0
வளைகுடாப் பகுதியின் பிற இடங்களில், நேற்றிரவு தங்களது எல்லைகளுக்குள் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஜோர்டான் மற்றும் பஹ்ரைன் ஆகிய இரு நாடுகளும் தெரிவித்துள்ளன.
பஹ்ரைன் உள்துறை அமைச்சகம் நேற்று இரவு மூன்று தனித்தனி எச்சரிக்கைகளை விடுத்து, அங்குள்ள குடியிருப்பாளர்களை உடனடியாக அருகிலுள்ள தங்குமிடங்களை நாடிச் செல்லுமாறு அறிவுறுத்தியது.
அதேவேளையில், பஹ்ரைனில் உள்ள பல அமெரிக்க இலக்குகள் மீது தாங்கள் தாக்குதல் நடத்தியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) தெரிவித்துள்ளது.
ஈரானின் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான ‘இர்னா’ வெளியிட்டுள்ள அறிக்கையில், பஹ்ரைனில் உள்ள பல ஆயுதக் கிடங்குகள், ஒரு செயற்கைக்கோள் தகவல் தொடர்பு மையம், அமெரிக்கப் படைகள் தங்கியிருந்த ஒரு கட்டிடம் மற்றும் அமெரிக்க கடற்படையின் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு ரேடார் ஆகியவற்றைத் தாங்கள் அழித்துள்ளதாக ஈரான் புரட்சிகர காவல்படை குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில், இன்று செவ்வாய்க்கிழமை (14) அதிகாலை ஜோர்டான் வான்வெளியில் நான்கு ஏவுகணைகள் இடைமறித்து அழிக்கப்பட்டதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இச்சம்பவத்தில் உயிர்ச்சேதங்களோ அல்லது பொருட்சேதங்களோ ஏற்படவில்லை என்றும் அது கூறியுள்ளது.
ஜோர்டானுக்குள் உள்ள அமெரிக்க இலக்குகளை மட்டுமே தாங்கள் இலக்கு வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ள ஈரான் புரட்சிகர காவல்படை, ஜோர்டான் அரசு அல்லது அந்நாட்டு மக்கள் மீது தங்களுக்கு எந்தப் பகையும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.