மதுரை அருகே உள்ள கீழடியில் கண்டுபிடிக்கப்பட்டதைப் போன்ற ஒரு பண்டைய நகர நாகரீகத்துக்கான ஆரம்பகட்ட ஆதாரங்கள் தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூரில் கிடைத்துள்ளதாக தமிழக தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம், கீழடி (11ஆம் கட்ட அகழாய்வு) உள்பட 8 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. அதில் ஒன்று தான் கரிவலம்வந்தநல்லூர். இது கீழடியில் இருந்து சுமார் 120 கிலோ மீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது.
இங்கு மலையடிப்பட்டி என்ற கிராமத்தில் உள்ள காரிச்சாத்தான் மலையைச் சுற்றியுள்ள பகுதிகளில், அகழாய்வு தொடங்கப்பட்ட 3 மாதங்களிலேயே செங்கற்களால் கட்டப்பட்ட சதுர வடிவ கிணறு போன்ற ஒரு கட்டட அமைப்பு, கண்ணாடி மணிகள், இரும்பு தாதுக்கள், கறுப்பு-சிவப்பு பானை ஓடுகள், முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன. பானை ஓடுகள் மற்றும் ஈமத்தாழிகளில் பொறிப்புகளையும் காண முடிகிறது.
குறிப்பாக செங்கல் கட்டுமானம், கறுப்பு-சிவப்பு பானை ஓடுகள் போன்றவை ‘ரிலேடிவ் டேட்டிங்’ (Relative dating) என்ற முறையில், கீழடி, அழகன்குளம், காவேரிப்பூம்பட்டினம், அரிக்கமேடு போன்ற அகழாய்வுகளில் கிடைக்கப்பெற்ற பொருட்களுடன் ஒத்துப்போவதால், இவை கீழடி நகர நாகரீகத்தைச் சேர்ந்த, அதாவது கி.மு. 6 அல்லது 5ஆம் நூற்றாண்டு எனும் சங்க காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என தமிழக தொல்லியல் துறை தெரிவிக்கிறது.
படக்குறிப்பு, செங்கற்களால் கட்டப்பட்ட சதுர வடிவ கிணறு போன்ற ஒரு கட்டட அமைப்பு
கரிவலம்வந்தநல்லூரின் முக்கியத்துவம்
1930களில் இந்த கரிவலம்வந்தநல்லூரில் 6 ரோமானிய தங்க நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றின் மாதிரிகள் தற்போது திருநெல்வேலியில் உள்ள பொருநை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
புகழ்பெற்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளர் மற்றும் வரலாற்றாசிரியர் ஆர். நாகசாமி தொகுத்த, ‘சௌத் இந்தியன் ஸ்டடீஸ்’ (South Indian Studies) என்ற நூலின் ஒரு கட்டுரையில், ‘மெட்ராஸ் மாகாணத்தின், தின்னவேலி (திருநெல்வேலி) மாவட்டத்தில் உள்ள கரிவலம்வந்தநல்லூரில் கிடைத்த ஒரு புதையல்’ குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தப் புதையலில் பின்வரும் பொருட்கள் இருந்தன என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
3.5 செ.மீ விட்டம், 18.901 கிராம் எடை கொண்ட ஒரு தங்கப்பதக்கம்
இரண்டு தங்க மோதிரங்கள்
ஒரு தங்கச் சங்கிலி
நான்கு சிறிய தங்க மணிகள்
ஆறு ரோமானிய நாணயங்கள்: நீரோ காலத்திய இரண்டு (கி.பி. 54-58), வெஸ்பாசியன் காலத்திய ஒன்று (கி.பி. 69-79), டொமிஷியன் காலத்திய இரண்டு (கி.பி. 81-96) மற்றும் ஹாட்ரியன் காலத்திய ஒன்று (கி.பி. 117-138).
இதில் கிடைத்த தங்கப் பதக்கத்தை அடையாளம் காண்பதற்காக, மெட்ராஸ் அரசு அருங்காட்சியகம், லண்டனில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தின் நாணயங்கள் மற்றும் பதக்கங்கள் துறைக்கு 1960ம் ஆண்டு ஜூன் மாதம் அதை அனுப்பியது.
“பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் உள்ள நாணயங்கள் மற்றும் பதக்கங்கள் துறையின் தகவலின்படி, தங்கப் பதக்கம் எகிப்தின் தாலமி II (கி.மு. 284-247) மற்றும் தாலமி X (கி.மு. 117-81) வரையிலான பல்வேறு மன்னர்களைச் சேர்ந்ததாகும்” என பிரிட்டிஷ் நாணயவியல் நிபுணரும் தொல்பொருள் ஆய்வாளருமான ஏ. டி. ஹெச். பிவார் குறிப்பிட்டுள்ளார்.
“இந்த கரிவலம்வந்தநல்லூர், செங்கோட்டை கணவாய் வழியாகச் செல்லக்கூடிய பழமையான வணிகப் பெருவழியில் அமைந்துள்ளது. எனவே இது ஒரு வணிக நகரமாக இருந்திருக்கலாம். பிரிட்டிஷ் காலம் முதலே இதற்கு தொல்லியல் முக்கியத்துவம் உள்ளது” என்கிறார் தமிழ்நாடு தொல்லியல் துறையின் ஆலோசகர், பேராசிரியர் கா.ராஜன்.
பட மூலாதாரம், tamildigitallibrary
படக்குறிப்பு, 1930களில் கரிவலம்வந்தநல்லூரில் கிடைத்த தங்கப்பதக்கம்
தமிழக அரசின் தொல்லியல் துறை கடந்த ஆண்டு ஜூலை மாதம், கீழடி, தூத்துக்குடி மாவட்டம் பட்டணமருதூர், தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர், கடலூர் மாவட்டம் மணிக்கொல்லை, விழுப்புரம் மாவட்டம் ஆதிச்சனூர், கோவை மாவட்டம் வெள்ளலூர், சேலம் மாவட்டம் தெலுங்கனூர் -மாங்காடு மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 8 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள அனுமதி வழங்கக்கோரி மத்திய அரசின் இந்திய தொல்லியல் ஆய்வகத்துக்கு (ஏஎஸ்ஐ) விண்ணப்பித்திருந்தது.
இதற்கு 2026ம் ஆண்டு, மார்ச் மாதம் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து தான் கரிவலம்வந்தநல்லூரில் அகழ்வாய்வு பணிகள் தொடங்கின.
“காரிச்சாத்தான் மலைக்கு தென்புறம் மக்கள் வாழ்விடங்களும், மலைக்கு வடபுறம் ஈமச்சின்னங்களும் கிடைத்துள்ளன. அதிக தகரம் கலந்த வெண்கலத் துண்டு ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆதிச்சநல்லூர், சிவகளை, சாஸ்தாபுரம், திருமலாபுரம் மற்றும் சூலாபுரம் உள்ளிட்ட முதுமக்கள் தாழி அடக்க முறையுடன் தொடர்புடைய தொல்லியல் தளங்களில் அதிக தகரம் கலந்த வெண்கலம் கிடைத்தது” என்கிறார் பேராசிரியர் கா.ராஜன்.
“ஈமத்தாழிகளில் ‘மயில்கள்’ வரையப்பட்டுள்ளன. கரிவலம்வந்தநல்லூர் ஒரு இரும்பு உற்பத்தி மையமாக இருந்திருக்கலாம். ஹேமடைட் (Hematite) இரும்புத் தாதுவுடன் கூடிய இரும்புக் கழிவுகளும் கிடைத்துள்ளன. இந்தத் தளம் நுண்கற்காலத்திலிருந்து இரும்புக்காலத்துக்கும், பின்னர் தொடக்க வரலாற்று காலத்துக்கும் (சங்ககாலம்) படிப்படியாக வளர்ச்சியடைந்திருக்கலாம்.” என்று அவர் குறிப்பிடுகிறார்.
‘செங்கல் கட்டுமானம்’
படக்குறிப்பு, கரிவலம்வந்தநல்லூர்
கரிவலம்வந்தநல்லூர் அகழாய்வு கவனம் பெறுவதற்கான மிக முக்கியமான ஒரு காரணம், 3 மாதங்களிலேயே இங்கு கிடைத்திருக்கக்கூடிய தொல்லியல் பொருட்கள். குறிப்பாக, ஒரு செங்கல் கட்டுமானம்.
“40 சென்டிமீட்டர் அகலமும் 20 சென்டிமீட்டர் நீளமும் 7 சென்டிமீட்டர் தடிமனும் கொண்ட செங்கற்களால் ஒரு கட்டுமானம் கண்டறியப்பட்டுள்ளது. படிகள் வைத்து கட்டப்பட்டுள்ளதைப் பார்க்கையில் இது ஒரு சதுர வடிவ கிணறாக இருக்கலாம். இந்த கட்டட அமைப்பு களிமண் கொண்டு பலப்படுத்தப்பட்டுள்ளது” என்கிறார் கரிவலம்வந்தநல்லூர் தொல்லியல் அலுவலர் காளீஸ்வரன்.
தமிழ்நாட்டில் இதுவரை செய்யப்பட்ட அகழ்வாய்வுகளில் சுட்ட செங்கல்களால் ஆன கட்டடங்கள் முதன் முதலில் வெளிப்பட்டது, கீழடி அகழாய்வில் தான்.
கீழடியில் கிடைத்த கட்டடத் தொகுதிகள், எழுத்துப் பொறிப்புகள், பொருட்கள் ஆகியவை அங்கு ஒரு நகர நாகரீகம் இருந்ததை உறுதிசெய்தன. பொதுவாக கங்கைச் சமவெளியில் கி.மு. ஆறாம் நூற்றாண்டுவாக்கில் இருந்த நகரமயமாக்கம் தமிழ்நாட்டில் இல்லை என்பதுதான் பொதுவான கருதுகோளாக இருந்ததுவந்தது. கீழடி அகழாய்வு முடிவுகள் அதை மாற்றின.
இந்நிலையில், தற்போது அதை ஒத்த பொருட்கள், குறிப்பாக இந்த செங்கல் கட்டுமானம், கீழடியைப் போலவே கரிவலம்வந்தநல்லூரிலும் ஒரு நகர நாகரீகம் இருந்துள்ளது என்பதைக் குறிப்பதாக இங்கு அகழாய்வில் ஈடுபட்டு வரும் தொல்லியல் துறை அலுவலர்கள் கூறுகின்றனர்.
படக்குறிப்பு, கரிவலம்வந்தநல்லூரில் கிடைத்துள்ள முதுமக்கள் தாழி அல்லது ஈமச்சின்னம்.
கரிவலம்வந்தநல்லூரில் செங்கல் கட்டுமானம் தவிர்த்து, கறுப்பு-சிவப்பு பானை ஓடுகள், கண்ணாடி மணிகள், இரும்பு தாதுக்கள், முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன.
“கரிவலம்வந்தநல்லூரில் சில அடிகளுக்கு மட்டுமே தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் நடைபெற்றுள்ளன. இருப்பினும் இதுவரை வெளிப்பட்டுள்ள தொல்லியல் பொருட்கள் முக்கியமானவை. இன்னும் பல கட்ட ஆய்வுகளில் முழுமையான தகவல்கள் கிடைக்கும்” என்கிறார் இந்த அகழாய்வு திட்ட இயக்குநர் யதீஷ் குமார்.
கீழடி உடனான ஒப்பீடு
பட மூலாதாரம், keeladimuseum
படக்குறிப்பு, கீழடியில் கிடைத்த கட்டடத் தொகுதிகள்
கரிவலம்வந்தநல்லூரில் கிடைத்துள்ள குறியீடுகள் கொண்ட கறுப்பு-சிவப்பு பானை ஓடுகளும் குறிப்பிடத்தக்கவை.
தமிழகத்தில் கீழடி, ஆதிச்சநல்லூர், கொற்கை, அழகன்குளம், கொடுமணல், கரூர், தேரிருவேலி, உறையூர், மாங்குளம், பேரூர் மற்றும் பிற தொடக்க வரலாற்று கால தொல்லியல் சார் இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளிலும் குறியீடுகள் கொண்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளன. தமிழகம் மட்டுமின்றி இலங்கையில் திசமஹரம, கந்தரோடை, மாந்தை, ரிதியகாமா போன்ற ஊர்களிலும் இதுபோன்ற குறியீடுகள் கிடைத்துள்ளன.
இந்திய துணைக்கண்டத்தில் தமிழகத்தில் இவை பரந்த அளவில் சேகரிக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவில் கண்டெடுக்கப்பட்டுள்ள குறியீடுகளில் 75 சதவிகிதம் தமிழகத்தில் கிடைக்கப் பெற்றவை.
அதேபோல, ரௌலட்டட் பானை ஓடுகளும் கரிவலம்வந்தநல்லூர் அகழாய்வில் கிடைத்துள்ளதா, தமிழக தொல்லியல் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
ரௌலட்டட் பானை ஓடுகள் என்பவை இந்திய நாட்டு பானை வகைகளைச் சார்ந்தவை. உரோம நாட்டு தொழில்நுட்பச் சாயல் கொண்டு உள்ளூரில் வனையப்பட்ட மட்கலன்கள். கீழடியில் வெளிப்பட்ட ரௌலட்டட் பானை ஓடுகள் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட வகையைச் சார்ந்தாக இருந்தன.
படக்குறிப்பு, கரிவலம்வந்தநல்லூர்
கரிவலம்வந்தநல்லூர் அகழாய்வில் இதுவரை கிடைக்கப் பெற்றுள்ள தொல்லியல் பொருட்கள், ‘ரிலேடிவ் டேட்டிங்’ (Relative dating) என்ற முறையில், கீழடி, அழகன்குளம், காவேரிப்பூம்பட்டினம், அரிக்கமேடு போன்ற அகழாய்வுகளில் கிடைக்கப் பெற்ற பொருட்களுடன் ஒத்துப்போகின்றன.
எனவே இந்த பொருட்கள், கிமு 6 அல்லது 5ஆம் நூற்றாண்டு எனும் சங்க காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என தமிழக தொல்லியல் துறை தெரிவிக்கிறது.
ஆனால், கார்பன் காலக்கணிப்பு (Carbon dating) எனும் அறிவியல்பூர்வமான முறையில் இது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை. அதற்கான மாதிரிகள் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன, அவற்றின் முடிவுகள் கிடைத்தவுடன் இதன் காலம் உறுதிப்படுத்தப்படும் என தமிழக தொல்லியல் துறை தெரிவிக்கிறது.
கீழடியில் கண்டெடுக்கப்பட்ட தொல் பொருள்களின் கரிமப் பகுப்பாய்வு, கீழடிப் பண்பாட்டின் காலம் கி.மு. 6-ஆம் நூற்றாண்டு என்பதை உறுதிப்படுத்தியது.
கங்கைச் சமவெளியில் இரண்டாம் நகர நாகரீகம் (சிந்து சமவெளி நாகரீகம் முதலாம் நகர நாகரீகம்) கிட்டத்தட்ட கி.மு. ஆறாம் நூற்றாண்டில் தோன்றியது. ஆனால், அதற்கு இணையான காலகட்டத்தில் தமிழ்நாட்டில் எந்த நகர நாகரீகமும் இருந்ததற்கான ஆதாரங்கள் கீழடி அகழாய்வுகளுக்கு முன் கிடைத்ததில்லை.
இரண்டாம் நகர நாகரீக காலத்தில் தமிழ்நாட்டிலும் நகர நாகரீகம் இருந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகளை கீழடி வெளிப்படுத்தியது. எனவே, கீழடி இந்தியா முழுவதும் பேசுபொருளானது.
“கரிவலம்வந்தநல்லூரில் சுமார் 50 ஏக்கர் அளவிலான வாழ்விடம் கண்டறியப்பட்டுள்ளது. வணிகப் பெருவழியில் அமைந்துள்ளதால் இது ஒரு இரண்டாம் நிலை நகரமாக இருந்திருக்கலாம். ஆனால், கீழடியில் பலகட்ட ஆய்வுகளுக்கு பிறகு தான் ஒரு பெரும் நகர நாகரீகம் வெளிப்பட்டது. எனவே, இங்கும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்” என்கிறார் பேராசிரியர் ராஜன்.