படக்குறிப்பு, மலையாள நடிகர் மோகன்லால் தன்வசம் உள்ள யானை தந்தங்கள் பற்றி வனத்துறையிடம் தகவல் அளித்துள்ளார். கட்டுரை தகவல்
மலையாள நடிகர் மோகன் லால் தன்வசம் 10 யானை தந்தங்களும் மற்றும் 13 தந்தத்தாலான சிலைகளும் இருப்பதாக கேரள வனத்துறையிடம் தெரிவித்துள்ளார்.
காட்டுயிர் சம்பந்தப்பட்ட பொருட்களை வைத்திருப்பவர்கள் தாமாக முன்வந்து அறிவிப்பது தொடர்பாக கேரள வனத்துறை வெளியிட்ட அறிவிப்பின் கீழ் நடிகர் மோகன்லால் இந்த விவரங்களை வெளியிட்டுள்ளார்.
யானை தந்தங்களை வைத்திருந்ததற்காக நடிகர் மோகன்லால் ஏற்கெனவே வழக்கைச் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே தற்போது வனத்துறையிடம் சமர்ப்பித்த புதிய விண்ணப்பத்தில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டிருந்தவை போக அவர் வசம் கூடுதலாக 6 யானை தந்தங்கள் வைத்திருப்பதும் தெரியவந்துள்ளது. இந்தத் தகவலை கேரள வனத்துறையும் உறுதி செய்துள்ளது.
பின்னணி என்ன?
கடந்த 2011-ஆம் ஆண்டு நடிகர் மோகன்லாலுக்கு சம்மந்தப்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். ஆனால் அந்தச் சோதனையின் ஒரு பகுதியாக அவர் வசம் யானை தந்தங்களும் மற்றும் தந்தத்தாலான சிலைகளும் இருப்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து கேரள வனத்துறையினர் சட்டவிரோதமாக யானை தந்தங்களை வைத்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். எர்ணாகுளத்தில் உள்ள நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கு தற்போதும் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே 2015-ஆம் ஆண்டு கேரள வனத்துறை, காட்டுயிர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி காட்டு விலங்குகளுடன் தொடர்புடைய பொருட்களை வைத்திருப்பவர்கள் அது தொடர்பான தகவல்களை வனத்துறையிடம் தெரிவிக்க அவகாசம் கொடுக்கப்பட்டது.
பட மூலாதாரம், X/Mohanlal
படக்குறிப்பு, 2011-ஆம் வருமான வரித்துறை சோதனையில் தந்தங்கள் இருப்பது தெரியவந்தது.
அந்த அறிவிப்பின்படி மோகன்லால் தன் வசம் உள்ள காட்டுயிர் பொருட்களுக்குச் சான்று பெற விண்ணப்பித்திருந்தார். அதனைத் தொடர்ந்து வனத்துறை சார்பில் அவருக்கு சான்றிதழ் கொடுக்கப்பட்டது. ஆனால் இதற்கு எதிராக சூழலியல் ஆர்வலர்கள் மற்றும் வனத்துறை முன்னாள் அதிகாரிகள் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது
இதற்கிடையே கடந்த 2020-ஆம் ஆண்டு மோகன்லால் மீதான வழக்கை கைவிடுவதாக கேரள அரசு விசாரணை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. ஆனால் அந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்தது.
இந்த நிலையில் மோகன்லாலுக்கு கேரள வனத்துறை வழங்கிய சான்றிதழை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம் உரிய சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை எனக் கூறி சான்றிதழை ரத்து செய்தது.
ஆனால் உரிய நடைமுறைகளைப் பின்பற்றி வனத்துறை மீண்டும் புதிய அறிவிப்பை வெளியிடலாம் எனவும் தெரிவித்திருந்தது.
இதன் அடிப்படையில் தான் கேரள வனத்துறை கடந்த மார்ச் மாதம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
பட மூலாதாரம், Martin Harvey/Getty images
சட்ட விதிகள் சொல்வது என்ன?
இந்தியாவில் காட்டுயிரினங்கள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாத்து அவை வேட்டையாடப்படுவதை தடுப்பதற்காக 1972 காட்டுயிர் பாதுகாப்பு சட்டம் மத்திய அரசால் இயற்றப்பட்டிருந்தது. இந்த சட்டத்தின் அடிப்படையில் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்தச் சட்டத்தில் காட்டுயிரினங்கள் அட்டவணை வாரியாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதில் முதலாம் அட்டவணையில் அழிவின் விளிம்பில் உள்ள விலங்குகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த விலங்குகளை வேட்டையாடுவது மற்றும் கொல்வது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது.
அதே போல் இந்தச் சட்டத்தின் பிரிவுகள் காட்டு விலங்குகளுடன் தொடர்புடைய பொருட்களை (யானையின் தந்தம் போன்றவை) வைத்திருப்பது பற்றியும் குறிப்பிடுகின்றன. இந்தச் சட்டத்தின்படி அவற்றை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.
அந்தப் பொருட்களை வைத்திருப்பவர்கள் வனத்துறையிடம் தகவல் தெரிவிப்பது அவசியமானதாகிறது. அதோடு தனிநபர் வசம் இருக்கும் காட்டுயிர் பொருட்களை ஆவணப்படுத்துவது, சான்றளிப்பது மற்றும் தண்டனை அல்லது சட்ட நடவடிக்கைகளில் இருந்து விடுவிப்பது ஆகியவை தொடர்பாகவும் இந்தச் சட்டம் விளக்குகிறது.
இந்த அறிவிப்பு, “விலங்கு சார்ந்த தங்கள் கட்டுப்பாட்டிலோ, பாதுகாப்பிலோ அல்லது உடைமையிலோ வைத்திருப்பவர்கள் அவற்றை அறிவிப்பதற்கு மேலும் ஒரு வாய்ப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், Libin Jose/Getty Images
உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களைத் தொடர்ந்து மார்ச் மாதம் வனத்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி மோகன்லால் மீண்டும் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள மலையாட்டூர் மண்டல வன அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
மோகன்லால் உடன் சேர்த்து மலையாட்டூர் மண்டல வன அலுவலகத்தில் மொத்தம் 57 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக வன அதிகாரி கார்த்திக் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
விண்ணப்பத்திற்கான கால அவகாசம் முன்பே முடிந்துவிட்டது. இந்தச் சூழலில் தற்போது இந்த தகவல் எப்படி வெளிவந்தது என்பதைச் சுற்றி பல்வேறு கேள்விகள் எழுந்தன.
அதற்கான விளக்கத்தை மண்டல வன அதிகாரி கார்த்திக் வழங்கினார். “வனத்துறையின் அறிவிப்பின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்கள் தொடர்பாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அதில் கொடுக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தான் இந்தத் தகவல் ஊடகங்களுக்கு வெளிவந்துள்ளது.” என்றார்.
முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டபோது மோகன்லால் வசம் 4 யானை தந்தங்கள் இருந்ததாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது கூடுதலாக 6 யானை தந்தங்களுடன் சேர்த்து மொத்தம் 10 யானை தந்தங்கள் தன்வசம் இருப்பதாக அவர் தெரிவித்திருப்பது விவாதப் பொருளாகியிருக்கிறது.
காட்டுயிர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இரண்டு சூழல்களில் மட்டுமே காட்டுயிர் பொருட்களை வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது என்றார் கார்த்திக்.
“ஒன்று 1972 சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பாக அந்தப் பொருட்கள் அவர்கள் வசம் இருந்திருக்க வேண்டும் அல்லது பரம்பரைச் சொத்தாக அவர்களுக்கு கிடைத்திருக்க வேண்டும். இந்த அறிவிப்பால் சட்ட நடவடிக்கைகள் எதுவும் தடைபடாது. தற்போது பட்டியல் மட்டுமே தயாரித்து வருகிறோம். அடுத்து டி.என்.ஏ பரிசோதனை உள்ளிட்ட பல கட்டங்கள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் தங்கள் வசம் உள்ள ஆவணங்களை, இதுவரை சமர்ப்பிக்கப்படாத ஆதாரங்களைச் சமர்ப்பிக்கலாம். இவை சட்டப்பூர்வமாகத் தான் பெறப்பட்டது என்பதை அவர்கள் நிருபிக்க வேண்டும். வனத்துறை விசாரணை முடிந்த பிறகு தலைமை காட்டுயிர் காப்பாளர் தான் இறுதி முடிவெடுப்பார். இது முதல் கட்டம் மட்டுமே. அடுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது அரசாங்கம் முடிவெடுக்கும். தற்போதைக்கு எதுவும் தீர்மானிக்கப்படவில்லை.” என்றார்.
பட மூலாதாரம், X/keralaforestdep
வழக்கிலிருந்து ஒருவரை விடுவிக்க முடியுமா?
இந்த அறிவிப்பு பற்றி பல தவறான புரிதல்கள் இருப்பதாகக் கூறுகிறார் கேரள வனத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர்.
பெயர் குறிப்பிட வேண்டாம் என்கிற நிபந்தனையுடன் பிபிசி தமிழிடம் பேசிய அவர், “முதலாவதாக அரசாங்கத்தின் அறிவிப்பு, மக்கள் தங்கள் வசம் உள்ள காட்டுயிர் சம்மந்தப்பட்ட அனைத்து பொருட்களையும் அறிவிக்க வேண்டும் என்பது தான். மக்கள் அறிவித்த உடனே அவை அரசாங்கத்தால் சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படதாகவோ அல்லது சான்றழிக்கப்படதாகவோ ஆகாது.
அதன்பிறகு வனத்துறை அதிகாரிகள் நேரில் சென்று அந்தப் பொருட்களை ஆய்வு செய்து அவை பாரம்பரியமாக அவர்களின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளதா அல்லது சட்டவிரோத வழிகளில் பெறப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்வார்கள்.
வழக்குகளை எதிர்கொள்பவர்கள் மட்டுமல்ல இதுவரை வழக்குப் பதியப்படாதவர்கள் கூட தாமாக முன்வந்து ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. வனத்துறையின் விசாரணைக்குப் பிறகு அடுத்தக்கட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகள் பற்றி அரசாங்கம் ஆராய்ந்து முடிவெடுக்கும்.
வனத்துறையிடம் பதிவு செய்த உடனே யாரும் சட்ட நடவடிக்கைகளில் இருந்து விடுவிக்கப்பட மாட்டார்கள். காட்டுயிர் பாதுகாப்பு சட்டத்தில் அதற்கான ஷரத்துகள் இருந்தாலும் மாநில அரசு அதற்காக விதிகளை வகுத்து தனியாக அறிவிப்பு வெளியிட வேண்டும். இது ஒரு நீண்ட நெடிய நடைமுறை. ஒரு வாரம் அல்லது மாதத்தில் முடிந்துவிடுவதல்ல.” என்றார்.