• Mon. Aug 10th, 2026

24×7 Live News

Apdin News

போர்காலத்தில் பிறந்த சட்டப்பூர்வ அடையாளமற்ற குழந்தைகள் – சூடானின் சோகம்

Byadmin

Aug 9, 2026


நீல மற்றும் சிவப்பு நிற டி-சர்ட் அணிந்த சிறுவன் ஒருவன், வெளியில் தரையில் அமர்ந்து தன் கையை நீட்டிச் செல்லும் நிலையைக் காட்டும் வரைபடம்
படக்குறிப்பு, குழந்தையின் தந்தையின் பெயரைக் குறிப்பிட முடியாத தாய்மார்களால், பெரும்பாலும் தங்கள் குழந்தைகளுக்குப் பிறப்புச் சான்றிதழைப் பெற முடிவதில்லை.

    • எழுதியவர், எதார் ஷலபி
    • பதவி, பிபிசி செய்தி அரபு சேவை

    • எழுதியவர், பட்ரிசியா ஒயிட்ஹோர்ன்
    • பதவி, பிபிசி ஆப்பிரிக்கா
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் சிலருக்கு சங்கடங்களை ஏற்படுத்தக்கூடிய விபரங்கள் இடம்பெற்றுள்ளன.

17 வயது சூடானியப் பெண் ஒருவர் தனது வயதுக்கும், தனது மகனின் எதிர்காலம் குறித்த கவலைகளுக்கும் சம்பந்தமில்லாத அளவுக்கு ஆழ்ந்த அமைதியுடன் ஒரு குழந்தையைக் கைகளில் ஏந்தியிருக்கிறார்.

“எனது இந்த மகனுக்குத் தந்தை இல்லை, பிறப்புச் சான்றிதழும் இல்லை, தேசிய அடையாள எண்ணும் இல்லை” என்று பாதுகாப்பு கருதி ‘அமிரா’ என்ற புனைப்பெயரிடப்பட்டுள்ள அந்தப் பெண் பிபிசி-யிடம் தெரிவித்தார்.

தனது குழந்தையைக் குனிந்து பார்த்தபடி, சூடானில் உள்நாட்டுப் போர் வெடித்ததிலிருந்து தனக்கு ஏற்பட்ட சோகங்களை இன்னமும் முழுமையாக நம்ப முடியாதது போல அவர் மெதுவாகப் பேசுகிறார்.

அவரும் அவரது குடும்பத்தினரும் எல்-பாஷர் நகரின் கிழக்குப் பகுதிகளில் வசித்து வந்தனர். கடந்த 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ராணுவத்திற்கும் துணை ராணுவப் படைகளான விரைவு ஆதரவுப் படைகளுக்கும் இடையே கடுமையான அதிகாரப் போட்டி நிலவி வரும் நிலையில், அந்நகரை விரைவு ஆதரவுப் படைகள் முற்றுகையிட்டன.

மேற்கு டார்ஃபூர் பிராந்தியத்தில் ராணுவத்தின் கடைசிப் பாதுகாப்புக் கோட்டையாக இருந்த எல்-பாஷர் நகரம், 18 மாத கால முற்றுகைக்குப் பிறகு கடந்த அக்டோபரில் விரைவு ஆதரவுப் படைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த அரபுப் படைகளின் வசம் வீழ்ந்தது.

நகருக்குள் சிக்கியிருந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்களைப் பொறுத்தவரை அது ஒரு நரக வேதனையாக இருந்தது – இடைவிடாத குண்டுவெடிப்புகள், மோதல்கள் மற்றும் உணவுப் பற்றாக்குறை ஆகியவற்றால் அவர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

இறுதியில் பாதுகாப்பான இடத்தைத் தேடும் தீவிர முயற்சியாக, அமிராவும் அவரது குடும்பத்தினரும் கடந்த 2025-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அங்கிருந்து தப்பியோட முடிவு செய்தனர்.

ஆனால், நகருக்குத் தென்மேற்கே உள்ள ஒரு சாலை வழியாக அவர்கள் ரகசியமாகத் தப்பிச் செல்ல முயன்றபோது, விரைவு ஆதரவுப் படையைச் சேர்ந்த மூன்று ஆயுதம் தாங்கிய நபர்களால் தான் கடத்தப்பட்டுச் சிறைபிடிக்கப்பட்டதாக அவர் கூறுகிறார்.

“அவர்கள் எனது கண்களைக் கட்டி, எல்-பாஷருக்குத் தெற்கே உள்ள தாபித் பகுதிக்கு அழைத்துச் சென்றனர். என்னை ஒரு அறையில் இரண்டு மாதங்கள் பூட்டி வைத்தார்கள். தினமும் அவர்களில் ஒருவராக மாறி மாறி என்னை வல்லுறவுக்கு உட்படுத்தினார்கள்” என்று அவர் தளர்ந்த குரலில் விவரிக்கிறார்.

