5
கிரீஸில் உள்ள சிஃப்னோஸ் (Sifnos) தீவில் திங்கட்கிழமை நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், தேனிலவுக்காக வந்திருந்த இளம் இங்கிலாந்து தம்பதியினரும் அவர்களது விமானியும் உயிரிழந்ததாக கிரேக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பலியான தம்பதியினர் அலெக்சாண்டர் குரோமி (Alexander Cromie) மற்றும் மேரி எபர்ட் (Marie Ebert) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் ஏதென்ஸ் நகருக்கு அருகிலுள்ள மார்கோபௌலோ (Markopoulo) என்ற கிராமத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் சிஃப்னோஸ் தீவுக்குப் பயணித்துள்ளனர்.
இந்தத் தனியார் ஹெலிகாப்டர் தரையிறங்கும் தளத்துக்கு மிக அருகிலேயே விழுந்து நொறுங்கியது. இதில் தம்பதியினருடன் கிரேக்க நாட்டைச் சேர்ந்த விமானியும் உயிரிழந்தார்.
உள்ளூர் நேரப்படி மாலை 06:15 மணிக்கு ஹெலிகாப்டர் தரையிறங்க வேண்டிய நிலையில், அதற்குச் சற்று முன்னதாகவே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்து நடந்த இடத்திற்குச் சென்ற சிஃப்னோஸ் துணை மேயர் மனோலிஸ் ஃபவுண்டௌலாகிஸ் கூறுகையில், விமானத்தின் சிதைந்த பாகங்களைத் தவிர அங்கு “எதுவுமே மிஞ்சவில்லை” என்று தெரிவித்தார். தரையிறங்குவதற்கு முன்னதாக ஹெலிகாப்டரில் இருந்து “விசித்திரமான எஞ்சின் சத்தம்” வந்ததாக அப்பகுதி மக்கள் விவரித்துள்ளனர்.
அலெக்சாண்டர் குரோமி பணியாற்றிய பிளாக்ஸ்டோன் (Blackstone) என்ற சொத்து மேலாண்மை நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்கள் சக பணியாளர் அலெக்ஸ் குரோமி மற்றும் அவரது மனைவி மேரியின் மறைவு அதிர்ச்சியளிக்கிறது” என்று தெரிவித்துள்ளனர். மேலும், அலெக்ஸ் அனைவராலும் நேசிக்கப்பட்டவர் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த விபத்துக்கான சரியான காரணம் என்ன என்பது குறித்து தற்போது விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.