
-
பிரசுரிக்கப்பட்டது
-
வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
கரூர் மாவட்டத்தில் நான்கு கோவில்களின் கட்டுப்பாட்டில் இருந்த 3,084 ஏக்கர் நிலங்களில் பத்திரப்பதிவு மேற்கொள்வதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி தமிழக இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.
அரசு உத்தரவால் 15 கிராமங்களில் 471 சர்வே எண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் விலகிவிட்டதாகக் கூறும் விவசாயிகள், ’15 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது” என்கின்றனர்.
ஆனால், சட்டத்துக்கும் அறத்துக்கும் புறம்பாக இந்து சமய அறநிலையத்துறை செயல்பட்டுள்ளதாக பா.ஜ.க விமர்சித்துள்ளது. என்ன பிரச்னை?
பின்னணி
கரூர் மாவட்டத்தில் பாலசுப்ரமணிய சுவாமி கோவில் (புகழிமலை), கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், ரவீஸ்வரர் கோவில் (குப்புச்சிபாளையம்), விக்ருதீஸ்வரர் கோவில் (வெஞ்சமாங்கூடலூர்) ஆகிய கோவில்கள் உள்ளன.
இந்த நான்கு கோவில்களுக்கு 15 கிராமங்களில் 471 சர்வே எண்களில் 3084 ஏக்கர் நிலம் உள்ளதாகக் கூறி கடந்த 2007 ஆம் ஆண்டு அறநிலையத்துறையின் ‘Prohibitory Module’ (பத்திரப்பதிவு தடை) பிரிவில் சேர்க்கப்பட்டது.
“அரசின் உத்தரவால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளானோம். கல்விக் கடன் பெறவோ, நிலத்தைக் காட்டி பெண் குழந்தைகளுக்குத் திருமணம் செய்வதோ அவ்வளவு எளிதானதாக இருக்கவில்லை” என்கிறார், வெஞ்சமாங்கூடலூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கோவிந்தராஜ்.
இவருக்கு இதே கிராமத்தில் ஒன்பது ஏக்கர் நிலங்கள் உள்ளன. இதில் நெல், தென்னை விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர்.
“மூத்த பெண்ணுக்கு திருமணம் நடந்துவிட்டது. நிலத்தின் மீது எந்த உரிமையும் இல்லாததால் திருமணம் நடப்பதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டன. என்னைப் போல எங்கள் கிராமத்தில் சுமார் ஐந்தாயிரம் பேர் பாதிக்கப்பட்டனர்” என பிபிசி தமிழிடம் அவர் தெரிவித்தார்.
இந்தநிலையில், கரூரில் 3084 ஏக்கர் நிலங்களில் பத்திரப்பதிவு மேற்கொள்வதற்கு விதிக்கப்பட்ட தடையை கடந்த ஜூலை 9 ஆம் தேதி இந்துசமய அறநிலையத்துறை நீக்கியுள்ளது.
ஆட்சியர் கடிதம் சொல்வது என்ன?

கரூர் மாவட்ட ஆட்சியர் முத்துக்குமரன், திருப்பூர் அறநிலையத்துறை இணை ஆணையருக்கு ஜூலை 9 ஆம் தேதி இதுதொடர்பாக விரிவான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், ‘சுதந்திரத்துக்கு முந்தைய மன்னர் ஆட்சிக்காலங்களில் கோவில்கள், மசூதிகள் ஆகிய மதவழிபாட்டுத் தலங்கள் மற்றும் கல்வி, தர்ம ஸ்தாபன நிறுவனங்கள், சில தனி நபர்களுக்கு இனாமாக நிலங்கள் வழங்கப்பட்டிருந்தன’ எனக் கூறியுள்ளார்.
