• Wed. Sep 23rd, 2026

24×7 Live News

Apdin News

கேரள ஆற்றில் சில நிமிடங்களில் நீர்மட்டம் உயர ‘நீலகிரி கனமழையே’ காரணமா? மழையே பெய்யாமல் திடீர் வெள்ளம் – 6 பேர் பலி

Byadmin

Sep 22, 2026


கோட்டப்புழா தடுப்பணை

பட மூலாதாரம், Hameed Ali

படக்குறிப்பு, கோட்டப்புழா தடுப்பணை

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் கோட்டப்புழா ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் ஒரு பெண் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். நேபாளத்தைப் போலவே மழையே பெய்யாத இடத்தில் வந்த திடீர் வெள்ளத்தில் இத்தனை பேர் உயிரிழந்திருப்பது, கேரள ஊடகங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

நீலகிரியில் பெய்த மழையால் அந்த ஆற்றில் திடீர் வெள்ளம் வந்ததாக பிபிசியிடம் விளக்கிய கேரளத்தைச் சேர்ந்த சூழலியலாளர் ஹமீது அலி, புவியியல் அமைப்பை மக்கள் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்கிறார்.

ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் அந்தப் பகுதிக்கு அதிக மக்கள் வருவது வழக்கமாகிவிட்டதாக வெள்ளத்தின்போது மீட்புப் பணியில் ஈடுபட்ட ஆம்புலன்ஸ் டிரைவர் மஜீத் பிபிசியிடம் கூறினார். உள்ளூர் மக்களுக்கே இந்த திடீர் வெள்ளம் பற்றித் தெரியாததால்தான், பலரும் உயிரிழக்க வேண்டியதாகிவிட்டதாக அவர் தகவல் பகிர்ந்தார்.

சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்த கேரள முதல்வர் சதீசன், இது எதிர்பாராத இயற்கைப் பேரிடர் என்பதால் முன் கூட்டியே பொதுமக்களுக்கு முன் அறிவிப்பு செய்வதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டதாக விளக்கியுள்ளார்.

அழகான தடுப்பணை ஆற்றுப்பகுதி: அங்கேதான் காத்திருந்தது ஆபத்து!

சுற்றுச்சூழல் ஆர்வலர் ஹமீத் அலி.

பட மூலாதாரம், Hameed Ali

படக்குறிப்பு, சுற்றுச்சூழல் ஆர்வலர் ஹமீத் அலி.

கேரளத்தின் மலப்புரம் மாவட்டத்தில் நிலம்பூரிலிருந்து 10 கி.மீ. தொலைவிலுள்ள சோகாடு–அமரம்பலம் ஆகிய கிராம ஊராட்சிகளின் எல்லைப்பகுதியில் கோட்டப்புழா ஆறு பாய்கிறது. ஒளர்வட்டம் கடவு மற்றும் டி.கே. காலனி ஆகிய பகுதிகளைக் கடந்து இந்த ஆறு செல்கிறது. சுற்றிலும் மரங்கள் அடர்ந்த காடு மற்றும் தோட்டங்கள் உள்ள அப்பகுதியில் ஒரு தடுப்பணையும் உள்ளதால் அந்த இடம் பேரழகுடன் இருக்கிறது.

By admin