார்த்து, அது தன் பிள்ளைதான் என்பதை உறுதிசெய்துகொண்டே அந்தத் தாய் நெஞ்சு வெடித்துக் கதறியழுதாள்.
அவளது தவிப்புக்கு மத்தியில், அருகில் கிடந்த குகதாஸின் வயிறு கொடூரமாகக் கிழிக்கப்பட்டிருந்தது.
மரண விசாரணையில், இருவருமே கொடூரமான சித்திரவதையினால் (Assault) உயிரிழந்ததாக மருத்துவ அறிக்கை கூறியது.
இன்னும் கொடுமை என்னவென்றால், அன்றைய தினம் தாய் பாசத்துடன் கொடுத்தனுப்பிய சோறும் கீரையும் ஜீரணம் ஆகாமல் அப்படியே அவனது வயிற்றில் இருந்தது; அதாவது சாப்பிட்ட சில மணி நேரங்களிலேயே அவர்கள் கொல்லப்பட்டிருந்தனர் என்பது தெரிந்தது.
சடலங்கள் பொலித்தீன் பைகளில் வந்ததால், ஒரு நாள் கூட வீட்டில் வைக்க முடியாமல் அன்றே அடக்கம் செய்யப்பட்டன.
* இலங்கை நீதித்துறையின் பக்கச்சார்பும் ‘விலைபேசப்பட்ட நீதியாக மாறிய தீர்ப்பும்’–
பாதிக்கப்பட்ட குடும்பங்களும் மட்டக்களப்பு அமைப்புக் குழுப் பெண்களும் இணைந்து நடத்திய தொடர் போராட்டத்தின் விளைவாக, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் பகிரங்க மரண விசாரணை (B/974/08) நடைபெற்றது.
சடலங்கள் மீட்கப்பட்ட அன்று ஐந்து கைதிகள் மாத்திரமே இருப்பதாகக் கூறிய பொலிஸாரின் பொய்யை மனித உரிமைச் சட்டத்தரணிகள் உடைத்தனர்.
அத்துடன், ஒக்ரோபர் 3, 4 ஆம் திகதிகளில் பொலிஸ் நிலையத்திற்குள் யார் யார் இருந்தார்கள் என்பதைக் காட்டும் ஒரே சான்றான ‘வாசல் கதவுப் பதிவேட்டை’ (Gate Register) பொலிஸார் திட்டமிட்டு மறைத்து, அது “காணாமல் போய்விட்டது” என்றனர்.
நீதவான் இதனைப் பெருத்த சந்தேகத்திற்குரியது எனக் கூறி, விசாரணையை உள்ளூர் பொலிஸாரிடமிருந்து எடுத்து, கொழும்பில் உள்ள உயர்மட்டப் புலனாய்வுப் பிரிவிற்கு (CID) மாற்றுமாறு உத்தரவிட்டார்.
இதனால், கொழும்பிலிருந்து திரும்பிய மனித உரிமை ஆர்வலர்களுக்கும் சட்டத்தரணிகளுக்கும் கொலை அச்சுறுத்தல்களும் விடுக்கப்பட்டன.
அடுத்து, பெற்றோரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் வழக்கில் (SC/FR/512 & 513/2008), எட்டு ஆண்டுகள் கழித்து 2017 ஜூன் 22 ஆம் திகதி இலங்கையின் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த வழக்கானது சட்டம் அமுலாக்கத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும், அருவருப்பான அத்தியாயத்தை வெளிப்படுத்தியுள்ளது.
அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள், சட்டம் ஒழுங்குகளைப் பேணும் அதிகாரிகளின் காலின்கீழ் மிதிபடுவதை அனுமதிக்க முடியாது” என நீதியரசர் அனில் குணரத்ன காரசாரமாக எச்சரித்து எழுதினார்.
ஆனால், இங்குதான் இலங்கை நீதித்துறையின் கட்டமைக்கப்பட்ட பக்கச்சார்பும் அநீதியும் வெளிப்படுகிறது.