வாரக்கணக்கில் சிறைவாசத்திற்குப் பிறகு, தான் கர்ப்பமாக இருப்பதை உணர்ந்த அவர் கடுமையான உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.

அந்த நபர்கள் தன்னை அகற்றுவதற்கு விரும்பியபோது, தாம் கடத்தப்பட்ட பகுதிக்கு அருகிலேயே தன்னைத் தூக்கி எறிந்துவிட்டுச் சென்றதாக அமிரா கூறுகிறார்.

எல்-பாஷரிலிருந்து தப்பியோடிய பிற மக்களின் உதவியோடுதான் அவர் மருத்துவ உதவி பெற அழைத்துச் செல்லப்பட்டார்.

மாதங்களுக்குப் பிறகு, விரைவு ஆதரவுப் படைகளின் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு மனிதாபிமான மையத்தில், சர்வதேச மருத்துவக் கழகத்தால் நடத்தப்படும் மருத்துவமனையில் அவர் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தார்.

அங்கு அவருக்கு, ‘நடா அல்-அசார் பேரழிவு தடுப்பு மற்றும் நிலையான மேம்பாட்டு அறக்கட்டளை’ (நடா) என்ற சூடானிய தொண்டு நிறுவனத்தின் மூலம் சில உதவிகள் கிடைத்தன.

எல்-பாஷரிலிருந்து தப்பியோடிய லட்சக்கணக்கான மக்கள் தஞ்சம் புகுந்துள்ள ஒரு முகாமைச் சென்றடைந்த அவரது குடும்பத்தினரைக் கண்டுபிடிப்பதற்கும் அந்த அமைப்பு உதவியது.

அவர்கள் அனைவரும் மீண்டும் ஒன்றுசேர்ந்தது பெரும் நிம்மதியைத் தந்தாலும், அந்தக் குடும்பம் இன்னும் பல சவால்களை எதிர்கொண்டு வருகிறது; குறிப்பாகக் குழந்தை பிறந்து எட்டு மாதங்களாகியும் அமிராவால் தனது மகனின் பிறப்பைப் பதிவு செய்ய முடியவில்லை.

“மருத்துவமனையில் இருந்து பிறப்பு அறிவிப்புச் சான்றிதழ் பெறுவதற்கு இல்லாத சில விவரங்கள் கேட்கப்படுகின்றன” என்று கூறும் அமிரா, குழந்தையின் தந்தையைப் பற்றிய எந்தவொரு விபரத்தையும் தன்னால் வழங்க முடியவில்லை என்று விளக்குகிறார்.

இதன் காரணமாகக் குழந்தையின் சட்டப்பூர்வ அடையாளத்திற்கு எத்தகைய அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தையும் பெற முடியாத நிலையில் உள்ளார்.

“என்னால் அவனுக்குத் தடுப்பூசி போடவோ, மழலையர் பள்ளியிலோ அல்லது வேறு பள்ளியிலோ சேர்க்கவோ முடியாது” என்று அவர் கூறுகிறார்.

“அவன் எந்த இடத்திலும் பதிவு செய்யப்படாததால் அவனது எதிர்காலத்தை நினைத்து நான் பயப்படுகிறேன். எனது பொருளாதாரச் சூழல் மிகவும் மோசமாக உள்ளது, அவனது மருத்துவச் செலவுகளையும் பராமரிப்பையும் என்னால் சமாளிக்க முடியவில்லை. மீண்டும் வன்முறைக்கு ஆளாக நேரிடும் என்ற பயத்தால் என்னால் வேலைக்குக் கூடச் செல்ல முடியவில்லை.”

நடா அமைப்பின் கூற்றுப்படி, அமிராவின் கதை தனிப்பட்ட ஒரு நிகழ்வு அல்ல; மாறாக, சூடான் முழுவதும் மோதல்களைச் சந்தித்து வரும் பகுதிகளில் தொடர்ந்து நடந்து வரும் ஒரு எதார்த்த நிலையாகும்.

தீப்பற்றி எரியும் ஒரு பகுதிக்கு அருகிலுள்ள சாலை வழியாக மக்கள் தப்பியோடுவதையும், அந்தச் சாலையில் ஆயுதம் ஏந்திய நபர்களுடன் ஒரு பிக்கப் டிரக் வாகனம் நிற்பதையும் காட்டும் வரைபடம்
படக்குறிப்பு, எல்-பாஷர் நகரமும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளும் 18 மாதங்களாக முற்றுகைக்குள்ளாகியிருந்தன – ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து கால்கடுக்க நடந்து தப்பியோடினர்.

