‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ அமைப்பின் நிறுவனர் அபிஜித் தீப்கேவை டெல்லி காவல்துறை தடுத்து வைத்துள்ளது.
டெல்லியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (சரத் பவார் பிரிவு) செய்தித் தொடர்பாளர் அனிஷ் கவாண்டேவின் இல்லத்தில் அபிஜித் தீப்கே தங்கியிருந்தார். அங்கிருந்து, ‘லஹரா தோ திரங்கா’ (மூவர்ணக் கொடியை ஏற்றுவோம்) எனும் பேரணியின் ஒரு பகுதியாக, கையில் மூவர்ணக் கொடியுடன் வெளியே வந்தபோது, அங்கு இருந்த காவல்துறை அதிகாரி, “நாங்கள் உங்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தடுத்து வைக்கிறோம்” என்று கூறினார்.
தீப்கே, மூவர்ணக் கொடியை ஏந்தியபடி கன்னோட் பிளேஸில் உள்ள சென்ட்ரல் பார்க்கிற்குச் செல்ல திட்டமிட்டிருந்தார்.
அவர் சென்ட்ரல் பார்க்கிற்கோ அல்லது புதுடெல்லியின் வேறு எந்த இடத்திற்கோ செல்ல முடியாது என்று காவல்துறை அதிகாரி தெரிவித்தார். அதற்குப் பதிலளிக்கும் விதமாக, “அப்படியானால், நான் மூவர்ணக் கொடியை ஏற்றுவதற்கு எங்கு செல்ல வேண்டும்?” என்று தீப்கே கேட்டார்.
அதற்கு அந்த அதிகாரி, “அதுகுறித்து பிறகு சொல்கிறோம். இப்போதைக்கு நாங்கள் உங்களைத் தடுத்து வைக்கிறோம்” என்று கூறினார்.
அதற்கு தீப்கே, “ஆனால், நான் இதுவரை எந்தச் சட்டத்தையும் மீறவில்லையே!” என்று வாதிட்டார்.
தான் எந்தச் சட்டத்தை மீறினேன் என்று தீப்கே மீண்டும் மீண்டும் கேட்டபோதும், காவல்துறை அதிகாரி அதற்கு எந்தப் பதிலும் அளிக்கவில்லை.
பட மூலாதாரம், ANI
முன்னதாக, டெல்லி காவல்துறை குழு ஒன்று தீப்கேவிடம் நோட்டீஸ் வழங்கியிருந்தது. இது குறித்து புது டெல்லி துணை காவல் ஆணையர் சச்சின் சர்மா கூறுகையில், “புதுடெல்லி மாவட்டத்தில் பிஎன்எஸ்எஸ் சட்டப்பிரிவு 163 அமலில் உள்ளது. இந்தச் சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டுள்ள அனைத்துக் கட்டுப்பாடுகளும் நடைமுறையில் உள்ளன. எனவே, அனைவரும் சட்டத்திற்கு உட்பட்டு நடக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவித்தார்.
“அபிஜித் தீப்கேவிடம் சட்டத்திற்கு உட்பட்டு நடக்குமாறு அறிவுறுத்தி, நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. கன்னோட் பிளேஸ் பகுதியில் பிஎன்எஸ்எஸ் சட்டப்பிரிவு 163 அமலில் இருப்பது அவருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.”
“இந்தச் சட்டத்தின் கீழ் என்னென்ன கட்டுப்பாடுகள் வருகின்றன என்பது அவருக்கு விளக்கப்பட்டுள்ளது. தற்போது பண்டிகைக் காலம் என்பதால், இதைக் கருத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர் விதிகளைப் பின்பற்றத் தவறினால், சட்டப்படி எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.”
வெள்ளிக்கிழமை மாலை கன்னோட் பிளேஸின் சென்ட்ரல் பார்க்கில் ‘லஹர் தோ திரங்கா’ என்ற பெயரில் போராட்டம் நடத்த அபிஜித் தீப்கே அழைப்பு விடுத்திருந்தார்.