இந்த நிலங்கள் திரும்பப் பெறும் உரிமையுடன் (Reversionary Rights) வழங்கப்பட்டிருந்ததாகவும் இந்த இனாம் விவரங்கள் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இனாம் கமிஷன் (1860) அமைத்து உறுதி செய்யப்பட்டு உரிமைப் பட்டயங்கள் (Titile Deeds) வழங்கப்பட்டதாக கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திரத்துக்குப் பிறகு இனாம் உடைமை முறைகள் நீக்கப்பட வேண்டும் என அரசால் கொள்கை முடிவு எடுக்கப்பட்டு அதற்காக எஸ்டேட் மற்றம் இனாம் ஒழிப்புச் சட்டங்கள் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன.
அதன்படி, தமிழ்நாடு மைனர் இனாம் (ஒழிப்பும் மற்றும் இரயத்துவாரியாக மாற்றலும்) சட்டம் 1963ன் கீழ் 15.2.1965 அன்று கோவில்கள் மற்றும் சமயம் சார்ந்த நிறுவனங்கள், சேவை நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட நிலங்களில் ரயத்துவாரி நிலவரித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
‘இனாம் ஒழிப்புச் சட்டத்தின்கீழ் உள்ள பிரிவுகளில் அந்த ஸ்தாபனங்களுக்கோ அல்லது நிலங்களில் விவசாயம் செய்து வந்த ரயத்துகளுக்கோ பட்டா வழங்கப்பட்டன’ என்கிறார், மாவட்ட ஆட்சியர் முத்துக்குமரன்.
2007 ஆம் ஆண்டு கடிதத்தால் சிக்கல்
இந்த நிலங்களில் பத்திரப்பதிவு நடைபெற்று வந்த நிலையில், கடந்த 3.11.2007 அன்று இந்துசமய அறநிலையத்துறை சிறப்பு ஆணையர் எழுதிய கடிதத்தில், ‘சொத்துகள் தொடர்பான ஆவணங்களைப் பதிவு செய்ய வேண்டாம்’ என சார் பதிவாளர்களுக்கும் மாவட்ட பதிவாளருக்கும் அறிவுறுத்தியிருந்தார்.
இதனைக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள கரூர் மாவட்ட ஆட்சியர், ‘கோவில் நிலங்களைப் பட்டியலிடும்போது இனாம் தூய பதிவேட்டின் அடிப்படையில் இனாம் ஒழிப்புச் சட்டத்தின்கீழ் தனி நபர்கள் பெயரில் பட்டாக்கள் வழங்கப்பட்ட நிலங்கள் அனைத்தையும் பட்டியலிட்டு கோவிலின் சொத்தாக பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டது’ என்கிறார்.
‘கோவில் பெயரில் இல்லாத ஆனால் மைனர் இனாம் ஒழிப்புச் சட்டத்துக்குப் முன்பு கோவில் பெயரில் தாக்கலாகி பின்னர் தனிநபர்கள் பெயரில் ரயத்துவாரி பட்டா நிலங்கள் அனைத்தும் ‘Prohibitory Module எனப் பதிவு செய்யப்பட்டு பத்திரப்பதிவு செய்வது தடுக்கப்பட்டது’ என்கிறார், மாவட்ட ஆட்சித் தலைவர்.
இந்தத் தடையை நீக்கக் கோரி கரூர் மாவட்டம் முழுவதும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை வரப்பெற்றதைத் தொடர்ந்து வருவாய்த்துறை, இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர்கள், உதவி ஆணையர்கள் அடங்கிய குழுவால் ஆய்வு செய்யப்பட்டதாக, மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
எந்தெந்த நிலங்களுக்கு சிக்கல் இல்லை?
கரூர் மாவட்ட ஆட்சியர் தனது கடிதத்தில், பத்திரப்பதிவுத் துறையில் இருந்து தடை செய்யப்பட்டிருந்த சர்வே எண்களை பின்வருமாறு வகைப்படுத்தப்படுத்தியுள்ளார்.
- இனாம் ஒழிப்புச் சட்டத்துக்கு முன்பாக கோவில் பெயரில் தாக்கலாகி செட்டில்மென்ட் பதிவேட்டிலும் யுடிஆர் பதிவேட்டிலும் கணினி வழி ‘அ’ பதிவேட்டிலும் பட்டா தாக்கல் ஆகி உள்ள நிலங்கள்.