சிக்கலான சூழ்நிலைகளில், பெரும்பாலும் தந்தையின் விவரங்கள் தெரியாமலேயே பல குழந்தைகள் பிறக்கின்றன; இதனால் அவர்களது பிறப்பைப் பதிவு செய்ய முடிவதில்லை என்று நடா அமைப்பின் பாதுகாப்புத் திட்டங்களின் இயக்குநர் அபு பக்ர் யூசுப் யாகூப் விளக்குகிறார்.

“ஒரு குழந்தையைப் பதிவு செய்வதற்கு அடையாளத் தகவல்கள், தேசிய அடையாள எண் மற்றும் பிறப்புச் சான்றிதழ் அவசியம். ஆனால், தந்தை இல்லாதபோதோ அல்லது யார் என்று தெரியாதபோதோ அது மிகவும் கடினமாகிவிடுகிறது” என்று எல்-பாஷரிலிருந்து பிபிசியிடம் அவர் கூறினார்.

“தாய் பெரும்பாலும் தனியாகவே இருக்கிறார், சில சமயங்களில் அவரே இன்னும் பராமரிப்பு தேவைப்படும் சிறுமியாகத்தான் இருக்கிறார்; இது தன் குழந்தையைக் கவனித்துக் கொள்ளும் அவரது திறனைக் கட்டுப்படுத்துகிறது.”

“பிறந்தவுடன் தொடங்கி குழந்தையின் ஆரம்ப ஆண்டுகள் வரை அவசியமான தடுப்பூசிகளைத் தொடர்ந்து செலுத்துவதில் உள்ள குறைபாடுகளால் உடல்நலச் சவால்களும் ஏற்படுகின்றன” என்று அவர் எச்சரிக்கிறார்.

இந்த நிலை குழந்தையின் ஆரம்ப காலங்களைப் பாதிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களது எதிர்காலக் கல்வி மற்றும் எதிர்காலத்தில் அவர்கள் வளர்ந்த பிறகு பயணம் செய்வதையோ அல்லது அதிகாரப்பூர்வ ஆவணங்களைப் பெறுவதையோ பாதிக்கிறது என்று அவர் எச்சரிக்கிறார்.

சூடானில் வன்புணர்வு காரணமாகப் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கைக் குறித்த தரவுகளைப் பெறுவது எளிதல்ல.

நடா அமைப்பின் இயக்குநர் ஜெனரல் ஷாசா அகமதுவின் கூற்றுப்படி, சமூகக் களங்கம் காரணமாக உண்மையான எண்கள் பதிவு செய்யப்படுவதில்லை.

சூடானின் கிழக்குப் பகுதியில் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள போர்ட் சூடான் நகரிலிருந்து பிபிசியிடம் பேசிய அவர், “இது போன்ற தாக்குதல்களுக்கு ஆளாகும் பெண்கள் அவற்றை வெளியே சொல்லத் தயங்குகிறார்கள்” என்றார்.

“துரதிர்ஷ்டவசமாக, இந்தக் குழந்தைகளின் தாய்மார்களில் பெரும்பாலோர் தங்களது குழந்தைப் பருவத்திலிருக்கும் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகள்தான். எனவே, அவர்களால் தாங்களாகவே நீதிமன்றத்திற்கோ அல்லது காவல் நிலையத்திற்கோ சென்று புகார் அளிக்கும் முடிவை எடுக்க முடியாது, ஏனெனில் அவர்களுக்குத் துணையாக ஒரு பாதுகாவலர் தேவைப்படுகிறார்.”

கர்ப்பத்திற்குக் காரணமான பாலியல் வன்முறைகளை அதிகாரப்பூர்வமாகப் புகாரளிக்க குடும்பங்கள் மறுப்பதாக, தனது அமைப்பு பதிவு செய்த வழக்குகளில் 90% வழக்குகள் இதே நிலையில்தான் உள்ளதாக அவர் குறிப்பிடுகிறார்.

“ஒரு சூடானியப் பெண்ணாக, வன்புணர்வு மூலம் பிறந்த குழந்தைகள் குறித்து எனக்கு இருக்கும் மிகப்பெரிய பயமும் கவலையும் என்னவென்றால், நாம் களங்கம், ஆபத்து மற்றும் பயத்திற்கு நடுவே வாழப்போகும் ஒரு முழுத் தலைமுறையை எதிர்கொண்டுள்ளோம் என்பதுதான்” என்று அகமது கூறுகிறார்.

“இந்தக் குழந்தைகளுக்குச் சமூகத்திடமிருந்து மரியாதை கிடைக்காது, அவர்களது நலன் உண்மையாகப் பாதுகாக்கப்படாது, எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களுக்கு அடிப்படைச் சேவைகளோ அல்லது உரிமைகளோ கிடைக்காது.”

சூடானியச் சட்டம் அனைத்துக் குழந்தைகளுக்கும் அடையாளத்தைப் பெறும் உரிமையை வழங்கினாலும், இவர்கள் “முழு மனிதர்களாக” நடத்தப்படுவதில்லை என்று அகமது கருதுகிறார்.

