அமெரிக்கா- ஈரான் இடையிலான நிரந்தர போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தை ஒப்பந்தம் நிறைவு பெறவில்லை. அமெரிக்கா தொடர்ந்து மிரட்டல் கொடுத்து வரும் நிலையில் ஈரான் அதை எதிர்கொள்கிறது.
அமெரிக்கா உடனான மோதலை தொடர்ந்து ஹர்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. மோதலைக் குறைக்க அமெரிக்கா, ஈரான் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடந்து வந்தது. அமைதி பேச்சுவார்த்தைக்கு மத்தியில் ஈரான்மீது கடந்த 26-ம் தேதி அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தியது.
இதற்கிடையே, குவைத்தில் உள்ள அமெரிக்க படைத்தளத்தை குறிவைத்து நேற்று அதிகாலை ஈரான் தாக்குதல் நடத்தியது.
இந்நிலையில், குவைத் மீது ஈரான் இன்று அதிகாலை மீண்டும் தாக்குதல் நடத்தியது. குவைத் நோக்கி 2 ஏவுகணைகளை ஈரான் வீசியது. பஹ்ரைன் மீது 3 ஏவுகணைகளை வீசியது. இவற்றை உடனடியாக அமெரிக்கா மற்றும் பஹ்ரைன் வான் பாதுகாப்பு படைகள் இடைமறித்து அழித்தன.
குவைத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இறந்தவரின் பெயர் உள்ளிட்ட விவரத்தை குவைத் அரசு வெளியிடவில்லை.
ஈரான் தாக்குதல் எதிரொலியால் குவைத் சர்வதேச விமான நிலையத்தில் தற்காலிகமாக விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டது.