- தனி நபர்கள் பெயரில் பட்டா தாக்கலாகி இருப்பினும் உரிமையியல் மற்றும் உயர் நீதிமன்ற வழக்குகளில் இடம்பெற்றுள்ள நிலங்கள்
- இதர சந்தேகத்துக்குரிய நிலங்கள்
- அரசு புறம்போக்கு நிலங்கள்
இவற்றில், கோவில் பெயரில் பட்டா தாக்கலாகி இனாம் செட்டில்மென்ட்டின் கீழ் தனிநபர்கள் பெயரில் ரயத்துவாரி பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ள புல எண்கள், இணைய வழி ‘அ’ பதிவேட்டின் மூலம் சரிபார்க்கப்பட்டு நிலங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டதாக, மாவட்ட ஆட்சியரின் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
‘ஆவணங்களை பரிசீலனை செய்தபோது சுமார் 3085 ஏக்கர் பட்டா நிலங்களுக்கு பத்திரப்பதிவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கம் செய்யலாம்’ எனப் பரிந்துரை செய்வதாக மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கடிதத்துக்கு அதேநாளில் பதில் (ஜூலை 9) பதில் அளித்துள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் டி.ஜி.வினய், வருவாய்த்துறை ஆவணங்களின் அடிப்படையில் நிலங்கள் மீதான தடையை நீக்கம் செய்வதற்கு கோவில் செயல் அலுவலர்களை அறிவுறுத்துமாறு, மண்டல இணை ஆணையருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
அறநிலையத்துறையின் இந்த உத்தரவுக்கு இந்து அமைப்புகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

‘த.வெ.க இன்னொரு தி.மு.க’ – ஹெச்.ராஜா
பா.ஜ.க மூத்த தலைவர்களில் ஒருவரான ஹெச்.ராஜா, ‘கோவில் நிலங்களை ஆக்ரமிப்பாளர்களுக்கே பத்திரப்பதிவு செய்து ஒப்படைப்பதற்கு வழிவகை செய்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பானை கண்டிக்கத்தக்கது’ என அறிக்கை ஒன்றில் சாடியுள்ளார்.
இந்த விஷயத்தில் சட்டவிரோதமாகவும் அறத்துக்கு புறம்பாகவும் அறநிலையத்துறை நிர்வாகமும் கரூர் மாவட்ட ஆட்சியரும் செயல்படுவதற்கு த.வெ.க அரசு அனுமதித்துள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
‘கோவில் நிலம் கோவிலுக்கே சொந்தம். பிற பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்படாது’ என, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் பேசியதை மேற்கோள் காட்டியுள்ள ஹெச்.ராஜா, ‘பத்திரப்பதிவு தடையை நீக்க உத்தரவு பிறப்பித்துள்ள செயலுக்கு எதிராக அமைச்சர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
த.வெ.க இன்னொரு தி.மு.க என்பதை ஒவ்வொரு நாளும் நிரூபித்து வருவதாகக் கூறியுள்ள ஹெச்.ராஜா, தமிழ்நாட்டில் ஆட்சிதான் மாறியுள்ளதே தவிர இந்துக்களுக்கு எதிராகவும் இந்து கோவில்களுக்கு எதிரான செயல்களும் தொடர்ந்து கொண்டிருப்பதாக விமர்சித்துள்ளார்.
விசுவ இந்து பரிஷத் அமைப்பின் தென் தமிழ்நாடு மாநில தலைவர் ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பத்திரப்பதிவு நீக்கப்பட்ட நிலங்கள் அனைத்தும் இனாம் சட்டத்தின்கீழ் வகைப்படுத்தப்பட்ட மைனர் இனாம் நிலங்கள் தானா என்பதைத் தீர்மானிப்பதில் உரிய ஆய்வுகள் நடத்தப்பட்டதா?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
‘எந்தக் காரணம் கொண்டும் கோவில் நிலத்தை அரசு பதிவேட்டில் இருந்து மாற்றம் செய்யக் கூடாது’ எனக் கூறியுள்ள ராமகிருஷ்ணன், ‘தற்போது அந்த நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு அரசு புறம்போக்கு நிலத்தில் வசிப்பதற்கு இடம் தர முன்வர வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.
