றாப் இசை கலைஞர், பாடலாசிரியர், பாடகர், இசையமைப்பாளர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முக ஆளுமை திறன் படைத்த ஹிப் ஹாப் தமிழா ஆதியின் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படம் தமிழ் மண்ணின் பாரம்பரிய இசை வடிவமான கானா பாடலை சர்வதேச அளவிற்கு உயர்த்தும் வகையில் உருவாகி உள்ளது என அப்படத்தின் நாயகனும், இயக்குநருமான ஹிப் ஹாப் தமிழா ஆதி தெரிவித்திருக்கிறார்.
இயக்குநர் ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மீசைய முறுக்கு 2 ‘திரைப்படத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதி, கெட்டிகா சர்மா, சைத்ரா ஜே. ஆச்சார், ரம்யா ரங்கநாதன், ஹர்ஷத் கான் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்தை அவ்னி மூவிஸ் மற்றும் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் குஷ்பூ சுந்தர் மற்றும் ஏசிஎஸ் அருண்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் படக் குழுவினர் பங்கு பற்றினர்.
இந்நிகழ்வில் படத்தின் இயக்குநரான ஹிப் ஹாப் தமிழா ஆதி பேசுகையில், ” மீசைய முறுக்கு படத்தின் முதல் பாகம் எம்முடைய வாழ்க்கையை பின்னணியாக கொண்டு உருவானது. மீசைய முறுக்கு படத்தின் இரண்டாம் பாகம் அதைவிட பரந்த அளவில் இசை, இசை கலைஞர்கள் மற்றும் அவர்களது வாழ்வியலை பற்றிய உலகளாவிய கதையாக உருவாகி உள்ளது.
குறிப்பாக கானா கலைஞர்களின் இசையும், அவர்களது வாழ்வியலும் இடம் பிடித்துள்ளது. கானா கலைஞர்கள் தாங்கள் எதிர்கொள்ளும் போராட்டங்கள் வாழ்வியல் அனுபவங்களையும் பயணங்களையும் பாடல்களாக வெளிப்படுத்தி, தங்களது கலையின் மூலமாக வாழ்க்கையை எதிர்கொண்டு வருகிறார்கள்.
அவர்களது குரலையும் இந்த இசை உலகில் பதிவு செய்ய வேண்டும் என்பதற்காகவே இப்படம் உருவாகி இருக்கிறது” என்றார்.

The post கானா இசைக் கலைஞர்களின் வாழ்வியலை பேசும் ‘மீசையை முறுக்கு 2’ appeared first on Vanakkam London.