உயர் நீதிமன்றம் இந்தத் துயரத்தை ஒப்புக் கொண்டாலும், அது ஒரு சிவில் பரிகாரமாக (Civil Remedy) வெறும் ஒரு தொகைப் பணத்தை இழப்பீடாக மட்டும் நிர்ணயித்து விட்டுத் தன் வழக்குக் கோவையை மூடிக்கொண்டது.
அத்துடன் அந்தக் கொலையாளிகளைக் கண்டறிந்து, அவர்கள் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்து தண்டிக்க எவ்வித உத்தரவையும் பிறப்பிக்கவுமில்லை.
இலங்கை அரச கட்டமைப்பு இத்தகைய படுகொலைகளுக்குப் பொறுப்புக் கூறுவதைத் தவிர்த்து, பணத்தைக் கொடுத்துப் பாதிக்கப்பட்டவர்களின் மௌனத்தை விலைக்கு கொள்வனவு செய்யவே முற்பட்டது.
ஆனால் இங்கே வேடிக்கை என்னவென்றால், அன்று இலங்கை நீதித்துறையின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குட்படுத்தி, அதன் சீர்கேடுகளைச் சுட்டிக்காட்டி இத்தீர்ப்பை எழுதிய உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் அனில் குணரத்னவை, ஜே.வி.பி.யை மையப்படுத்திய தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கவுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
அவரால் அன்று ‘அருவருப்பானது’ என வர்ணிக்கப்பட்ட இந்தக் கொடூரக் குற்றத்திற்கு, இத்தனை தசாப்தங்களாகக் குற்றவியல் ரீதியாக ஒருவர் கூடத் தண்டிக்கப்படாத நிலையில், இவ்வாறான உத்தியோகபூர்வ நியமனங்கள் குறித்த செய்திகள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு மேலும் ஒரு கசப்பான ஏமாற்றத்தையே தருகின்றன.
மாற்றத்தைக் கொண்டு வருவதாகக் கூறும் புதிய அரசாங்கங்களும் நீதியரசர்களுக்கு உயர் பதவிகளை வாரி வழங்குவதில் காட்டும் அக்கறையை, தமிழர்களின் கொலையாளிகளைத் தண்டிப்பதில் காட்டுவதில்லை.
நீதவான் உத்தரவிட்டு பதினெட்டு ஆண்டுகள் கடந்தும், உயர் நீதிமன்றத் தீர்ப்பு வந்து ஒன்பது ஆண்டுகள் கடந்தும், இந்த அரச படுகொலைக்காக ஒருவர்கூட கூண்டில் நிறுத்தப்படவில்லை, எவரும் தண்டிக்கப்படவும் இல்லை.
இதுவே இலங்கையில் நிலவும் “தண்டனையிலிருந்து தப்பிக்கும்” (Impunity) கட்டமைக்கப்பட்ட நீதி மறுப்பாகும்.
* வடக்கு, கிழக்கு தாய்மார்களின் அவல நிலை–
இச் சம்பவத்தின் மையத்தில் இருக்கும் கொடூரமான உண்மை என்னவென்றால், வலம்புரித் தாய்மார்களுக்குக் கடல் அவர்களது பிள்ளைகளின் உடல்களையாவது திருப்பிக் கொடுத்தது தான்.
அந்தக் கனமான கொன்கிரீட் தூணுடன் இவர்களின் உடல்களைப் பிணைத்துக் கடலில் மூழ்கடித்தவர்கள், இந்த இருவரும் இலங்கையின் ‘காணாமல் ஆக்கப்பட்டோரின்’ நீண்ட பட்டியலில் வெறும் பெயர்களாக மட்டுமே எஞ்சி அழிய வேண்டும் என்றே அன்று திட்டமிட்டனர்.
ஆனால், கடல் அந்த அநீதியைத் தன்னுள் மறைக்க மறுத்து, அந்தத் தூணோடு சேர்த்தே அவர்களின் உடல்களைக் கரைக்குத் தள்ளியது. இதன் மூலம் அவர்களுக்கு ஒரு கல்லறையும், ஆண்டுதோறும் அழுது தீர்க்க ஒரு நாளும் கிடைத்தது.
அரசின் இந்த மூடிமறைப்புகளுக்கு எதிராகப் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மட்டக்களப்பு அமைப்புக் குழுவினருடன் இணைந்து, தங்களின் அடிப்படை உரிமைகளுக்காக இலங்கையின் உயர் நீதிமன்றத்தை நோக்கி நீண்டதொரு சட்டப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதன் காரண – காரியமாக, இந்தச் சட்டவிரோதக் கைதுக்கும் கொடூர மரணத்திற்கும் பொலிஸாரே “முழுப் பொறுப்பு” எனத் தீர்ப்பளித்த நீதிமன்றம், அரசு ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 10 இலட்சம் ரூபாயும், மட்டக்களப்பு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டி. சாந்த விக்ரமசிங்க தன் சொந்தப் பணத்திலிருந்து தலா 50,000 ரூபாயும் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டது.
அத்துடன், “பொறுப்பதிகாரி தனியாக இந்தத் தவற்றைச் செய்திருக்க முடியாது; இதன் பின்னணியில் ஒரு வலையமைப்பு உள்ளது” என்றும் நீதியரசர் தனது தீர்ப்பில் பதிவு செய்தார்..
* வடக்கு, கிழக்கு தாய்மார்களின் அவல நிலை —
வடக்கு – கிழக்கு எங்கும் பல்லாயிரக்கணக்கான தாய்மார்கள், தங்களின் கடத்தப்பட்ட பிள்ளைகளின் படங்களை ஏந்தியபடி இன்றும் காரியாலயங்களின் வாசல்களிலும் வீதிகளிலும் காத்துக் கிடக்கிறார்கள்.
தங்களின் பிள்ளைகள் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்ற நிச்சயத்தன்மை இல்லாததால், அவர்களால் பிள்ளைகளுக்கான இறுதி நினைவுச் சடங்குகளைக் கூட அதாவது திதி, அஞ்சலி ஆகியவற்றைக் கூடச் செய்ய முடிவதில்லை.
அதைச் செய்தால் பிள்ளைகள் இறந்துவிட்டதாக அவர்களாகவே பிரகடனப்படுத்துவது போலாகிவிடும் என்ற பெரு வேதனையுடன் அவர்கள் வாழ்கிறார்கள்.
இந்தக் காத்திருப்பு அவர்களுக்கு ஒரு மரணப் பெருந்துயரைக் கொடுக்கிறது. கடலில் வீசப்பட்ட உடல் மீட்கப்பட்டு, அதற்கு ஒரு கல்லறை கிடைத்ததே இங்கு ஒரு பெரிய “அதிர்ஷ்டமாகப்” பார்க்கப்படுகிறது என்றால், அதுவே இலங்கை அரசு தமிழ்த் தாய்மார்களுக்குச் செய்துள்ள அநீதியின் உச்சக்கட்ட அளவுகோலாகும்.
* துணை இராணுவக் குழுக்களின் கொலை இயந்திரம்–
2008 ஆம் ஆண்டு என்பது, கிழக்கு மாகாணம் “விடுவிக்கப்பட்டதாக” அரசாங்கம் அறிவித்த ஆண்டாகும்.
விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து, பாதுகாப்புப் படைகளுடன் இணைந்து செயற்பட்ட ‘பிள்ளையான்’ எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) என்ற துணை இராணுவக் குழு, மட்டக்களப்பைத் தனது முழுப் கட்டுப்பாட்டில் வைத்திருந்த காலப்பகுதி இதுவேயாகும்.
மிகச் சமீபத்தில், 2026 ஜூன் 15 ஆம் திகதி, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பிள்ளையான் மற்றும் “பொலிஸ் பயாஸ்” உள்ளிட்ட அவர்களுடைய கூட்டாளிகளுக்கு எதிராக, 2008 இல் காத்தான்குடி பள்ளிவாசலுக்கு அருகில் நடந்த படுகொலைகள் உட்பட ஐந்து கொலைக் குற்றச்சாட்டுகள் இதே மட்டக்களப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
ஒரு பொலிஸ் காவலர் உட்பட 17 பேரைக் கொண்ட இந்த ஆயுதமேந்திய குழு, மக்களை அச்சுறுத்தவும், பணம் பறிக்கவும், கொலைகளைச் செய்யவும் ஒரு இயந்திரம் போலப் பயன்படுத்தப்பட்டதாகச் சாட்சியங்கள் விவரிக்கின்றன.
இருப்பினும், இந்த ஐந்து கொலைகளுடன் ஒரு ஆயுத வலையமைப்பை இணைக்கும் அரசும் அதன் குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் (CID), உயர் நீதிமன்றமே குற்றவாளி எனக் கண்டறிந்த வலம்புரிச் சிறுவர்களின் படுகொலைக்கான வழக்குக் கோப்பை இன்னும் திறக்கவே இல்லை.
எவ்விதக் குற்றச்சாட்டுகளும் இதுவரையில் தாக்கல் செய்யப்படவுமில்லை.
ஒரு மில்லியன் ரூபாய் பணத்தைக் கொடுத்ததோடு தன் கடமை முடிந்தது என அரசு மௌனம் காக்கிறது.
ஆனால், வலம்புரித் தாய்மார்கள் தங்களது நீதிக்கான கேள்வியைப் பணத்திற்காக விற்கவில்லை.
குணசீலனின் தாய் இன்றும் அதே பொலிஸ் நிலைய வாசலின் கதவைப் பார்த்து, அன்று தங்களை விரட்டியடித்த மனிதர்களை நோக்கி அக்கேள்வியைத் திருப்பிக் கேட்கிறார்: “நாங்கள் என்ன ஆடுகளா, மாடுகளா?”
அநீதியை மூடிமறைக்க நினைக்கும் அரசுகளும், காலத்தைக் கடத்தும் நீதியரசர்களும் மாறலாம்; ஆனால், தங்களின் இரத்தத்தின் நீதிக்காக இன்றும் பொலிஸ் நிலைய வாசல்களிலும் வீதிகளிலும் காத்துக்கிடக்கும் இந்தத் தாய்மார்களின் நீதிக்கான கேள்விகள் ஒருபோதும் விற்கப்படப் போவதில்லை.
ஈழ மண்ணின் உண்மையான நீதி என்பது அதிகாரத்தின் விற்கப்பட்ட தீர்ப்புகளில் இல்லை; அது இந்தத் தாய்மார்களின் ஓயாத போராட்டக் குரல்களிலேயே என்றென்றும் நிலைத்திருக்கப் போகிறது.
பிற்குறிப்பு
இவ்வலம்புரிப் படுகொலைகளுடன் நேரடியாகத் தொடர்புபடுத்தித் தேடப்படும் முக்கிய சந்தேக நபரான “பொலிஸ் பயாஸ்” என்று அழைக்கப்படும் றாசிக் முகமது பயாஸ், தற்போது தனது குடும்பத்துடன் இலங்கையை விட்டுத் தப்பி ஓடி, லண்டனில் வசித்து வருவதாக நம்பப்படுகிறது.இருப்பினும், 2008 இல் மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடிப் பகுதிகளில் பிள்ளையான் குழுவினரால் அரங்கேற்றப்பட்ட மாற்று ஐந்து படுகொலைச் சம்பவங்கள் தொடர்பாக, சென்ற ஜூன் மாதம் 15 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் புதிய குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இவ்வழக்கில் அவர் முதலாவது சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ளதுடன், சர்வதேசப் பொலிஸார் (Interpol) ஊடாக அவரைக் கைது செய்வதற்கான பகிரங்க சிவப்பு அறிவித்தல் (Red Notice) பிடியாணையைப் பிறப்பிக்குமாறு நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளது.
நன்றி
தமிழில் அமரன்