எத்தியோப்பியாவின் ஹராரி பகுதியில், 12 ஆண்டுகளாக குழந்தைக்காக காத்திருந்த பெண் ஒருவர் அரிதான வகையில் ஐந்து குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
“ஒரே நேரத்தில் ஐந்து குழந்தைகள் பிறந்தது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது,” என்று 35 வயதான பெட்ரியா ஆடம் என்ற அந்த பெண் தெரிவித்துள்ளார்.
அவர் நான்கு ஆண் குழந்தைகளையும் ஒரு பெண் குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார். குழந்தைகள் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக ஹிவோட் ஃபானா சிறப்பு மருத்துவமனை தெரிவித்துள்ளது.
“என் மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. என் பிரார்த்தனைகள் நிறைவேறும் வரை மன அழுத்தத்திலும் வேதனையிலும் இருந்தேன்,” என்று பெட்ரியா பிபிசியிடம் கூறினார்.
மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் முகம்மது நூர் அப்துலாஹி, தாயும் குழந்தைகளும் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக தெரிவித்தார். குழந்தைகளின் எடை 1.3 முதல் 1.4 கிலோ வரை இருப்பதாகவும் கூறினார்.
ஒரு கிலோவுக்கும் அதிக எடையுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு உயிர் பிழைக்கும் வாய்ப்பும் ஆரோக்கியமாக வளர வாய்ப்பும் அதிகம் என்று அவர் கூறினார்.
மேலும், பெட்ரியா இயற்கையாகவே கர்ப்பம் அடைந்ததாகவும், செயற்கை கருத்தரிப்பு முறையான ஐவிஎஃப் சிகிச்சை பயன்படுத்தப்படவில்லை என்றும் மருத்துவர் தெரிவித்தார். அந்த மருத்துவமனையில் ஐவிஎஃப் சிகிச்சை வழங்கப்படுவதில்லை என்றும் கூறப்பட்டது.
ஒரே நேரத்தில் பல குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பை ஐவிஎஃப் சிகிச்சை வழங்கக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இயற்கையான முறையில் ஐந்து குழந்தைகள் ஒரே நேரத்தில் கருவுறும் வாய்ப்பு சுமார் 5 கோடியே 50 லட்சத்தில் ஒன்றாகும்.
பட மூலாதாரம், Hiwot Fana Specialised Hospital
படக்குறிப்பு, பெட்ரியா ஆடம்
‘ஒரு குழந்தைக்காக பிரார்த்தனை செய்தேன்’
அந்தப் பெண்ணுக்கு செவ்வாய்க்கிழமை மாலை சிசேரியன் முறையில் பிரசவம் நடைபெற்றதாக மருத்துவர் தெரிவித்தார்.
“கர்ப்பகாலம் முழுவதும் அவருக்கு முறையான மருத்துவ பராமரிப்பு வழங்கப்பட்டது. ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் கருவுற்றிருப்பதாக அவருக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டிருந்தது. முழுமையான மருத்துவ உதவியுடன் அவர் சிகிச்சை பெற்றார்,” என்று டாக்டர் முகம்மது கூறினார்.
தனக்கு ஆரம்பத்தில் நான்கு குழந்தைகள் கருவுற்றிருப்பதாக கூறப்பட்டதாகவும், ஆனால் பிரசவத்தின் போது மேலும் ஒரு குழந்தை இருப்பது தெரியவந்ததாகவும் பெட்ரியா தெரிவித்தார்.
“நான் ஒரு குழந்தைக்காக மட்டுமே பிரார்த்தனை செய்தேன். ஆனால் அல்லாஹ் எனக்கு ஐந்து குழந்தைகளை வழங்கினார்,” என்று நீண்ட கால காத்திருப்பை நினைவுகூர்ந்து அவர் கூறினார்.
முதன்முறையாக தாயான பெட்ரியா, தனது கணவருக்கு ஏற்கனவே வேறு திருமணத்தில் பிறந்த ஒரு குழந்தை இருப்பதாகவும், அந்தக் குழந்தை தங்களுடன் வசித்து வருவதாகவும் தெரிவித்தார்.
“அந்தக் குழந்தை இருந்தாலே போதும், நீ கவலைப்பட வேண்டாம் என்று என் கணவர் அடிக்கடி கூறுவார். ஆனால், கிராமத்தில் உள்ள அனைவரும் எனக்கு குழந்தை இல்லாததைப் பற்றி கேள்வி எழுப்பியதால், மிகவும் வேதனைப்பட்டேன்” என்று அவர் கூறினார்.
“கடந்த காலத்தில் நான் அனுபவித்த வேதனைகள் இப்போது தொலைதூர கனவு போலத் தோன்றுகிறது. அதை நினைவுகூரவே நான் விரும்பவில்லை,” என்றும் அவர் கூறினார்.
“12 ஆண்டுகள் வேதனையிலும் தனிமையிலும் வாழ்ந்தேன். குழந்தைக்காக தொடர்ந்து பிரார்த்தனை செய்தேன். இறுதியாக அல்லாஹ் என் பிரார்த்தனையை கேட்டார்,” என்று அவர் தெரிவித்தார்.
தான் ஒரு சிறிய விவசாயியாக இருப்பதாகவும், தற்போது பெரிதாகியுள்ள குடும்பத்தை எப்படி கவனிப்பேன் என்பது தெரியவில்லை என்றும் பெட்ரியா கூறினார். “ஆனால், என் சமூகமும் அரசும் தரும் ஆதரவின் மூலம் அல்லாஹ் உதவுவார் என்று நம்புகிறேன்,” என்றும் அவர் தெரிவித்தார்.
அந்த “ஐந்து வரங்கள்” என அவர் அழைக்கும் குழந்தைகளுக்கு நயீஃப், அம்மார், முன்சிர், நசீரா மற்றும் அன்சார் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது