• Mon. Oct 5th, 2026

24×7 Live News

Apdin News

கப்டன் மீது தாக்குதல் நடத்திய துணை விமானியின் அவுஸ்திரேலிய தொடர்பு குறித்து விசாரணை!

Byadmin

Oct 5, 2026


டுபாயிலிருந்து இஸ்ரேல் நோக்கி 182 பயணிகளுடன் பயணித்த ஃப்ளைடுபாய் (flydubai) விமானத்தில், சக விமானியை தாக்கி விமானத்தை வீழ்த்த முயன்ற சம்பவத்தில் தொடர்புடைய துணை விமானிக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து, அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்தியாவைச் சேர்ந்த கப்டன் ஸ்மித் மச்சார் செலுத்திய இவ்விமானத்தில், ஓமான் நாட்டைச் சேர்ந்த ஹமாம் அல்-ஹம்மாமி துணை விமானியாகப் பணியாற்றியுள்ளார்.

விமானப் பயணத்தின்போது தொழுகை மேற்கொள்வதற்கு அனுமதி கோரிய ஹமாம், சில நிமிடங்களில் கப்டன் ஸ்மித் மச்சாரின் தலையில் அவசர தேவைகளுக்கான கோடாரியால் பலமுறை பலமாகத் தாக்கியுள்ளார்.

இதனால் கட்டுப்பாட்டை இழந்த விமானம் செங்குத்தாக கீழ்நோக்கி பாய்ந்த நிலையில், பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் உடனடியாகச் செயற்பட்டு குறித்த துணை விமானியைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததால் பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டது.

இச்சம்பவத்தை ஐக்கிய அரபு அமீரகம் ஒரு பயங்கரவாதத் தாக்குதல் என உத்தியோகபூர்வமாக அறிவித்து, விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இதனிடையே, அவுஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு, அந்நாட்டு சமஷ்டி பொலிஸார் மற்றும் விக்டோரியா மாநில பொலிஸார் இணைந்து குறித்த சந்தேகநபரின் பின்னணி குறித்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சந்தேகநபரான ஹமாம் அல்-ஹம்மாமி 2014ஆம் ஆண்டு கல்வி விசாவைப் பெற்று, 2015 முதல் 2017 வரை மெல்பேர்னில் பொறியியல் கல்வி பயின்றுள்ளதாகவும், அவரது விசா 2019ஆம் ஆண்டில் காலாவதியாகியுள்ளதாகவும் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீவிரவாத சித்தாந்தங்களுடன் தொடர்புபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், ஓமான் நாட்டின் தேசிய விமான சேவையான ஓமான் எயார் நிறுவனம் அவரை விமானம் செலுத்தும் பணியிலிருந்து இடைநிறுத்தி, முன்னதாக நிர்வாகப் பிரிவுக்கு மாற்றியிருந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அதன் பின்னரே அவர் ஃப்ளைடுபாய் விமான நிறுவனத்தில் பணியில் இணைந்துள்ளார்.

இஸ்ரேலுக்கும் ஓமானுக்கும் இடையில் உத்தியோகபூர்வ இராஜதந்திர உறவுகள் இல்லாத ஒரு சூழ்நிலையில், இஸ்ரேலிய பிரஜைகள் அதிகம் பயணித்த விமானமொன்றை இயக்க அல்-ஹம்மாமி எவ்வாறு அனுமதிக்கப்பட்டார் என்பது தொடர்பிலும், ஃப்ளைடுபாய் நிறுவனத்தின் பாதுகாப்பு பின்னணி பரிசோதனைகள் குறித்தும் தற்போது பல்வேறு தரப்புகளிலும் கடுமையான கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

சந்தேகநபர் தனித்து இச்செயற்பாட்டை முன்னெடுத்தாரா அல்லது ஏதேனும் சர்வதேச பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்புகளைப் பேணினாரா என்பது குறித்து அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

By admin