• Sat. May 23rd, 2026

24×7 Live News

Apdin News

கிருஷ்ணராயபுரம் அருகே பரபரப்பு: விவசாயி மீது சரமாரி துப்பாக்கி சூடு- மர்ம நபர்கள் அட்டூழியம்

Byadmin

May 23, 2026


கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தை அடுத்த கடவூர், சேவாப்பூர் பகுதி வளையப்பட்டியை சேர்ந்தவர் கருணகிரி (வயமு 48). விவசாயியான இவர் தனது மனைவி மற்றும் மூன்று பெண் குழந்தைகள், ஒரு மகன் ஆகிய நான்கு பேருடன் விவசாயம் செய்து கொண்டு வளையபட்டி களத்து வீட்டில் வசித்து வருகிறார்.

இடுப்பில் குண்டு பாய்ந்தது

நேற்று நள்ளிரவில் பணிகளை முடித்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் களத்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அங்குள்ள பள்ளத்து பகுதியில் வந்தபோது, அவரை பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத நபர்கள் நாட்டுத் துப்பாக்கியால் கருணகிரியை சரமாரியாக சுட்டனர். இதில் வாகனத்தில் இருந்து நிலைகுலைந்து அவர் கீழே விழுந்தார்.

மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் அவருக்கு பின் இடுப்புப் பகுதியில் 10 இடங்களில் பால்ரஸ் குண்டுகள் துளைத்து ரத்தக்காயம் ஏற்பட்டது.

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சோதனை

சத்தம் கேட்டு ஓடிவந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் உடனடியாக கருணகிரியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் சோதனை செய்ததில் உடலின் இடுப்பின் பின் பகுதியில் பால்ரஸ் குண்டுகள் துளையிட்டு உடலில் இருப்பதாக தெரிவித்தனர்.

இன்று அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய உள்ள நிலையில் உள் நோயாளியாக தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பாலவிடுதி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டுத்துப்பாக்கியில் சுட்டவர்கள் முன் விரோதம் காரணமாகவா அல்லது வேறு ஏதும் பிரச்சினைகளால் அவரை சுட்டு உள்ளனரா? என பல்வேறு கோணங்களில் சந்தேகப்படும் நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

By admin