பட மூலாதாரம், India Shipping Ministry/X
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
இந்தியாவின் சுமார் 81,000 கோடி மதிப்புள்ள கிரேட் நிகோபார் திட்டம் தொடர்பாக மத்திய அரசை கடுமையாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல்காந்தி விமர்சித்துப் பேசியுள்ளார்.
“இது நம்முடைய வாழ்நாளில் நமது நாட்டின் இயற்கை மற்றும் பழங்குடி பாரம்பரியத்துக்கு எதிராக நடத்தப்படும் மிகப்பெரிய ஊழல் மற்றும் மிகவும் மோசமான குற்றமாகும்,” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் தென்கிழக்கு பகுதியான நிகோபார் தீவிற்கு ராகுல் காந்தி சென்றதைத் தொடர்ந்து கிரேட் நிகோபார் திட்டம் மீண்டும் விவாதப் பொருளாகியுள்ளது.
இந்தியாவின் தொலைதூர தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள கிரேட் நிகோபார் தீவில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்தில் சரக்கு மாற்றுத் துறைமுகம், விமான நிலையம், நகரம் மற்றும் மின் நிலையம் ஆகியவை அடங்கும்.
பொருளாதார மற்றும் உத்திசார் கண்ணோட்டத்தில், குறிப்பாக இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்துவதில் இந்தத் திட்டம் முக்கியமானது என்று அரசாங்கம் கூறுகிறது.
ஆனால் ஷொம்பென் மற்றும் நிகோபரீஸ் பழங்குடிகள் இந்தத் திட்டத்தால் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என ராகுல் காந்தி கூறுகிறார்.
கிரேட் நிகோபார் திட்டம் பற்றி ராகுல் காந்தி விமர்சனம்
பட மூலாதாரம், Getty Images
இது தொடர்பாக சமூக ஊடகங்களில் ராகுல் காந்தி பதிவிட்ட காணொளி ஒன்றில், “அரசாங்கம் இதனைத் திட்டம் எனக் கூறுகிறது. ஆனால் நான் பார்த்தது திட்டம் அல்ல. லட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்பட உள்ளன. இது 160 சதுர கிலோமீட்டர் அளவிலான மழைக்காடுகளை அழிப்பதற்கான முடிவு. இது தங்களின் வீடுகளை இழக்க உள்ள சமூகங்களைப் புறக்கணிப்பதாகும்.” என்றார்.
கிரேட் நிகோபார் தீவுகளின் காடுகளுக்குச் சென்ற ராகுல் காந்தி, இந்த மரங்கள் “மக்களின் நினைவுகளை விடவும் பழமையானவை.” என்றார்.
இந்தக் காடுகள் பல தலைமுறைகளாக வளர்ந்திருக்கின்றன எனக் கூறிய அவர் இங்கு வாழும் அழகான மக்களுக்கு அவர்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்றும் தெரிவித்தார்.
“இந்தத் தீவில் வாழும் அனைவரும் இந்தத் திட்டத்திற்கு எதிராக உள்ளனர். ஆனால் அவர்கள் கலந்தாலோசிக்கப்படவில்லை. இந்த நிலங்களுக்காக தாங்கள் என்ன இழப்பீடு பெறுவோம் என்பது கூட அவர்களுக்குத் தெரியவில்லை. நான் இங்கு வருவதை அரசாங்கம் ஏன் விரும்பவில்லை என்பதும் நான் இங்கு வந்தடைவதைத் தடுக்க அவ்வளவு பெரிய முயற்சிகளை ஏன் எடுத்தது என்பதும் இப்போது எனக்குப் புரிகிறது.” என்று ராகுல் காந்தி கூறினார்.
இதனை ‘வெளிப்படையான கொள்ளை’ எனக் குறிப்பிடும் ராகுல் காந்தி இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புமாறு அந்த தீவு மக்கள் தன்னிடம் கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.
“நான் அதனை மகிழ்ச்சியுடன் செய்வேன். ஒட்டுமொத்த நாட்டிற்கும், குறிப்பாக இளைஞர்களுக்கு இது தெரிவிக்கப்பட வேண்டும். ஏனெனில் இது அவர்களின் எதிர்காலம்,” என்றார்.
கடந்த செவ்வாய்கிழமை நிகோபார் மாவட்டத்தில் உள்ள கேம்ப்பெல் பேவை அடைந்த ராகுல் இந்தத் திட்டத்தை எதிர்த்து போராடி வரும் பழங்குடி தலைவர்களைச் சந்தித்தார்.
மத்திய அரசு வெளிப்படைத்தன்மையை பராமரிக்காமல், சுற்றுச்சூழல் ஆபத்துகளைப் நிராகரித்து, பழங்குடிகளின் உரிமைகளைத் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக சில பழங்குடி சமூகங்கள் குற்றம் சாட்டியுள்ளன.
ராகுல் விமர்சனத்திற்கு பாஜக பதில் என்ன?
பட மூலாதாரம், ANI
இந்தத் திட்டத்தை எதிர்ப்பதற்காக ராகுல் காந்தியை பாஜக விமர்சித்துள்ளது.
இது தொடர்பாக பாஜக தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “இது இந்தியாவின் முக்கியத்துவம் வாய்ந்த உத்திசார் திட்டம். இதனை ராகுல் காந்தி எதிர்க்கிறார். அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் ரூ.92,000 கோடி மதிப்புள்ள கிரேட் நிகோபார் திட்டத்தை மோடி அரசு உருவாக்கி வருகிறது.”
“இது வெறும் துறைமுகம் மட்டுமல்ல, இந்தியாவின் கடல்சார் எல்லைகளைப் பாதுகாப்பதைப் பற்றியது. இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் வலிமை பற்றிய பிரகடனம், சீனாவுக்கான நேரடி பதில். எனினும் இந்தத் திட்டம் உருவாக்கப்படக்கூடாது என சீனா விரும்புகிறது. ஆச்சர்யமளிக்கும் விதமாக ராகுல் காந்தியும் விரும்பவில்லை.” என்கிறது பாஜகவின் பதிவு.
மேலும் அந்த பதிவில், “நாடு முன்னேற்றத்தைப் பற்றி பேசும்போது காங்கிரஸ் தடங்கல்களை ஏற்படுத்துகிறது. வலிமையடைவதைப் பற்றி இந்தியா பேசும்போது ராகுல் காந்தி எதிர்த்து நிற்கிறார். இப்போது எழுகிற கேள்வி என்னவென்றால் யாருடைய கட்டளையின்பேரில் இந்த எதிர்ப்பு நடத்தப்படுகிறது, இந்தியாவின் பாதுகாப்பை வலுவிழக்கச் செய்வது யாருடைய நலனுக்கானது?” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும் பிகார் முதலமைச்சருமான சாம்ராட் சௌத்ரியும் ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
“சீனா மீதான காங்கிரஸின் பாசம் மீண்டுமொரு முறை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கிரேட் நிகோபார் திட்டம் என்பது இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வலிமையின் அடையாளம். இதனை எதிர்க்க வேண்டும் என்பதன் பின் உள்ள ராகுல் காந்தியின் திட்டம் அம்பலப்பட்டுள்ளது. கேள்வி என்னவென்றால் சீனாவை பலவீனப்படுத்தும் திட்டம் பற்றி காங்கிரஸ் ஏன் அக்கறை கொள்கிறது என்பது தான்,” என அவர் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்த்துள்ளார்.
கிரேட் நிகோபார் திட்டம் சீனாவுக்கான இந்தியாவின் பதிலடியா?
கிரேட் நிகோபார் பகுதியில் மலாக்கா நீரிணை மிக முக்கியமான கடல் வழித்தடமாகும். புவிசார் அரசியலில் இது முக்கியமான பகுதியாகும்.
இந்தியப் பெருங்கடலில் செல்வாக்கு செலுத்துவது இந்தியா மற்றும் சீனாவுக்கு முக்கியமான உத்திசார் இலக்காக உள்ளது.
சீனாவின் முத்துமாலை (String of Pearls) உத்திக்குப் பதிலடியாக கிரேட் நிகோபார் திட்டம் பார்க்கப்படுகிறது.
சீனாவுக்கு ஹாங்காங் போல இந்தத் திட்டம் முதலீடுகளை வரவழைத்து, வர்த்தகத்தை ஊக்குவித்து இந்தியாவின் கடல்சார் வலிமையை வலுப்படுத்தும் என நிபுணர்கள் நம்புகின்றனர்.
கிரேட் நிகோபார் திட்டம் என்றால் என்ன?
பட மூலாதாரம், Getty Images
166 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் செயல்படுத்தப்பட உள்ள இந்தத் திட்டத்தில் ஒரு சரக்கு பெட்டக மாற்று முனையம், மின் நிலையம், விமான நிலையம் மற்றும் புதிய நகரம் ஆகியவை உள்ளடங்கும். இந்தப் பிராந்தியத்தை இந்தியப் பெருங்கடல், சூயஸ் கால்வாய் மற்றும் இதர முக்கியமான உலகளாவிய வர்த்தக வழித்தடங்களுடன் இணைப்பதற்காக இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகவும் பரபரப்பான கடல் வழித்தடமான மலக்கா நீரிணை அருகே உருவாக்கப்படும் இந்தத் திட்டம் சர்வதேச வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை ஊக்குவிக்கும் என்று அரசாங்கம் கூறுகிறது.
30 ஆண்டுகளில் இந்தத் திட்டம் முடிக்கப்படும் போது அந்த தீவில் 6.5 லட்சம் மக்கள் வசிப்பார்கள் என அரசாங்கம் கணிக்கிறது.
பல பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்தத் திட்டம் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்வதற்கான இந்தியாவின் நோக்கத்தின் ஒரு அங்கமாகும் என வல்லுநர்கள் நம்புகின்றனர்.
இந்தத் திட்டத்தால் பழங்குடிகளுக்கு என்ன ஆபத்து?
பட மூலாதாரம், Anthropological Survey of India
ஆனால் தங்களின் நிலம், கலாசாரம் மற்றும் வாழ்க்கை முறையை இழக்கக்கூடும் என்கிற அச்சத்தில் இருக்கும் தீவு மக்களிடம் இந்த திட்டம் கவலைகளை அதிகரித்துள்ளது.
உலகின் மிகவும் தனித்து வாழும் மற்றும் பாதிக்கப்பட்ட பழங்குடிகளின் இருப்பிடமாக அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள் உள்ளன. இதில் ஐந்து குழுக்கள் ‘குறிப்பாக பாதிக்கப்படக்கூடியவர்கள்’ என வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதில் ஜராவா, வடக்கு சென்டினலீஸ், கிரேட் அந்தமானீஸ், ஓங் மற்றும் ஷொம்பென் பழங்குடிகள் அடங்குவர்.
ஜராவா மற்றும் வடக்கு சென்டினலீஸ் பழங்குடிகள் வெளி உலகிடமிருந்து மிகவும் தனிமைப்பட்டுள்ளனர். கிரேட் நிகோபார் தீவில் வசிக்கும் 400 ஷொம்பென் மக்கள் வெளிப்புற அழுத்தங்களால் தங்களின் வாழ்க்கை முறையை இழக்கும் ஆபத்தில் உள்ளனர்.
நாடோடிக் பழங்குடிகளான அவர்களில் பெரும்பாலானவர்கள் காடுகளின் அடர்ந்த பகுதிகளில் வசிக்கக்கூடியவர்கள். இந்தத் திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தத் திட்டத்திற்காக தீவின் ஒட்டுமொத்த பரப்பளவில் 130 சதுர கிலோமீட்டர் அல்லது 14% இடம் மட்டுமே சீரமைக்கப்படும் என இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கூறுகிறது.
எனினும் 9.5 லட்சத்துக்கும் அதிகமான மரங்கள் இங்கு உள்ளன. உண்மையான எண்ணிக்கை அதைவிட அதிகமாக இருக்கலாம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
சுற்றுச்சூழல் வல்லுநர்கள் எழுப்பும் கவலைகள்
2024-ஆம் ஆண்டில் 39 சர்வதேச வல்லுநர்கள் இந்தத் திட்டம் ஷொம்பென் பழங்குடிகளுக்கு மரண தண்டனை வழங்குவதைப் போன்றது என எச்சரித்திருந்தனர்.
இந்தத் திட்டத்தால் இந்த தீவைச் சாராத வெளியாட்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனக் கூறும் அவர்கள், அதனால் நோய்ப்பரவல் அதிகரித்து அது பழங்குடிகளின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கும் என்கின்றனர். சுற்றுச்சூழல் மீது இந்தத் திட்டம் ஏற்படுத்த வல்ல கடுமையான பாதிப்புகளைப் பற்றியும் பேசியுள்ளனர்.
இந்தத் திட்டம் தொடர்பாக பிபிசி மராத்தியிடம் பேசிய சூழலியலாளர் மாதன் கட்கில், “காட்டின் ஒரு பகுதி தான் இந்தத் திட்டத்திற்காக சீரமைக்கப்படும் என அரசாங்கம் கோருகிறது. ஆனால் நீங்கள் உருவாக்கும் உள்கட்டமைப்பு கூடுதல் மாசுபாட்டை உருவாக்கும். அது ஒட்டுமொத்த வாழ்விடத்தையும் பாதிக்கும்.” எனத் தெரிவித்தார்.
இந்தத் தீவின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்த்துள்ள கலத்தியா விரிகுடா(Galathea Bay)கடுமையாகப் பாதிக்கப்படும் என சூழலியலாளர்கள் கூறுகின்றானர். இது பல நூற்றாண்டுகளாக ராட்சத லெதர்பேக் கடல் ஆமைகளின் முட்டையிடும் தளமாக இருந்து வருகிறது.
உப்புநீர் முதலைகள், வாட்டர் மானிட்டர்ஸ் என்கிற ஒரு வகையான பல்லி இனம், மீன் மற்றும் அரிய வகை பறவைகள் காணப்படும் பகுதியில் இந்தத் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளதாக சமூக சூழலியலாளர் முனைவர் மனிஷ் சான்டி பிபிசி மராத்தியிடம் தெரிவித்தார்.
ஆனால் இந்த உயிரினங்களின் முட்டையிடும் மற்றும் இனப்பெருக்கம் செய்யும் பகுதிகளில் எந்த மாற்றமும் இருக்காது என அரசாங்கத்தின் அறிக்கை ஒன்று கூறுகிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு