• Wed. Jul 15th, 2026

24×7 Live News

Apdin News

Vietnam Boat Accident வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்தோருக்கு லாவா 25 லட்சம் நிதியுதவி: இந்திய சுற்றுலாப் பயணிகள் குடும்பங்களுக்கு மனிதாபிமான உதவி

Byadmin

Jul 14, 2026


வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என லாவா நிறுவனம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திரா ஆகிய தென் மாநிலங்களில் இருந்து மொத்தம் 32 இந்திய சுற்றுலாப் பயணிகள் வியட்நாமுக்குச் சுற்றுலா சென்றிருந்தனர். ஜூலை 11-ம் தேதி மதியம் 1 மணியளவில் வியட்நாமின் புகழ்பெற்ற ஃபூ குவொக் தீவிற்கு அருகே உள்ள ‘ஹான் மே ரட் நிகோய்’ தீவிலிருந்து ‘அன் தோய்’ துறைமுகத்தை நோக்கி அதிவேக சுற்றுலாப் படகில் அவர்கள் திரும்பிக் கொண்டிருந்தனர்.

துறைமுகத்திற்கு 500 மீட்டர் தொலைவே இருந்தபோது, கடலில் திடீரென எழுந்த ராட்சத அலை ஒன்று மோதியதில், நிலைதடுமாறிய படகு தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் 15 இந்தியப் பயணிகள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் 10 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், 3 பேர் ஆந்திராவையும், 2 பேர் கேரளாவையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

விபத்தில் சிக்கியவர்களில் பெரும்பாலானோர் ‘லாவா’ செல்போன் நிறுவனத்தின் விநியோகஸ்தர்கள் மற்றும் முகவர்கள் ஆவர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சிறந்த முறையில் வணிகம் செய்ததற்காக, அவர்களது பணியைப் பாராட்டி, நிறுவனம் சார்பாக இந்த இலவச வியட்நாம் சுற்றுலாவுக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.

விபத்து நடந்தவுடன் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோர் வியட்நாம் தூதரகத்துடன் அவசரத் தொடர்புகொண்டு மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டனர்.

இந்த கோர விபத்து குறித்து வியட்நாம் பிரதமர் லே மின் ஹன் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டார். முதல்கட்ட விசாரணையில், மோசமான வானிலை மற்றும் கடல் சீற்றத்திற்கு இடையேயும், பாதுகாப்பு விதிமுறைகளை மீறி படகை இயக்கியதாகக் கூறி, அந்தப் படகின் கேப்டன் நுயென் ஹாங் ஹாய் என்பவரை வியட்நாம் போலீசார் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.

வியட்நாமில் பிரேதப் பரிசோதனை முடிவடைந்த பிறகு, 15 இந்தியர்களின் உடல்களும் நேற்றிரவு வியட்நாம் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் முதலில் மும்பைக்குக் கொண்டு வரப்பட்டன. அங்கிருந்து அந்தந்த மாநில அரசுகளின் ஒருங்கிணைப்புடன், தமிழகத்தைச் சேர்ந்த 10 பேரின் உடல்களும் இன்று காலை சென்னை மற்றும் திருச்சி விமான நிலையங்களுக்குக் கொண்டு வரப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்நிலையில், லாவா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

இந்தக் கடினமான சூழலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் துணையாக நிற்கும் வகையில், உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் ‘லாவா’ நிறுவனம் ரூ.25 லட்சம் நிதியுதவியை வழங்கும். தேவையான சரிபார்ப்பு மற்றும் ஆவண நடைமுறைகளுக்குப் பிறகு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இந்த நிதியுதவி நேரடியாக வழங்கப்படும். மனிதாபிமான அடிப்படையில், தாமாக முன்வந்து இந்த உதவி வழங்கப்படுகிறது.

உயிரிழந்தவர்கள் ‘லாவா’ குடும்பத்தின் மதிப்புமிக்க உறுப்பினர்களாகத் திகழ்ந்தவர்கள். ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் அவர்களின் குடும்பத்தினருடன் நாங்கள் உறுதுணையாக நிற்பதோடு, இந்தக் கடினமான காலகட்டத்தில் அவர்களுக்குத் தேவையான ஆதரவையும் வழங்குகிறோம் என தெரிவித்துள்ளது.

By admin