ஐபிஎல் 2026 தொடரின் 60வது லீக் சுற்றுப் போட்டியில் இன்று (மே 16) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது குஜராத் டைட்டன்ஸ். கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது கேகேஆர்.
குஜராத் டைட்டன்ஸ் இதற்கு முன் விளையாடிய 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்தது. 12 போட்டிகளில் 8 வெற்றிகளுடன் 16 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருந்த அந்த அணி, இந்தப் போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றிருக்க முடியும். ஆனால், டைட்டன்ஸ் அணியால் அதை செய்ய முடியவில்லை.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 12 போட்டிகளில் 11 புள்ளிகள் பெற்றிருக்கிறது. புள்ளிப் பட்டியலில் அந்த அணி 7வது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அந்த அணியில் பிரசித் கிருஷ்ணாவுக்குப் பதிலாக தமிழ்நாடு ஸ்பின்னர் சாய் கிஷோர் பிளேயிங் லெவனில் இடம்பெற்றிருக்கிறார்.
முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 247 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ஃபின் ஆலன், அங்க்ரிஷ் ரகுவன்ஷி மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் அரைசதங்கள் அடித்தனர்.
அடுத்து விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. அந்த அணியின் டாப் 3 பேட்டர்களான சாய் சுதர்ஷன், ஷுப்மன் கில் மற்றும் ஜாஸ் பட்லர் அரைசதம் அடித்தனர்.
தன்னுடைய 200வது ஐபிஎல் போட்டியில் ஆடிய ஸ்பின்னர் சுனில் நரைன் சிறப்பாகப் பந்துவீசி 4 ஓவர்களில் 29 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். அவருடைய சிக்கனமான பந்துவீச்சு கேகேஆர் வெற்றி பெறுவதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
அதிரடியாக ஆடிய ஃபின் ஆலன்
கடந்த வாரம் டெல்லிக்கு எதிரான போட்டியில் சதமடித்து அசத்திய ஃபின் ஆலன், இந்தப் போட்டியிலும் தன் அதிரடியால் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு நல்ல தொடக்கம் ஏற்படுத்திக் கொடுத்தார்.
பவர்பிளேவில் தொடர்ந்து விக்கெட்டுகள் வீழ்த்திக்கொண்டிருந்த குஜராத் டைட்டன்ஸ் பௌலர்களான மொஹம்மது சிராஜ் மற்றும் ககிஸோ ரபாடாவுக்கு எதிராகவும் அதிரடி காட்டினார் அவர்.
14 பந்துகள் சந்தித்து 14 ரன்கள் எடுத்து ரஹானே அவுட்டான பிறகு, ஆலன் உடன் ஜோடி சேர்ந்தார் அங்க்ரிஷ் ரகுவன்ஷி. அதன் காரணமாக பவர்பிளேவில் 1 விக்கெட் இழப்புக்கு 56 ரன்கள் எடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக நன்கு ஆடிய ஆலனை சுழற்பந்துவீச்சு மூலம் வீழ்த்த முடியும் என்று நம்பிய ஷுப்மன் கில்லுக்கும் அதிர்ச்சிகொடுத்தார் ஆலன். ரஷீத் கான் வீசிய முதல் மூன்று பந்துகளிலும் 16 ரன்கள் எடுத்தார் ஆலன். முதலிரு பந்துகளிலும் இரு சிக்ஸர்கள் விளாசியவர், மூன்றாவது பந்தில் பவுண்டரி அடித்தார். அந்த பவுண்டரியின் மூலம் தன் அரைசதத்தை நிறைவு செய்தார் ஆலன். அதற்கு அவர் 21 பந்துகளே எடுத்துக்கொண்டார்.
அரைசதம் அடித்த பிறகு ஆலன் ஆடிய வேகம் மேலும் கூடியது. ஜேசன் ஹோல்டர், சாய் கிஷோர், அர்ஷத் கான் என அனைவரின் பந்துகளிலும் சிக்ஸர்கள் விளாசிக்கொண்டே இருந்தார் ஆலன். குறிப்பாக அர்ஷத் கான் வீசிய ஒரே ஓவரில் 3 சிக்ஸர்கள், 1 பவுண்டரி என 22 ரன்கள் விளாசினார் அவர்.
தொடர்ந்து சிக்ஸர் மழை பொழிந்துகொண்டிருந்த ஆலன், சாய் கிஷோர் பந்துவீச்சில் ரஷீத் கான் வசம் கேட்சாகி வெளியேறினார். 35 பந்துகள் சந்தித்த அவர் 4 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்கள் உள்பட 93 ரன்கள் எடுத்தார்.
குஜராத் டைட்டன்ஸ் ஃபீல்டிங்கும் ஆலனின் இந்த அதிரடிக்குப் பெருமளவு உதவியது. அவர் 14 ரன்கள் எடுத்திருந்தபோது ஜேசன் ஹோல்டர் சற்றே கடினமான ஒரு கேட்ச் வாய்ப்பைத் தவறவிட்டார். பின்னர் ஆலன் 33 ரன்களில் இருந்தபோது கிடைத்த எளிமையான வாய்ப்பைத் தவறவிட்டார் சிராஜ். அந்தப் பந்தில் சிங்கிள் எடுத்த ஆலன், அடுத்த 17 பந்துகளில் 59 ரன்கள் விளாசினார்.
ஆலன் அவுட்டான பிறகு ஜோடி சேர்ந்த அங்க்ரிஷ் ரகுவன்ஷி, கேமரூன் கிரீன் இருவரும் அந்த அதிரடியைத் தொடர்ந்தார்கள். வேகம், ஸ்பின் என அனைத்தையுமே அடித்து விளையாடியது இந்தக் கூட்டணி, 3வது விக்கெட்டுக்கு அவர்கள் இருவரும் இணைந்து 53 பந்துகளில் 108 ரன்கள் அடித்தார்கள்.
நாலாப்புறமும் பந்துகளை அடித்த அங்க்ரிஷ் ரகுவன்ஷி, 33 பந்துகளில் அரைசதம் அடித்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர் 44 பந்துகளில் 82 ரன்கள் விளாசினார். இந்த இன்னிங்ஸில் அவர் 4 பவுண்டரிகளும் 7 சிக்ஸர்களும் விளாசினார். சிராஜ் வீசிய 18வது ஓவரில் மட்டும் அவர் 3 சிக்ஸர்களும், 1 பவுண்டரியும் அடித்தார் அவர். ஸ்கூப், ரிவர்ஸ் ஹிட் என பல வகையான ஷாட்களையும் ஆடி டைட்டன்ஸ் பௌலர்களுக்கு நெருக்கடி ஏற்படுத்தினார் அவர்.
மறுபக்கம் கேமரூன் கிரீன் தன் பலத்தைப் பயன்படுத்தி பவுண்டரிகளும் சிக்ஸர்களும் அடித்தார். அவர் 28 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த அதிரடியின் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 247 ரன்கள் எடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். ஐபிஎல் வரலாற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கெதிராக எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுதான்.
முடிவுக்கு வந்த டைட்டன்ஸ் வெற்றிப் பயணம்
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு தொடக்கம் நல்லபடியாக அமைந்தது. சௌரப் துபே வீசிய முதல் ஓவரிலேயே 15 ரன்கள் எடுக்கப்பட்டன. கேமரூன் கிரீன் வீசிய 2வது ஓவரில் 12 ரன்கள் கிடைத்தன. மூன்றாவது ஓவரை கார்த்திக் தியாகி வீச, முதல் மூன்று பந்துகளில் 2 பவுண்டரிகளும், 1 சிக்ஸரும் அடுத்தார் சாய் சுதர்ஷன். அந்த அதிரடியின் காரணமாக 3 ஓவர்கள் முடிவில் 42/0 என்ற நல்ல நிலையில் இருந்தது குஜராத் டைட்டன்ஸ்.
ஆனால், மூன்றாவது ஓவரின் கடைசிப் பந்து சாய் சுதர்ஷனின் முழங்கையில் பட்டதால், அவர் வலி தாங்க முடியாமல் துடித்தார். அதனால், அவர் ‘ரிட்டையர்ட் ஹர்ட்’ முறையில் களத்திலிருந்து வெளியேறினார். அப்போது 13 பந்துகளில் 23 ரன்கள் எடுத்திருந்தார் சாய் சுதர்ஷன். அவர் வெளியேறிய பிறகு டைட்டன்ஸ் வேகம் சற்று குறையத் தொடங்கியது.
பதிரானா வீசிய 4வது ஓவரில் 7 ரன்கள் மட்டுமே கிடைத்தது. ஐந்தாவது ஓவரை வீச வந்த சுனில் நரைன், முதல் பந்திலேயே நிஷாந்த் சிந்து விக்கெட்டைக் கைப்பற்றினார். கில், பட்லர் இருவரும் அவகாசம் எடுத்துக்கொண்டார்கள். அதனால், பவர்பிளேவில் 1 விக்கெட் இழப்புக்கு 56 ரன்கள் எடுத்தது டைட்டன்ஸ்.
பவர்பிளே முடிந்ததும் ஷுப்மன் கில் தன் அதிரடியைத் தொடங்கினார். குறிப்பாக ஸ்பின்னர்களுக்கு எதிராக அவர் தீவிர அதிரடியைக் காட்டினார். நரைன் வீசிய 7வது ஓவரில் 2 சிக்ஸர்கள் அடித்த கில், அனுகூல் ராய் வீசிய 9வது ஓவரில் 2 சிக்ஸர்களும், ஒரு பவுண்டரியும் அடித்தார்.
பட மூலாதாரம், ANI
படக்குறிப்பு, இந்தப் போட்டியில் 7.25 என்ற எகானமியில் பந்துவீசி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினார் சுனில் நரைன்
33 பந்துகளில் அரைசதம் அடித்த கில், அதன்பிறகு மேலும் தன் வேகத்தைக் கூட்டினார். வருண் சக்கரவர்த்தி வீசிய 14வது ஓவரில் அவர் தலா, 2 பவுண்டரிகளும் 2 சிக்ஸர்களும் விளாசினார். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த டைட்டன்ஸ் கேப்டனை ஆட்டமிழக்கச் செய்தார் சுனில் நரைன். 49 பந்துகளை சந்தித்த கில் 5 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களின் உதவியோடு 85 ரன்கள் எடுத்தார்.
அதன்பிறகு மீண்டும் களமிறங்கிய சாய் சுதர்ஷன், பட்லருடன் இணைந்து அதிரடி காட்ட முயன்றார். ஆனால், தேவைப்படும் ரன்ரேட் மெல்ல அதிகரித்துக்கொண்டே இருந்ததால் கடைசி கட்டத்தில் டைட்டன்ஸ் அணிக்குப் பெரும் நெருக்கடி ஏற்பட்டது. ஜாஸ் பட்லர் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, சாய் சுதர்ஷன் 53 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் எடுத்தது.
29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 11 புள்ளிகளுடன் 7வது இடத்துக்கு முன்னேறியது.
பிளேயிங் லெவனில் யார்?
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
இந்தப் போட்டிக்கான கேகேஆர் அணிக்கு வருண் சக்கரவர்த்தி மீண்டும் திரும்பினார். காயம் காரணமாக அவர் முந்தைய போட்டியில் விளையாடவில்லை. அவர் வைபவர் அரோராவுக்குப் பதில் இடம்பெற்றார். அதேபோல், காயத்திலிருந்து மீண்டு வந்த மதீஷா பதிரானா இந்த சீசனில் முதல் முறையாகக் களமிறங்கினார். கேகேஆர் பந்துவீசியபோது அவர் இம்பேக்ட் வீரராகப் பயன்படுத்தப்பட்டார். ஆனால், 8 பந்துகளே வீசிய நிலையில் பதிரானா மீண்டும் காயமடைந்தார்