• Wed. Nov 25th, 2026

24×7 Live News

Apdin News

காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு எதிராக கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு – பின்னணி என்ன?

Byadmin

Nov 25, 2026


தமிழ்நாட்டின் காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு எதிராக கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு - முழு விவரம்

படக்குறிப்பு, காவிரி நதி (கோப்புப் படம்)

    • எழுதியவர், மோகன்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

தமிழ்நாடு அரசு முன்னெடுத்து வரும் காவிரி – குண்டாறு நதிநீர் இணைப்புத் திட்டத்திற்கு தற்காலிக தடை உத்தரவு கோரி தமிழ்நாடு அரசுக்கும் மத்திய அரசுக்கும் எதிராக கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.

அந்தத் திட்டத்தின் முதல் கட்டமான காவிரி – தெற்கு வெள்ளாறு இணைப்புக்குத் தடை கோரியும் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டுமானங்களை நீக்கக் கோரியும் கர்நாடக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. அதோடு, மாநிலத்தில் இருந்து பாய்ந்து செல்லும் உபரி காவிரி நீரை ஒருதலைபட்சமாகப் பயன்படுத்திக் கொள்வதாகவும் கர்நாடக அரசு குற்றம் சாட்டியுள்ளது.

தமிழ்நாட்டுக்குப் பலனளிக்கும் காவிரி (கட்டளை) – வைகை – குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்வது நிறைவடைந்துள்ளதாக மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தின் குறிப்பு தெரிவிக்கிறது.

காவிரி – வைகை – குண்டாறு இணைப்புத் திட்டம் என்றால் என்ன?

மத்திய அரசின் மகாநதி – கோதாவரி – கிருஷ்ணா – பெண்ணை – காவிரி – வைகை – குண்டாறு இணைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தத் திட்டம் உள்ளது. காவிரி ஆற்றின் வெள்ள நீரை, காவிரி – வைகை – குண்டாறு நதிகளை இணைப்பதன் மூலம் தமிழ்நாட்டின் வறட்சி பாதித்த பகுதிகளுக்குத் திருப்பிவிட வேண்டும் என தமிழ்நாடு அரசு தெரிவிக்கிறது. இது திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் உள்ள, மழையை மட்டுமே நம்பியுள்ள விவசாய நிலங்களுக்குப் பெரும் பயனளிக்கும் என்றும் தமிழ்நாடு அரசு குறிப்பிட்டுள்ளது.

தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மாயனூர் கிராமத்தில் கட்டளை அணைக்கட்டு அமைந்துள்ளது. 2008ஆம் ஆண்டு தொடங்கிய இதன் கட்டுமானப் பணிகள் 2014ஆம் ஆண்டு நிறைவடைந்தது. நதிநீர் இணைப்புத் திட்டத்துக்காகவே இந்த அணைக்கட்டு கட்டப்பட்டதாக தமிழ்நாடு நீர்வளத் துறையின் கொள்கைக் குறிப்பு தெரிவிக்கிறது. அதிலிருந்து கால்வாய் மூலம் நீரைத் திருப்பி வைகை மற்றும் குண்டாறு நதிகளுடன் இணைப்பதே இந்தத் திட்டம்.

By admin