• Sun. May 17th, 2026

24×7 Live News

Apdin News

கனடாவின் புதிய குடியியல் சட்டம்: இலட்சக்கணக்கான அமெரிக்கர்களுக்கு இரட்டைக் குடியுரிமை பெற வாய்ப்பு!

Byadmin

May 17, 2026


கனடா அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய குடியியல் சட்டத்தின் கீழ், கனடிய மூதாதையர்களைக் கொண்ட பல அமெரிக்கர்கள் இனி கனடாவின் இரட்டைக் குடியுரிமையைப் பெறத் தகுதியாளர்களாகியுள்ளனர். இந்த புதிய நடைமுறை, குறிப்பாக அமெரிக்காவில் வாழும் கனடிய வேர்களை உடைய குடும்பங்களுக்கு பெரும் வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

புதிய சட்டத்தின் படி, 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் திகதிக்கு முன் பிறந்த ஒருவர், தமக்கு கனடிய மூதாதையர் ஒருவர் இருப்பதை ஆதாரங்களுடன் நிரூபிக்க முடிந்தால், “மூதாதை வழிக் குடியுரிமை” சட்டத்தின் கீழ் தானாகவே கனடியக் குடியுரிமைக்கு தகுதி பெறுவார். அவர்கள் எங்கு பிறந்திருந்தாலும், அல்லது அவர்களது பெற்றோர், தாத்தா-பாட்டி கனடாவில் வாழ்ந்திருக்காவிட்டாலும் இந்த உரிமை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்டம் பிறப்பின் மூலமாகவும், தத்தெடுப்பின் மூலமாகவும் குடும்ப உறவு கொண்ட குழந்தைகளுக்கும் பொருந்தும். தகுதியுடையவர்கள், முதலில் கனடியக் குடியுரிமைக்கான ஆதாரச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் அந்த ஆதாரம் கிடைத்தவுடன் கனடியப் பாஸ்போர்ட்டிற்கும் விண்ணப்பிக்கலாம்.

இந்த மாற்றத்தின் மூலம், குறிப்பாக அமெரிக்காவின் நியூ இங்கிலாந்து பகுதியில் வாழும் ஏறத்தாழ மூன்று மில்லியன் அமெரிக்கர்கள் கனடியக் குடியுரிமைக்குத் தகுதி பெறக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இவர்களில் பலரது முன்னோர்கள் 1870 முதல் 1930 வரையிலான காலகட்டத்தில் கனடாவிலிருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.

இரட்டைக் குடியுரிமை பெற்றவர்களுக்கு, அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளிலும் சட்டபூர்வமான உரிமைகள் மற்றும் சலுகைகள் கிடைக்கும். அதேநேரத்தில், கனடாவுக்குள் சுதந்திரமாக நுழைவதற்கும், விரும்பினால் அங்கு நிரந்தரமாக குடியேறுவதற்குமான உரிமையும் வழங்கப்படும். மேலும், கனடியப் பாஸ்போர்ட் உலகளாவிய பயண சுதந்திரத்தில் அதிக வாய்ப்புகளை வழங்குவதால், அதுவும் ஒரு முக்கிய நன்மையாக பார்க்கப்படுகிறது.

குடியுரிமைக்கான ஆதார விண்ணப்பத்தின் போது, கனடிய மூதாதையரின் பிறப்புச் சான்றிதழ்கள், திருமுழுக்கு பதிவுகள் உள்ளிட்ட குடும்ப உறவை நிரூபிக்கும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். தற்போதைய நிலவரப்படி, இந்த விண்ணப்பங்களின் செயலாக்க காலம் சுமார் 11 மாதங்களாக உள்ளது.

மேலும், கனடியக் குடியுரிமை பெறுவதால் உடனடியாக எந்த வருமான வரிப் பொறுப்பும் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைப் போல குடியுரிமை அடிப்படையில் அல்லாமல், கனடாவில் வசிப்பிடம் அடிப்படையிலேயே வரி விதிக்கப்படுகிறது. எனவே, கனடாவில் வசிக்காதவர்களோ, அங்கு வணிகம் அல்லது சொத்து வைத்திராதவர்களோ கனடிய வருமான வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை.

இந்த புதிய நடைமுறை, “பில் C-3” என்ற சட்டத்தின் மூலம் 2025 டிசம்பர் 15 முதல் அமலுக்கு வந்தது. இதற்கு முன்பு, கனடியக் குடியுரிமை வெளிநாட்டில் பிறந்த முதல் தலைமுறையினருக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. 2009ஆம் ஆண்டு அறிமுகமான இந்த வரம்பு, 2023 இல் நீதிமன்றத்தால் அரசியலமைப்பிற்கு முரணானது என அறிவிக்கப்பட்டதையடுத்து, புதிய சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது.

புதிய திருத்தத்தின் கீழ், 2025 டிசம்பர் 15 க்கு பிறகு வெளிநாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு, அவர்களின் கனடியப் பெற்றோர் குறைந்தது மூன்று ஆண்டுகள் கனடாவில் வாழ்ந்திருக்க வேண்டும் என்ற “கணிசமான தொடர்பு” நிபந்தனை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

By admin