• Sat. May 9th, 2026

24×7 Live News

Apdin News

கொழும்பு அணியை 119 ஓட்டங்களால் வெற்றிகொண்டு தேசிய சுப்பர் லீக் சம்பியனானது தம்புள்ளை

Byadmin

May 9, 2026


ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் (SLC) நடத்தப்பட்ட தேசிய சுப்பர் லீக் 4 நாள் கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் தனஞ்சய டி சில்வா தலைமையிலான தம்புள்ளை அணி சம்பியனானது.

கொழும்பு, கண்டி, காலி, தம்புள்ளை ஆகிய நான்கு அணிகளுக்கு இடையில் நடத்தப்பட்டுவந்த தேசிய சுப்பர் லீக் இறுதிப் போட்டியில் கொழும்பு அணியை 119 ஓட்டங்களால் வெற்றிகொண்டு தம்புள்ளை அணி சம்பியன் பட்டத்தை சூடி 50 இலட்சம் ரூபா பணப்பரிசையும் தனதாக்கியது.

உப சம்பியனான சரித் அசலன்க தலைமையிலான கொழும்பு அணிக்கு 30 இலட்சம் ரூபா பணப்பரிசு வழங்கப்பட்டது.

கொழும்பு அணிக்கும் தம்புள்ளை அணிக்கும் இடையில் நடைபெற்ற இறுதிப் போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் நேற்று முடிவடைந்தது.

லீக் சுற்றில் ஆரம்பப் போட்டியைத் தவிர்ந்த மற்றைய போட்டிகளில் கணிசமான மொத்த எண்ணிக்கைகள் பெறப்பட்டது.

ஆனால், இறுதிப் போட்டியில் 222 ஓட்டங்களே ஒரு இன்னிங்ஸில் அதிகபட்சமாக பெறப்பட்ட மொத்த எண்ணிக்கையாகும்.

இறுதிப்   போட்டியில் சொனால் தினூஷ, அக்கில தனஞ்சய, தனஞ்சய லக்ஷான் ஆகிய மூவர் மாத்திரமே அரைச் சதங்களைப் பெற்று துடுப்பாட்டத்தில் பிரகாசித்தனர்.

 

பந்துவீச்சில் 5 விக்கெட் குவியலை கவிந்து பத்திரண மாத்திரமே பதிவு செய்தார்.

ப்ரபாத் ஜயசூரிய, சமோத் பட்டகே, மொஹமத் ஷிராஸ் ஆகியோர் 4 விக்கெட் குவியல்களைப் பதிவு செய்தனர்.

இறுதிப் போட்டியில் தம்புள்ளை அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்களை இழந்து 222 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது.

இரண்டாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 222 ஓட்டங்களைப் பெற்றது.

கொழும்பு அணி முதல் இன்னிங்ஸில் 146 ஓட்டங்களுக்கு சுருண்டதுடன் 299 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடியபோது சகல விக்கெட்களையும் இழந்து 179 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 154 ஓட்டங்களைப் பெற்றிருந்த கொழும்பு அணி கடைசி நாளாள நேற்றைய தினம் 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 6 விக்கெட்களை இழந்து தோல்வியைத் தழுவியது.

இந்த சுற்றுப் போட்டியில் 205 ஓட்டங்களைப் பெற்றதுடன் 17 விக்கெட்களை வீழ்த்திய கவிந்து பத்திரண மிகவும் பெறுமதி வாய்ந்த வீரராகத் தெரிவானார்.

இறுதி ஆட்டநாயகன் விருதையும் கவிந்து பத்திரண வென்றெடுத்தார்.

சிறந்த துடுப்பாட்ட வீரராக சதீர சமரவிக்ரமவும் (384 ஓட்டங்கள்), சிறந்த பந்துவீச்சாளராக சமோத் பட்டகேவும் (13 விக்கெட்கள்) தெரிவாகினர்.

இலங்கை கிரிக்கெட் அணி தெரிவுக் குழுத் தலைவர் ப்ரமோதய விக்ரமசிங்க பரிசில்களை வழங்கினார்.

 

இறுதிப் போட்டி எண்ணிக்கை சுருக்கம்

தம்புள்ளை 1வது இன்: 222 – 9 விக். டிக்ளயார்ட் (சொனால் தினூஷ 51, அஞ்சல பண்டார 40, பவன் ரத்நாயக்க 39, ப்ரபாத் ஜயசூரிய 54 – 4 விக்., ஜனித் லியனகே 18 – 2 விக்., தனஞ்சய லக்ஷான் 42 – 2 விக்.)

கொழும்பு 1வது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 146 (சண்முகநாதன் ஷாருஜன் 44, சரித் அசலன்க 27, கவிஜ கமகே 25, கவிந்து பத்திரண 51 – 5 விக்., அக்கில தனஞ்சய 17 – 3 விக்.)

தம்புள்ளை 2வது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 222 (அக்கில தனஞ்சய 53, நிஷான் மதுஷ்க 43, அஞ்சல பண்டார 32, சமோத் பண்டார 55 – 4 விக்., ப்ரபாத் ஜயசூரிய 16 – 3 விக்.)

கொழும்பு 2ஆவது இன்: வெற்றி இலக்கு 299 ஓட்டங்கள் – சகலரும் ஆட்டம் இழந்து 179 (தனஞ்சய லக்ஷான் 84, சரித் அசலன்க 35, நுவனிது பெர்னாண்டோ 23, மொஹமத் ஷிராஸ் 38 – 4 விக்., நிசல அபேரட்ன 23 – 2 விக்.)

By admin