• Fri. Jul 31st, 2026

24×7 Live News

Apdin News

காமன்வெல்த் போட்டிகள்: பளுதூக்குதலில் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்திய லவ்பிரீத் சிங்

Byadmin

Jul 31, 2026


கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து பதக்க எண்ணிக்கையை அதிகப்படுத்தி வருகின்றனர். தற்போது வரை 17 பதக்கங்களை வென்றுள்ள நிலையில், பதக்க எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் சூழல் பிரகாசமாகி இருக்கிறது.

தேசிய சாதனையாளரான லவ்பிரீத் சிங், ஸ்னாட்ச் பிரிவில் காமன்வெல்த் விளையாட்டு சாதனை படைத்த போதிலும், ஆடவர் +110 கிலோ பிரிவில் வெள்ளி பதக்கத்தையே வென்றார். நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்திய பளுதூக்கு வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்தனர்.

388 கிலோ:

அமிர்தசரஸை சேர்ந்த 28 வயதான இவர், ஸ்னாட்ச் பிரிவில் விளையாட்டு சாதனையாக 176 கிலோவையும், அதை தொடர்ந்து கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 212 கிலோவையும் தூக்கி, மொத்தமாக 388 கிலோவை எட்டினார்.

இருப்பினும், நியூசிலாந்தின் டேவிட் ஆண்ட்ரூ லிட்டி, கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் காமன்வெல்த் விளையாட்டு சாதனையாக 223 கிலோவை தூக்கி, இந்தியரை முந்தி, மொத்தமாக 389 கிலோவுடன் தங்க பதக்கத்தை வென்றார். ஆண்ட்ரூ லிட்டி ஸ்னாட்ச் பிரிவில் 166 கிலோவை மட்டுமே தூக்கியிருந்தார்.

இங்கிலாந்தின் ஆண்ட்ரூ கிரிஃபித்ஸ், ஸ்னாட்ச் பிரிவில் 165 கிலோவும், கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 191 கிலோவும் என மொத்தமாக 356 கிலோவை தூக்கி வெண்கல பதக்கத்தை வென்றார்.

லவ்பிரீத் சிங் பின்னணி:

பஞ்சாபின் எல்லை மாவட்டமான அமிர்தசரஸில் உள்ள பால் சிக்கந்தர் கிராமத்தை சேர்ந்த லவ்பிரீத், ஒரு எளிய குடும்பத்தை சேர்ந்தவர். அவரது தந்தை ஒரு தையல்காரர், அதே சமயம் அவரது தாத்தா காய்கறிகள் விற்று பிழைப்பு நடத்தினார். குடும்ப தொழிலை விடுத்து விளையாட்டை தொடருமாறு குடும்பத்தினரால் ஊக்குவிக்கப்பட்ட அவர், தனது 13வது வயதில் DAV மைதானத்தில் பளுதூக்குதலை தொடங்கினார். அன்று முதல் இந்தியாவின் முன்னணி ஹெவிவெயிட் பளுதூக்கு வீரர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார்.

“ஸ்னாட்ச் பிரிவில் தங்கம் வெல்வேன் என்று நினைத்தேன், ஆனால் அது கடவுளின் கையில் இருந்தது. கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் எனது இறுதி முயற்சியில் என்னால் பளு தூக்க முடியவில்லை என்பதில் சற்று ஏமாற்றம்தான், பயிற்சியில் இதைவிட அதிகமாக நான் பளு தூக்கியுள்ளேன்,” என்று வெள்ளிப் பதக்கம் வென்ற பிறகு லவ்பிரீத் சிங் கூறினார்.

பஞ்சாப் பளுதூக்கு வீரரான இவர், ஸ்னாட்ச் பிரிவில் மிக சிறந்த ஃபார்மில் இருந்தார். முதலில் 168 கிலோவை எளிதாக தூக்கி, பின்னர் சிரமமின்றி பளுவை 173 கிலோவாக உயர்த்தினார்.

பின்னர், தனது மூன்றாவது முயற்சியில் பிழையின்றி 176 கிலோவை தூக்கி, விளையாட்டு போட்டி சாதனையை முறியடித்தார். இதன் மூலம் கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 10 கிலோ முன்னிலையுடன் வலுவான தொடக்கத்தை பெற்றார்.

By admin