ஒரே நாளில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதா?
“அரசாங்கத்துக்கு ஓர் அழுத்தம் கொடுத்து வாக்கு வங்கி நோக்கத்துக்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுளதாகவே பார்க்கிறோம்” என்கிறார், ஆலய வழிபடுவோர் சங்கத்தின் தலைவர் டி.ஆர்.ரமேஷ்.
அரசின் உத்தரவுக்கு எதிராக நீதிமன்றம் செல்ல உள்ளதாகக் கூறிய அவர், “ஒவ்வொரு நிலத்தையும் ஆராய்ந்து பார்த்து தான் உத்தரவு பிறப்பிக்க முடியும். ஆனால், மாவட்ட ஆட்சியரின் கடிதத்துக்கு அதேநாளில் (ஜூலை 9) அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்” எனக் கூறுகிறார்.
அந்தவகையில் அவசர கதியில் அரசு செயல்பட்டுவிட்டதாகவே பார்க்க முடிவதாகக் கூறிய அவர், கடந்த தி.மு.க ஆட்சியில் இதேபோன்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டபோது அமைச்சர் சேகர்பாபு மறுத்துவிட்டதாகக் கூறுகிறார்.
“கோவில் விவகாரத்தில் தி.மு.க அரசு மீது தான் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால், த.வெ.க அரசு இப்படியொரு நடவடிக்கையை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கவில்லை” எனவும் டி.ஆர்.ரமேஷ் குறிப்பிட்டார்.
இதனை மறுத்து பிபிசி தமிழிடம் பேசிய கரூர் எம்.பி ஜோதிமணி, “ஒரேநாளில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகக் கூறுவது தவறானது. இதுதொடர்பாக, கடந்த ஒரு மாதமாக அறநிலையத்துறை, வருவாய்த்துறை, சட்டத்துறை ஆகிய துறைகளின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வந்தோம்” என்கிறார்.
முதலமைச்சரின் கரூர் வருகையால் துரிதமாக முடிவெடுக்கப்பட்டதாகக் கூறிய அவர், ஒவ்வொரு சர்வே எண்ணையும் ஆராய்ந்து பத்திரப்பதிவுக்கான தடையில் இருந்து நீக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
‘த.வெ.க அரசிடம் 2 கேள்விகள்’
பட மூலாதாரம், Facebook/Jothimani
2007-ல் இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு ஆணையர் எழுதிய கடிதம் குறித்துப் பேசும் ஜோதிமணி எம்.பி, “கோவில் நிலம் என அறநிலையத்துறை எழுதிய கடிதத்தின் அடிப்படையில் பத்திரப்பதிவுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால், இதற்கான ஆதாரம் எதையும் பத்திரப்பதிவுத்துறை கேட்காததால் சிக்கல் நீடித்தது” என அவர் குறிப்பிட்டார்.
த.வெ.க அரசிடம் இரண்டு கோரிக்கைகளை தான் முன்வைத்ததாகக் கூறும் ஜோதிமணி எம்.பி, “தங்களின் நிலம் என்பதற்கு மக்களிடம் ஆவணங்கள் உள்ளன. ஆனால், அறநிலையத்துறையிடம் இல்லை. இரண்டாவது, சட்டத்துக்குப் புறம்பாக பத்திரப்பதிவு நடக்கக் கூடாது எனக் கூறுவதைத் தடுப்பதில் என்ன பிரச்னை எனக் கேட்டோம்” எனக் கூறுகிறார்.
இதனை முழுமையாக ஆய்வு செய்து அறநிலையத்துறை ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பட மூலாதாரம், spl arrangments
கோவில் நிலம் எனத் தவறான தகவலை இந்து அமைப்புகளும் வலதுசாரி ஆதரவாளர்களும் பரப்பி வருவதாகக் கூறுகிறார், கருணாமூர்த்தி. இவர் இனாம் நில விவசாயிகள், குத்தகையாளர்கள், வீடு மனை உரிமையாளர்கள் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார்.
சிறு இனாம் வகை நிலங்கள் அனைத்தும் மக்களுக்கே சொந்தம் எனக் கூறுவதற்கு பல நூறு ஆண்டுகால ஆவணங்கள் தங்களிடம் உள்ளதாகவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “மன்னர்கள் காலத்தில் விவசாயிகள் அரசுக்கு வரியைக் கொடுக்காமல் கோவிலுக்கு கொடுத்து வந்துள்ளனர். இதை அறியாமல் சிலர் நீதிமன்றம் சென்றனர்” என்கிறார்.
பத்திரப்பதிவு தடையை நீக்கியதற்கு எதிராக பா.ஜ.க விமர்சனம் செய்துள்ள நிலையில், அக்கட்சியை எதிர்த்து ஜூலை 13 ஆம் தேதி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விவசாயிகளும் பொதுமக்களும் போராட்டம் நடத்தியுள்ளனர்.
“புதிய அரசு பொறுப்பேற்று அறுபது நாட்களில் எங்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்துள்ளது” என்றார், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி கோவிந்தராஜ்.
பட மூலாதாரம், spl arrangments
‘பத்தாயிரம் குடும்பங்களுக்கு பலன்’
பூர்வகுடி மக்களுக்கான பெரும் பிரச்னையாக இனாம் நிலங்கள் உள்ளதாகக் கூறும் கருணாமூர்த்தி, “அரசின் உத்தரவால் கரூரில் சுமார் பத்தாயிரம் குடும்பங்களுக்கு பலன் கிடைத்துள்ளது. முதல்கட்டமாக சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நிலங்களை அரசு விடுவித்துள்ளது. இதேபோல, சுமார் 50 ஆயிரம் ஏக்கர் நிலங்களை விடுவிக்க வேண்டியுள்ளது” என்கிறார்.
கோவில் நிலம் என இந்து அமைப்புகள் கூறும் குற்றச்சாட்டு குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ஜோதிமணி எம்.பி, “கடவுள் பெயரில் உள்ள நிலங்கள் எதையும் அதிகாரிகள் கணக்கில் எடுக்கவில்லை. அவை எதுவும் தற்போதைய சர்வே எண்களில் இருந்து விடுவிக்கப்படவில்லை” என்கிறார்.
கடந்த தி.மு.க அரசாங்கத்தில் இருந்தே இந்தக் கோரிக்கை எழுப்பப்பட்டு வருவதாகக் கூறிய அவர், “கடந்த ஆட்சியில் கரூர் மாவட்ட ஆட்சியராக இருந்த தங்கவேல், பத்திரப்பதிவை நீக்குவதற்கு அரசுக்கு கடிதம் அனுப்பினார். தேர்தல் என்பதால் கிடப்பில் போடப்பட்டது. தற்போது புதிய அரசு மூலம் முடிவுக்கு வந்துள்ளது” எனப் பதில் அளித்தார்.
தமிழக அமைச்சர் பதில்
பா.ஜ.க முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக தமிழ்நாடு எரிசக்தித் துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறும்போது, “1963 ஆம் ஆண்டு இனாம் ஒழிப்புச் சட்டத்தின் மூலம் அரசு சார்பில் பட்டா வழங்கப்பட்ட இடங்களாக அவை உள்ளன. அங்கு 2,3 தலைமுறைகளாக மக்கள் வாழ்ந்து வருகின்றனர்” எனக் கூறியுள்ளார்.
பட்டா மாறுதல் செய்யாமல் இருந்ததால் அதை ஒரு சிலர் கோவில் நிலம் எனக் கூறுவதாகக் குறிப்பிட்ட சி.டி.ஆர்.நிர்மல்குமார், “அந்த பட்டாக்களை தற்போது ஒழுங்குபடுத்தியுள்ளோம். வேறு எந்தக் கோவில் நிலங்களை புதிதாக கொடுக்கவில்லை” என்கிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு