• Tue. Jul 7th, 2026

24×7 Live News

Apdin News

கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து மும்பையில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை

Byadmin

Jul 7, 2026


இந்திய வானிலை ஆய்வு மையம் மிக கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் என முன்னறிவிப்பு விடுத்ததை தொடர்ந்து, பிருஹன் மும்பை மாநகராட்சி, மும்பையில் உள்ள அனைத்து அரசு, மாநகராட்சி மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (ஜூலை 7) விடுமுறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு பதிவில், பலத்த காற்றுடன் கூடிய மிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரித்து, இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இன்று (செவ்வாய் கிழமை) மும்பை பெருநகர பகுதிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளதாக பி.எம்.சி. தெரிவித்துள்ளது.

விடுமுறை:

இதை கருத்தில் கொண்டும், மாணவர்களின் பாதுகாப்பு கருதியும், மும்பையில் உள்ள அரசு, தனியார், மாநகராட்சி பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மோசமான வானிலை முன்னறிவிப்பை காரணம் காட்டி, அத்தியாவசிய தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்குமாறு மாநகராட்சி குடிமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று கன முதல் மிக கனமான மழை பெய்யக்கூடும் என்றும், மழையுடன் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிககை விடுத்துள்ளது.

அவசர உதவி எண்:

அவசர உதவிக்கோ அல்லது மழை தொடர்பான பிரச்சனைகளை புகாரளிக்க அவசர எண் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் 1916 என்ற எண்ணை அழைக்கலாம் என்று பி.எம்.சி.-இன் 24 மணி நேர உதவி எண்ணை தொடர்புகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது பெய்து வரும் கனமழை காலம் முழுவதும் குடியிருப்பாளர்களுக்கு உதவுவதற்காக இந்த உதவி எண் தொடர்ந்து செயல்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கனமழை காரணமாக மாநிலம் முழுவதும் 17 தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மகாராஷ்டிர தகவல் மற்றும் மக்கள் தொடர்பு இயக்குநரகம் தெரிவித்துள்ளது. லோனாவாலாவில் 670 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக அது மேலும் கூறியுள்ளது.

By admin