திருமணத்திற்கு வெளியே பிறந்த குழந்தைகளைப் பதிவு செய்ய 2010-ஆம் ஆண்டின் குழந்தைகள் சட்டம் வழிவகை செய்கிறது என்று சூடானிய வழக்கறிஞர் மஜிதா இத்ரிஸ் விளக்குகிறார்.

ஆனால், தாய் தான் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளதாகப் புகார் அளிக்க முன்வந்தால் மட்டுமே அது சாத்தியமாகும் – ஏனெனில் இதுவே பதிவிற்கான முதல் படியாகும்.

புகார் அளிக்கப்பட்டவுடன், அக்குழந்தை குறித்த விவரங்கள் ஆவணப்படுத்தப்படுவதற்காகச் சமூக நலத்துறைக்கு அனுப்பப்பட்டு, பின்னர் குடிமைப் பதிவகத்திற்கு அனுப்பப்படும்; அங்கு அக்குழந்தை தாயின் பெயரில் பதிவு செய்யப்பட்டு, நடைமுறைகளின்படி முழுமையான சட்டப்பூர்வப் பெயர் வழங்கப்படும்.

நீல நிறத் தலைப்பாகையும் உடையுந்தரித்த பெண் ஒருவர் ஆண் குழந்தையைக் கையில் ஏந்தியிருக்கும் நிலையைக் காட்டும் வரைபடம்
படக்குறிப்பு, அமிராவும் அவரது குழந்தையும் இன்னும் சட்ட மற்றும் நிர்வாகரீதியான நிச்சயமற்ற நிலையிலேயே உள்ளனர்.

இருப்பினும், போர்க்கால யதார்த்தம் முற்றிலும் வேறுபட்டது என்று இத்ரிஸ் கூறுகிறார்; குறிப்பாக டார்ஃபூர் பகுதியில் தொடர்ந்துவரும் மோதல்கள் காரணமாக குடிமைப் பணிகள் முடங்கிவிட்டன, மேலும் குடிமைப் பதிவக அலுவலகங்களும் மூடப்பட்டுவிட்டன. இதனால் ஆயிரக்கணக்கான குழந்தைகள் இன்னும் பதிவு செய்யப்படாமலேயே உள்ளனர்.

“ஆவணங்கள் இல்லாதது என்பது வெறும் காகிதம் இல்லாததைக் குறிப்பதில்லை – இது குழந்தைக்குக் கல்வி, சுகாதாரம் மற்றும் சட்டப்பூர்வமான அங்கீகாரம் கிடைப்பதை மறுப்பதாகும்” என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

குழந்தைகள் தங்களது அடையாளத்தையும் சட்டப்பூர்வ அங்கீகாரத்தையும் பெறுவதை உறுதி செய்வதற்காக, பொதுமக்கள் எளிதில் அணுகக்கூடிய பகுதிகளில் குடிமைப் பதிவக அலுவலகங்களை மீண்டும் செயல்படுத்துவதும், சட்டப்பூர்வ முயற்சிகளைத் தீவிரப்படுத்துவதும் அவசியமாகும் என்று அந்த வழக்கறிஞர் கூறுகிறார்.

அமிராவும் அவரது குழந்தையும் இன்னும் டார்ஃபூரில்தான் உள்ளனர். இதனால், அவர்கள் சட்டபூர்வமான அடையாளமின்றி நிச்சயமற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

தனது பேரனுக்குத் தேவையான ஆவணங்கள் எதுவும் இல்லை என்பது கவலையளிக்கிறது என்பதை அவரது தாயாரும் ஒப்புக்கொள்கிறார்.

இருப்பினும், குடும்பத்தினர் அனைவரும் மீண்டும் ஒருவரையொருவர் சந்தித்துக்கொண்டதில் அடைந்திருக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

குடும்பத்தினருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், நடா அமைப்பு மூலமாக அமிராவுக்கு உணர்வுபூர்வமான மற்றும் மனநல ஆதரவு ஆலோசனைகளும் பிற உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.

“அவளைக் கண்டுபிடிக்கும் வரை நான் மிகவும் கவலையடைந்திருந்தேன். என்னால் சாப்பிடவோ தண்ணீர் குடிக்கவோ முடியவில்லை” என்று அமிராவின் தாயார் பிபிசியிடம் கூறினார்.

“எங்கள் குடும்பம் ஒன்றுசேர்ந்தது கடவுள் தந்த அற்புதத்தைப் போன்றதுதான். எங்கள் மகள் மீண்டும் எங்களுடன் வந்து அமர்ந்திருப்பதைப் பார்ப்பது, எங்களால் வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு வரமும் பாக்கியமுமாகும்.”

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin