• Mon. Nov 16th, 2026

24×7 Live News

Apdin News

கூடுவாஞ்சேரி அருகே சிறுமி தூங்குவது தெரியாமல் காருடன் கடத்திய கும்பல்

Byadmin

Nov 16, 2026


சிறுமியை மீட்ட ஆட்டோ டிரைவர்கள் இதுபற்றி சீர்காழி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

கூடுவாஞ்சேரி அடுத்த வல்லாஞ்சேரியை சேர்ந்தவர் மலையரசன். அதே பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் 12 வயது மகளுடன் விருதுநகர் மாவட்டம் வலையப்பட்டி கிராமத்தில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்று விட்டு நேற்று இரவு 11 மணியளவில் திரும்பி வந்தார்.

அப்போது மலையரசனும், அவரது மனைவியும் தங்களது ஓட்டல் முன்பு காரை நிறுத்தி விட்டு சென்றனர். மகள் தூங்கியதால் அவரை காரிலேயே விட்டு விட்டு சென்று இருந்தனர். காரில் ஏ.சி. இயங்கியதால் என்ஜினை ஆப் செய்ய வில்லை என்று தெரிகிறது.

சிறுமி

அப்போது மர்ம நபர்கள் திடீரென சிறுமி தூங்கிக்கொண்டு இருப்பது தெரியாமல் காருடன் கடத்தி சென்றனர். சிறிது நேரம் கழித்து மலையரசன் வெளியே வந்து பார்த்த போது மகளுடன் கார் கடத்தப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர். சிறுமியுடன் கார் கடத்தப்பட்டு இருப்பது குறித்தும் காரின் பதிவு எண் குறித்து அனைத்து மாவட்ட போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு சோதனை தீவிரப்படுத்தப்பட்டது.

சீர்காழி

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே கடத்தப்பட்ட காரில் சிறுமி இருப்பதை கண்டு அதில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இன்று அதிகாலை 4.30 மணியளவில் சீர்காழியில் உள்ள புதிய பஸ்நிலையத்தில் கடத்தல் காரை நிறுத்தி விட்டு ஒரு கடையில் மர்நபர்கள் டீ குடித்ததாக தெரிகிறது.

அப்போது காரில் இருந்து இறங்கிய சிறுமி அங்கிருந்த ஆட்டோ டிரைவர்களிடம் காருடன் கடத்தப்பட்டதாக தெரிவித்து அழுதார். இதனை கவனித்த கடத்தல் கும்பல் அங்கிருந்து கடத்தல் காருடன் தப்பி சென்று விட்டனர்.

போலீசார்

இதையடுத்து சிறுமியை மீட்ட ஆட்டோ டிரைவர்கள் இதுபற்றி சீர்காழி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார்விரைந்து வந்து சிறுமியை மீட்டு விசாரித்தனர். மேலும் கூடுவாஞ்சேரி போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கூடுவாஞ்சேரி போலீசார் சிறுமியை அழைத்து வருவதற்காக சீர்காழி விரைந்தனர்.

மேலும் காரின் பதிவு எண் மற்றும் கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து கடத்தல் காரை மீட்கவும், கடத்தல் காரர்களை கைது செய்யவும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கடத்தல் காரர்கள் குறித்து மீட்கப்பட்ட சிறுமியிடம் சீர்காழி துணைபோலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி கூடுதல் தகவல்களை பெற்றனர்.

By admin