* சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடற்ற செயற் திட்டம்
* கோப்ரேட் நிறுவனங்களின் இலாப நோக்கிலான CSR நலத்திட்டங்களைக் கூட்டாக நிராகரிக்கும் மக்கள்
— — —
திருக்கோவில் உள்ளிட்ட கிழக்கு மாகாணக் கடற்கரைப் பகுதிகளில், குறிப்பாக ஒலுவில் பிரதேசத்தில் இருந்து பொத்துவில் வரை கனிம நிறுவனங்களுக்கு ஆய்வுப் பணிகளுக்கான அனுமதி வழங்கப்பட்டதற்கு எதிராக, 2024 மார்ச் மாதம் முதல் இன்று வரை தீவிரமான உள்ளூர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மக்கள் எதிர்ப்புகளைச் சமாளிக்கும் நோக்கில், இந்த ஆண்டு ஒக்ரேபார் மாதம் பிரம்மாண்டமான இரவு நேர கிரிக்கெட் சுற்றுப்போட்டி (Night Cricket Tournament) ஒன்றை நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது.
இச்சுற்றுப்போட்டியின் லீக் போட்டிகள் இந்த ஒக்ரோபர் மாதம் 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் நடாத்தப்பட்டு, இறுதிப் போட்டி ஒக்ரோபர் 10 ஆம் திகதி தம்பிலுவில் மத்திய கல்லூரி மைதானத்தில் மிக விமரிசையாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இல்மனைட் (Ilmenite) உள்ளிட்ட கனரக கனிம மணல் அகழ்வுத் திட்டங்களுக்கும், அதனைத் தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்கும் மக்கள் தொடர்ச்சியாகத் தீவிர எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர்.
இதனால் பிரதேச மக்களின் மனநிலையை, குறிப்பாக இளையோரின் கவனத்தைத் திசைதிருப்பும் ஒரு தந்திரோபாய வியூகமாகவே இப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை பட்டவர்த்தனமாகியுள்ளது.
இதன் ஒரு கட்டமாகவே, மக்களின் எதிர்ப்பைக் குறைக்கும் நோக்கில் இலங்கைக் கிரிக்கெட் ஜாம்பவான் அரவிந்த டி சில்வா இப்போட்டிக்கு முதன்மை அதிதியாக அழைக்கப்படவிருந்தார்.
அத்துடன் வளங்களைச் சுரண்டத் துடிக்கும் ‘கபிடல் மெற்றல்ஸ்’ (Capital Metals PLC) நிறுவனத்தின் பணிப்பாளர் சபையில் (Board of Directors) அவர் ஒரு முக்கிய உறுப்பினராகவும் அங்கம் வகிக்கின்றார்.
விளையாட்டுப் போட்டியின் போர்வையில் தனது சொந்த நிறுவனத்தின் வர்த்தக ஆக்கிரமிப்பையும் விளம்பர உத்தியையும் தமிழ் இளையோர் மத்தியில் திணிப்பதற்காகவே, அவர் முன்னிலைப்படுத்தப்படவிருந்தார் என்ற அதிர்ச்சியூட்டும் கோப்ரேட் தந்திரோபாயம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மக்கள் எதிர்ப்பின் காரணமாக இப்போட்டி தற்காலிகமாகக் கைவிடப்பட்ட போதிலும், ‘இனிவரும் காலங்களில் இவ்வாறான போட்டிகளை நடாத்தக் கூடாது’ என அரசாங்கமோ அல்லது நீதிமன்றமோ எந்தவொரு எழுத்துப்பூர்வமான உத்தரவாதத்தையும் சட்டப்பூர்வமாக வழங்கவில்லை.
ஏனெனில், இல்மனைட் உள்ளிட்ட கனரக கனிம மணல் அகழ்வுத் திட்டத்திற்குச் சாதகமான ஒரு நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் தொடர்ந்தும் இருந்து வருகின்றது.
இலங்கையின் கிழக்குக் கடற்கரையில் இல்மனைட் உள்ளிட்ட கனிம மணல் அகழ்வு ஆய்வுகளில் ஈடுபட்டுள்ள சர்சைக்குரிய ‘கபிடல் மெற்றல்ஸ்’ நிறுவனத்தின் நேரடி நிதியுதவியுடன், ‘கபிடல் மெற்றல்ஸ் கிரிக்கெட் கப்’ (Capital Metals Cricket Cup) என்ற பெயரிலேயே இப்போட்டித் தொடர் திட்டமிடப்பட்டிருந்தது.
இது, இலங்கை இராணுவத்தின் 242 வது காலாட்படை பிரிவு (242 Infantry Brigade) மற்றும் தம்பிலுவில் எதிரொலி விளையாட்டுக் கழகம் (Ethirole Sports Club) ஆகியவற்றுடன் இணைந்து கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இப்போட்டியில் சாம்பியன் ஆகும் அணிக்கு 4 இலட்சம் ரூபாயும், இரண்டாம் இடத்தைப் பெறும் அணிக்கு 3 இலட்சம் ரூபாயும் என, அந்த சர்வதேச நிறுவனத்தின் மூலம் பெருமளவிலான பணப் பரிசுகளும் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தன.
இதன் மூலம், கடந்த ஜூன் மாதம் கொழும்பு காலிமுகத்திடலில் வெடித்த மக்கள் எதிர்ப்புப் போராட்டங்கள் மற்றும் பிராந்தியத்தில் தொடர்ச்சியாக எழுந்துவரும் கடுமையான எதிர்ப்பலைகளுக்குப் பின்னரும், கனிம நிறுவனம் பின்வாங்கவில்லை என்பது தெளிவாகிறது.
மாறாக, இந்த ஒக்ரோபர் முதல் வாரத்தில் ‘விளையாட்டு’ என்ற போர்வையின் கீழ், தனது விளம்பர உத்தியை மக்கள் மத்தியில் திணிப்பதற்கும், தங்களின் சுரண்டல் முகத்தை மறைப்பதற்கும் அந்நிறுவனம் மிகத் தீவிரமாக முயன்றுள்ளது என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.
இந்தப் பாரிய கனிம மணல் அகழ்வுத் திட்டங்கள் மூலமாக, கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ் – முஸ்லிம் சமூகங்களின் பூர்வீக நிலங்கள், அவர்களின் பாரம்பரிய மீன்பிடித் தொழில் மற்றும் ஒட்டுமொத்த வாழ்வாதார அடித்தளமும் முற்றாகப் பேரழிவிற்குள்ளாகும் என்பதைச் சுட்டிக்காட்டியே மக்கள் தமது ஆக்ரோசமான எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதன் ஒரு கட்டமாக, திருக்கோவில், விநாயகபுரம், தம்பிலுவில் மற்றும் கோரைக்களப்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த உள்ளூர் விளையாட்டுக் கழகங்களும் இளைஞர் அமைப்புகளும் ஒன்றிணைந்து, ‘எமது மண்ணின் கனிம வளங்களைச் சுரண்டும் எந்தவொரு நிறுவனத்தின் நிதியுதவியையும் அல்லது அவர்களால் திணிக்கப்படும் விளையாட்டுப் போட்டிகளையும் ஒருபோதும் ஏற்க முடியாது’ எனப் பகிரங்கமாகப் பிரகடனப்படுத்தியுள்ளனர்.
அத்துடன், இச்சுற்றுப்போட்டியை அவர்கள் முழுமையாகப் புறக்கணிப்பதாகவும் அறிவித்துள்ளனர்.
தற்போதைய அரசியல் சூழலில், இல்மனைட் அகழ்வில் ஈடுபடும் சர்வதேச நிறுவனங்கள் எந்தப் பெயரில் அல்லது எந்தப் போர்வையில் விளையாட்டுப் போட்டிகளையோ, அல்லது சமூகப் பொறுப்புணர்வுத் திட்டங்கள் (CSR Activities) என்ற பெயரிலான நற்பெயர் வாங்கும் உத்திகளையோ கொண்டு வந்தாலும், அதனை எமது மக்கள் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை எனப் பொது அமைப்புகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளன.
இதன் காரண – காரியமாகவே, கனிம நிறுவனங்கள் முல்லைத்தீவு மற்றும் அம்பாறையின் திருக்கோவில் போன்ற புதிய கடற்பரப்புகளை நோக்கி தங்களது சுரண்டல் கரங்களை நீட்டியுள்ளன.
மக்கள் தமது மண்ணையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பதற்காக இப்பிராந்தியங்களில் தற்போது வெடித்துள்ள பெரும் மக்கள் கொந்தளிப்பிற்கு இந்த ஆக்கிரமிப்பு நகர்வே முதன்மைக் காரணமாகும்.
இதற்காக உள்ளூர் மக்களின் ஆதரவை அல்லது தமக்குச் சாதகமான இணக்கப்பாட்டைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில், விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது மட்டுமன்றி, வேறு சில தந்திரோபாயச் சமூக நலத்திட்டங்களையும் இந்நிறுவனம் அண்மையில் முன்னெடுத்துள்ளது.
இதன் ஒரு கட்டமாக, கடந்த செப்ரெம்பர் மாதம் ‘கபிட்டல் மெற்றல்ஸ்’ (Capital Metals) நிறுவனம், இலங்கை கடற்படை மற்றும் திருக்கோவில் பொலிஸ் நிலையத்துடன் இணைந்து திருக்கோவில் பகுதியில் தலைகீழ் உடுகலப்பு முறையிலான குடிநீர் சுத்திகரிப்பு ஆலை ‘ (Reverse Osmosis – RO) ஒன்றையும் அமைத்துக் கொடுத்துள்ளது.
இவ்வாறான திட்டங்கள், வணிக நிறுவனங்களின் கோப்ரேட் சமூகப் பொறுப்புணர்வு (CSR – Corporate Social Responsibility) என்ற கோட்பாட்டின் கீழ் முன்னெடுக்கப்படுபவையாகும்.
பொதுவாக, ஒரு நிறுவனம் ஒரு பிராந்தியத்தில் இலாபம் ஈட்டும் போது, அங்குள்ள மக்களுக்குச் செய்யும் நற்பணிகளையே ‘CSR’ எனக் கூறுவர்.
ஆனால், திருக்கோவில் போன்ற மக்கள் போராட்டக் களங்களில், இந்த ‘CSR’ திட்டங்கள் வெறும் சமூக நலத்திட்டங்களாக அன்றி, நிறுவனத்தின் மீதான மக்களின் கோபத்தைத் தணிக்கும் மற்றும் தங்களைப் பற்றிய ஒரு நேர்மறையான பிம்பத்தைக் (Corporate Image) கட்டியெழுப்பும் உத்தியாகவே பயன்படுத்தப்படுகின்றன.
சுருக்கமாக விளக்கினால், விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது மற்றும் குடிநீர் தாங்கிகளை அமைப்பது போன்ற இலாப நோக்கற்ற மக்கள் சேவைத் திட்டங்கள் மூலமாக, தங்களின் உண்மையான சுரண்டல் முகத்தை மறைத்து, இல்மனைட் ஆக்கிரமிப்புக்கு எதிராக எழும் மக்கள் போராட்டங்களை எதிர்கொள்வதே இந்த நிறுவனத்தின் பிரதான ‘CSR’ உத்தியாகப் பார்க்கப்படுகிறது.
–முறையற்ற சுற்றுப்புறச் சூழல் அறிக்கை —
கனிம மணல் அகழ்வினால் இப்பிரதேசத்தின் தனித்துவமான கடற்கரை மணல் மேடுகள் (Sand Dunes) அழிக்கப்படும். இவைதான் கடல் கொந்தளிப்பு மற்றும் சுனாமி போன்ற இயற்கை அனர்த்தங்களின் போது கிராமங்களைப் பாதுகாக்கும் இயற்கை அரணாக உள்ளன.
கடலரிப்பு மற்றும் நிலத்தடி நீர் பாதிப்பு: பாரியளவில் அகழ்வுகள் நடக்கும் போது கடல் நீர் உட்புகுந்து நிலத்தடி நீர் உவர்ப்பாகும் ஆபத்துள்ளது.
அடிப்படை உரிமை மீறல்கள் (Fundamental Rights Violations)
இலங்கை அரசியலமைப்பின் 14(1)(g) பிரிவின் கீழ் குடிமக்கள் தங்களுக்குரிய வாழ்வாதாரத் தொழிலை சுதந்திரமாகச் செய்ய உரிமையுண்டு.
இப்பிரதேச மக்களின் பிரதான ஜீவனோபாயமாக விளங்குவது கடற்றொழிலும் விவசாயமுமே ஆகும். கனிம அகழ்வுத் திட்டங்கள் இந்த பூர்வீக நிலங்களையும் கடலோரப் பகுதிகளையும் ஆக்கிரமிப்பதால், மக்களின் சுயதொழில் செய்யும் அடிப்படை உரிமை நேரடியாக மீறப்படுகிறது.
ஆரோக்கியமான, மாசுபடாத சூழலில் வாழ்வது ஒவ்வொரு மனிதனினதும் அடிப்படை உரிமையாகும். சுற்றுச்சூழல் சமநிலை குலைக்கப்படும் போது இவ்வுரிமை மறுக்கப்படுகிறது.
–மனித உரிமை மீறல்கள் (Human Rights Violations)–
சர்வதேச மனித உரிமை விதிகளின்படி, ஒரு சமூகத்தின் பூர்வீக வளங்களை அகழும் போது அப் பிரதேச மக்களின் ‘முன்னறிவித்தலுடனான சுதந்திரமான சம்மதம்’ (Free, Prior and Informed Consent – FPIC) பெறப்பட வேண்டும்.
இராணுவ மயமாக்கல் மூலம் அச்சுறுத்தல்: கனிம நிறுவனங்கள் தங்களின் திட்டங்களை முன்னெடுக்க இலங்கை இராணுவம் மற்றும் பொலிஸாரைக் கூட்டிணைத்து விளையாட்டுப் போட்டிகள், குடிநீர் திட்டங்களை நடத்துவது, மக்கள் மத்தியில் தார்மீக அச்சத்தை ஏற்படுத்தி, தங்களது நியாயமான எதிர்ப்புப் போராட்டங்களை நசுக்கும் மனித உரிமை மீறல் உத்தியாகவே பார்க்கப்படுகிறது.
குறிப்பாக இலாபத்தை மட்டும் நோக்காகக் கொண்ட கோப்ரேட் நிறுவனங்களின் இத்தகைய கனிமச் சுரண்டல்கள், இயற்கை அரண்களை அழித்து ஈழத் தமிழர்களின் பூர்வீக நிலவுரிமையையும் வாழ்வாதாரத்தையும் அச்சுறுத்துவதால் இதுவொரு பாரிய மனித உரிமைச் சவாலாக உருவெடுத்துள்ளது.
அதேவேளை, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கனிம மணல் அகழ்வு உள்ளிட்ட இயற்கை வளங்களை அகழ்வு செய்வதற்குத் தடை விதிக்கவில்லை.
இதன் மூலம், இல்மனைட் உள்ளிட்ட கனிம மணல் அகழ்வுத் திட்டங்களை வணிகரீதியாக முன்னோக்கி நகர்த்துவதிலேயே அரசாங்கம் குறியாக உள்ளது என்பது உறுதியாகிறது.
இதேவேளை, மக்கள் போராட்டங்கள் குறித்து ஜனாதிபதி அநுரகுமார, நேற்று ஞாயிற்றுக்கிழமை 11 ஆம் திகதி நிக்கவெரட்டியவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றும்போது, “அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் சில போராட்டங்களுக்கும், சமூக வலைத்தளப் பிரசாரங்களுக்கும் பின்னால் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் நிதியுதவிகள் இருக்கலாம்” என்ற குற்றச்சாட்டைக் முன்வைத்துள்ளார்.
மக்களது போராட்டங்களின் நியாயத்தன்மையை நேரடியாக எதிர்கொள்வதைத் தவிர்த்து, அவற்றின் உண்மையான பின்னணியைத் திசைதிருப்பும் வகையிலான ஒரு தர்க்கத்தையே அரசாங்கம் கையாண்டு வருகின்றது என்பது இதன் ஊடாகத் தெளிவாகத் தெரிகிறது.
பிற்குறிப்பு
—- —- —
லங்கா மினரல் சாண்ட்ஸ் (Lanka Mineral Sands) கூட்டுத்தாபனமானது முதன்முதலில் 1957 ஆம் ஆண்டிலேயே உருவாக்கப்பட்டது என்பதுடன், அதன் வர்த்தகரீதியான உற்பத்திகள் 1963 ஆம் ஆண்டு முதல் ஆரம்பமாகியிருந்தன.
இந்த நிறுவனம், 1992 ஆம் ஆண்டிலேயே இது ‘லங்கா மினரல் சாண்ட்ஸ் லிமிடெட்’ (LMSL) எனப் பெயர் மாற்றம் பெற்றது.
திருகோணமலை – புல்மோட்டைப் பகுதியில் பல தசாப்த கால நீண்ட வரலாற்றைக் கொண்ட இந்த அகழ்வாராய்ச்சிகள் காரணமாக, அங்கிருந்த கனிம மணல் வளம் தற்போது சடுதியாகக் குறைவடைந்து வருகின்றது.