9
இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவர் கமல்ஹாசன். அடுத்ததாக அவரது நடிப்பில் அருண்குமார் இயக்கத்தில் உருவாகும் படத்தின் அப்டேட் இன்று மாலை வரும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் விருமாண்டி படத்தில் நடித்தபோது ஏற்பட்ட சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை காதல் பட நடிகர் சுகுமார் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில், “எந்த ஹீரோவும் செய்யாத காட்சி.. விருமாண்டியில் அப்பத்தா இறந்த போர்ஷன் இப்போது பார்த்தாலும் தென் மாவட்டங்களில் அந்தக் காட்சி நிஜ இழவுவீட்டில் (கேதம்) நடக்கும் நிகழ்வுகளை கண்முன்னே நிறுத்தும்.

போகிறபோக்கில் அந்த காட்சிகள் அப்படி ஒரு அரசியலை பேசிவிட்டு போவார் கமல் சார். நீங்கள்லாம் மூணு சாமி கும்புடறவைங்கதானே.. எங்க அப்பத்தா அஞ்சி சாமி கும்பிட சொல்லிருக்கு… நிலம் நீர் காத்து ஆகாயம் நெருப்பு…(இதுக்கு அவர் காட்டி இருக்கு பாவனைகள் அட்டகாசம்) ஒரு சாமி தப்ப விட்டாலும் பஞ்சம் வந்துரும்.. மேல் கதிர் நாட்டுக்கு, நடுக்கதிர் மாட்டுக்கு, வேர் மண்ணுக்கு இப்பிடி விட்டதாலதான் இங்க பார் 15 அடில தண்ணி.
இங்க பணக்காரப்பயலுகலாம் ரத்தக்காட்டேரி மாதிரி தண்ணிய உறிஞ்சி உறிஞ்சி இப்ப இந்த வட்டாரத்திலேயே 250 அடில பம்புசெட்டு போட்டு ..ஊம்…*# வேண்டி இருக்கு.. (லைவ் ரெக்கார்டிங்கில் பேசிய வார்த்தையை பின்பு டப்பிங்கில் உறிஞ்ச வேண்டி இருக்கு என்று மாற்றினார்.) 5 நாட்கள் மாடவிளக்கே பாடலுடன் படமாக்கப் பட்டது .. அதுவரை நடு மண்டையில் சிரைத்த சொட்டையுடன்(continuety) தான் இருந்தார்.
முதல் நாளில் இருந்து யாருடனும் சரியாக சிரிக்கவில்லை பேசவில்லை இறுக்கமாகவே இருந்தார்..சில உதவி இயக்குநர்களை கடுமையாக திட்டக்கூட செய்தார். காட்சிகள் படமாக்கப்பட்டபின் கடைசி நாளில் எல்லோரையும் அழைத்து “எல்லாரும் மன்னிக்கணும்” இது இழவு காட்சி யார் முகத்திலும் சிரிப்பு வரக்கூடாது.. அதான் நானும் அப்படி நடந்துக்கிட்டேன். இயல்பா இருந்தா நீங்களும் இயல்பா இருப்பீங்க அதான்.. கோவப்பட்டேன். அப்போதான் நல்லா வரும்.. ஒத்துழைப்பு கொடுத்தீங்க.. நன்றி என்று சொல்லி கிளம்பினார்” என குறிப்பிட்டிருக்கிறார்.
முன்னதாக விருமாண்டி திரைப்படம் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியானது. அதில் காதல் சுகுமாரும் முக்கியமான ரோலை ஏற்றிருந்தார். அந்தப் படத்தில் அவருக்கு இருந்த திறமையை பார்த்த கமல்ஹாசன்; தனது அடுத்த படமான வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்திலும் சுகுமாருக்கு வாய்ப்பு கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நன்றி : tamil.filmibeat.com