• Sat. May 9th, 2026

24×7 Live News

Apdin News

கார்ல்ஸ்பாட் கேவர்ன்: ஏலியன் தேடலை இந்த நியூ மெக்சிகோ குகை விரிவுபடுத்துவது எப்படி?

Byadmin

May 9, 2026


குகை, வேற்றுகிரகவாசி, ஏலியன், நியூ மெக்சிகோ, ஒளிச்சேர்க்கை, சிவப்பு குள்ள நட்சத்திரம், சயனோபாக்டீரியாக்கள்

பட மூலாதாரம், Lars Behrendt

காரிருளில் மூழ்கியிருந்த குகைக்குள் சென்றபோது, ஒளியிலிருந்து ஆற்றலைப் பெறும் உயிரினங்களைக் காண்போம் என குகை உயிரியலாளர் ஹேசல் பார்டன் எதிர்பார்க்கவில்லை. இருட்டிலும் ஒளிச்சேர்க்கை நடைபெறுகிறது என்ற புதிய புரிதல், சாத்தியமே இல்லை என இதுவரை நாம் நினைத்த பிரபஞ்சத்தின் பிற இடங்களிலும் உயிர்கள் வாழ்வதற்கான வாய்ப்பு இருப்பதை உணர வைக்கிறது.

“அடர் பச்சை நிறத்தில் இருந்த சுவர் அது. இதுவரை நாம் பார்த்திராத அளவுக்கு மிகவும் பளபளப்பான பச்சை நிறத்தில் இருந்தது. இருப்பினும் அந்த நுண்ணுயிரிகள் காரிருளில் வாழ்ந்து கொண்டிருந்தன,” என்கிறார் அலபாமா பல்கலைக்கழகத்தின் புவியியல் அறிவியல் பேராசிரியர் ஹேசல் பார்டன்.

தெற்கு நியூ மெக்ஸிகோவில் உள்ள சிஹுவாஹுவான் பாலைவனத்தின் ஆழமான பாறைப் பள்ளத்தாக்குகளுக்கு அடியில் 119 குகைகளின் வலையமைப்பு உள்ளது. கார்ல்ஸ்பாட் கேவர்ன்ஸ் தேசிய பூங்காவின் ஒரு பகுதியான இந்தக் குகைகள், சுண்ணாம்புக் கற்களைக் கரைக்கும் சல்ஃபியூரிக் அமிலத்தால் நான்கு முதல் 11 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானவை.

இந்தப் பூங்காவின் முதன்மை ஈர்ப்பு ‘கார்ல்ஸ்பாட் கேவர்ன்’ எனப்படும் குகை ஆகும். இங்குள்ள ‘பிக் ரூம்’என்ற பிரமாண்டமான நிலத்தடி அறையின் கூரையில் ஸ்டாலாக்டைட்டுகள் (சுண்ணாம்புப் பாறை குகைகளின் கூரையில் இருந்து கீழ்நோக்கித் தொங்கும் ஊசி போன்ற அமைப்புகள்) தொங்கிக்கொண்டிருக்கின்றன. இந்த அறை சுமார் 4,000 அடி (1,220 மீட்டர்) நீளமும் 625 அடி (191 மீட்டர்) அகலமும் கொண்டது.

“கார்ல்ஸ்பாட் குகையை மிக எளிதாக அணுக முடியும். இது சுற்றுலாப் பயணிகள் பார்வையிடக்கூடிய மிகப் பெரிய சுண்ணாம்புப் பாறை குகை. இதில் படிக்கட்டுகளும் ஏணிகளும் உள்ளன, அனைவரும் உள்ளே செல்லலாம்,” என்கிறார் உப்சாலா பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியலாளர் லார்ஸ் பெஹ்ரெண்ட். இந்த குகை அமைப்பின் சில பகுதிகள் சக்கர நாற்காலியில் செல்பவர்கள் கூட அணுகும் வகையில் இருப்பதாக அவர் கூறுகிறார்.

By admin