வேல்ஸ் கடற்கரையில் ஒதுங்கிய அரிய வகை கடல் ஆமை ஒன்று 8,047 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அதன் இயற்கையான வாழிடமான மெக்சிகோ வளைகுடாவிற்கு விமானம் மூலம் மீண்டும் கொண்டு செல்லப்படுகிறது.
‘ரோஸ்ஸி’ என்று பெயரிடப்பட்ட இந்தக் கெம்ப்ஸ் ரிட்லி கடல் ஆமை, 2023 டிசம்பரில் உயிரிழக்கும் நிலையில் கண்டெடுக்கப்பட்டது. கடல் உயிரியல் பூங்கா ஊழியர்கள் அதற்குத் தொடர்ந்து சிகிச்சையளித்து, அதன் உடல்நிலையை மீட்டுள்ளனர்.
தற்போது, பாதுகாப்பு ஆர்வலர்கள் அதை அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து விமானத்தில் பத்திரமாகக் கொண்டு செல்லும் நடவடிக்கையை மிகவும் கவனமாக ஒருங்கிணைத்துள்ளனர். பயணத்தின்போது அதன் உடல் வறண்டு போகாமல் பார்த்துக்கொள்வதே முக்கியச் சவாலாக உள்ளது.
“அதன் சருமத்துக்கு, பாலியல் உறவின்போது பயன்படுத்தப்படும் வழுவழுப்பூட்டியான கே.ஒய். ஜெல்லைப் பயன்படுத்துகிறோம். அது கண்களுக்கு எரிச்சல் அல்லது பாதிப்பை ஏற்படுத்தாத மென்மையான பொருள் என்பதால் அதைப் பயன்படுத்துகிறோம்” என்று ஆங்கிள்சி கடல் உயிரியல் பூங்காவின் பொறுப்பாளர் மேட் டேவிட்சன் கூறினார்.
பட மூலாதாரம், Anglesey Sea Zoo
படக்குறிப்பு, பயணத்திற்கு முன்னதாக ரோஸ்ஸிக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்படுகிறது
இதற்கான திட்டமிடலுக்கு மட்டுமே கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் தேவைப்பட்டது. ரோஸ்ஸிக்காக வெப்பநிலையை கட்டுப்படுத்தக்கூடிய சிறப்பு பெட்டியை உருவாக்குவதும், இரண்டு நாடுகளுக்கு இடையிலான சிக்கலான ஆவண நடைமுறைகளை ஒருங்கிணைப்பதும் இந்தப் பணியில் அடங்கியிருந்தன.
ரோஸ்ஸி வழக்கமாக கடலில் வாழும் உயிரினமாக இருந்தாலும், இந்தப் பயணத்தை தண்ணீருக்கு வெளியே மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முதலில், ஆங்கிள்சியில் இருந்து லண்டன் வரை ஹெலிகாப்டரில் கொண்டு செல்லப்படும். அதன் பின்னர், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டனுக்கு சரக்கு விமானத்தில் அனுப்பப்படுவார்.
இதனால், இந்தப் பயணம் முடிந்தவரை விரைவாக நிறைவு செய்யப்பட வேண்டும். மேலும், தோல் உலர்ந்து போகாதபடியும், உடலில் நீர்ச்சத்து குறையாதபடியும் உறுதி செய்ய, பணியாளர்கள் தொடர்ந்து கண்காணிப்பில் இருக்க வேண்டியுள்ளது.
“அதன் ஓடு நன்கு ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும். அதனால், அது காய்ந்து செதில்களாக உரியாமல் இருக்க ஓடு முழுவதும் வேசலின் தடவுகிறோம்” என்கிறார் மேட் டேவிட்சன்.
”அதேபோல், அதன் சருமம் மிகவும் மென்மையானது. குறிப்பாக கண்கள் மிகவும் உணர்திறன் கொண்டவை. எனவே, சிறப்பு பெட்டிக்குள் வைப்பதற்கு முன்பும், விமானம் புறப்படுவதற்கு முன்பும் கண்களுக்கு வழுவழுப்பூட்டும் ஜெல்லைப் பயன்படுத்த வேண்டும். இல்லையெனில், வெயிலால் தோல் உரிவது போல அதன் சருமம் உரியத் தொடங்கிவிடும்,” என்றார்.
இதற்காக மருந்துக்கடையில் ஒரே நேரத்தில் 8 கே.ஒய் ஜெல்லியையும், 3 வேசலின் டப்பாக்களையும் வாங்கியபோது, அங்கிருந்தவர்கள் தன்னை ஒரு விசித்திரமாக பார்த்ததாகவும், அதற்குத் தான் விளக்கம் அளிக்க வேண்டியிருந்ததாகவும் டேவிட்சன் புன்சிரிப்புடன் கூறுகிறார்.
பட மூலாதாரம், Anglesey Sea Zoo
படக்குறிப்பு, ரோஸ்நெய்கர் கடற்கரைக்கு அருகே, உயிருக்கு ஆபத்தான நிலையில் ரோஸ்ஸி கண்டுபிடிக்கப்பட்டது
2023 டிசம்பரில் ஆங்கிள்சி தீவின் ரோஸ்நெய்கர் கடற்கரைக்கு அருகே கரை ஒதுங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதால், அந்த ஆமைக்கு “ரோஸ்ஸி” என்று பெயரிடப்பட்டது. உரிமையாளருடன் நடைப்பயிற்சிக்குச் சென்றிருந்த “மேக்” என்ற நாய்தான் அதை முதலில் கண்டுபிடித்தது.
அப்போது ரோஸ்ஸிக்கு இரண்டு வயது நிறைவடையவில்லை. உயிர் பிழைப்பதே கடினமான நிலையில் அது இருந்தது. பாதுகாப்பு நிபுணர்கள் இதை “கோல்ட்-ஸ்டன்” என்று அழைக்கின்றனர். அதாவது, தனது இயல்பான வாழ்விடத்தை விட மிகவும் குளிரான நீரில் நீண்ட நேரம் இருந்ததால் அதன் உடல் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டிருந்தன.
ஆங்கிள்சி கடல் உயிரியல் பூங்கா ஊழியர்களின் கருத்துப்படி, வெப்பமான கடல் பகுதிகளில் இருந்தபோது பலத்த காற்றின் காரணமாக அது வழி தவறி இருக்கலாம்.
கடந்த இரண்டரை ஆண்டுகளாக அந்த ஆமையை அவர்கள் பராமரித்து வந்தனர். இந்தக் காலத்தில் அதன் உடல் அளவு மூன்று மடங்கு அதிகரித்ததோடு, எடை 1 கிலோகிராமுக்கும் குறைவாக இருந்த நிலையிலிருந்து 21 கிலோகிராம் வரை உயர்ந்தது.
படக்குறிப்பு, பிராங்கி ஹோப்ரோ
ஆங்கிள்சி கடல் உயிரியல் பூங்காவின் உரிமையாளர் பிராங்கி ஹோப்ரோ கூறுகையில், “குளிரால் பாதிக்கப்பட்ட கடல் ஆமைகள், சிறப்பு சிகிச்சை இல்லாமல் உயிர் பிழைப்பது மிகவும் அரிது. முதல் ஒரு அல்லது இரண்டு வாரங்களிலேயே அது உயிர் பிழைக்குமா என்பது கூட எங்களுக்குத் தெரியவில்லை.
ஆமைகள் சிறையில் அல்ல, இயற்கையில்தான் வாழ வேண்டும். எனவே, இரண்டாண்டுகளுக்கும் மேலாக நாம் உழைத்த இலக்கு இப்போது நிறைவேறப் போகிறது என்பதால் இது மிகவும் உணர்ச்சிகரமான தருணமாக உள்ளது.
ஆனால், இந்தக் காலத்தில் அதன் தனிப்பட்ட பழக்கவழக்கங்களையும் குணாதிசயங்களையும் நாங்கள் நன்கு அறிந்துகொண்டோம். இன்னும் சில நாட்களில், இது கரீபியன் கடலில் நீந்திச் செல்லப் போகிறது. அதன் பிறகு அதை மீண்டும் பார்க்க முடியாமல் போகலாம்” என்றார்.
கெம்ப்ஸ் ரிட்லி ஆமைகள் உலகிலேயே மிகவும் அரிய கடல் ஆமை இனங்களில் ஒன்றாகும். இவை மெக்சிகோ மற்றும் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள இரண்டு கடற்கரைப் பகுதிகளில் மட்டுமே முட்டையிடுகின்றன.
ரோஸ்ஸியை அதன் இயற்கையான வாழிடத்திற்குத் திரும்பக் கொண்டு சென்று விடுவிப்பது, இந்த அரிய இனத்தின் அழிவைத் தடுப்பதற்கான ஒரு சிறிய முன்னேற்றமாக இருக்கும் என்று ஆங்கிள்சி கடல் உயிரியல் பூங்கா நம்புகிறது.
கடந்த பத்து ஆண்டுகளில், அந்தப் பூங்காவால் மீட்கப்பட்டு மீண்டும் நலம்பெறச் செய்யப்பட்ட நான்காவது கடல் ஆமை ரோஸ்ஸி ஆகும்.
மேலும், வேல்ஸ் கடற்கரையில் எதிர்காலத்தில் குளிரால் பாதிக்கப்படும் கடல் ஆமைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, தனிப்பட்ட கடல் ஆமை மீட்பு மையம் ஒன்றை அமைக்கும் திட்டத்தையும் பூங்கா ஊழியர்கள் தற்போது தயாரித்து வருகின்றனர்.