• Fri. Nov 13th, 2026

24×7 Live News

Apdin News

கோலாகலமாக நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா – 2026

Byadmin

Nov 13, 2026


 

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன், கிளிநொச்சி மாவட்ட செயலகமும் மாவட்ட பண்பாட்டுப் பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த கிளிநொச்சி மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா – 2026 இன்று (13.11.2026) வெள்ளிக்கிழமை காலை முரசுமோட்டை கிளி/முருகானந்தா கல்லூரி கலையரங்கில் சிறப்பாக நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட பண்பாட்டுப் பேரவையின் தலைவருமான திரு. சு. முரளிதரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைப்பீடத்தின் நாடகத்துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி கதிரேசு ரதிதரன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார்.

மேலும், கண்டாவளை பிரதேச செயலாளர் திரு. தங்கவேலாயுதம் பிருந்தாகரன், வடக்கு வலயக் கிளிநொச்சி உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி நர்மதா பரமேஸ்வரன், வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பிரதிப் பணிப்பாளர் திருமதி தர்ஷினி நிதர்ஷன் மற்றும் முரசுமோட்டை கிளி/முருகானந்தா கல்லூரி அதிபர் திரு. அரசரத்தினம் பங்கையட்செல்வன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

அத்துடன், கலாபூஷணம் சி. கனகராசா, கலாபூஷணம் இ. பராராசிங்கம், கலைக்கிளி ந. இராமநாதன் மற்றும் கலைநகரி த. இரவீந்திரன் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.

அமரர் கலாபூஷணம் வேலாயுதப்பிள்ளை சரவணபவ ஆனந்தம் அரங்கில் நடைபெற்ற இப்பெருவிழா மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமானது.

தொடர்ந்து முரசுமோட்டை கிளி/முருகானந்தா கல்லூரி மாணவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்தும், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களின் மாவட்ட கீதமும் இடம்பெற்றன. அரங்கத் திறப்புரையைத் தொடர்ந்து, கலை ஒளி கலாமன்றம் வழங்கிய வரவேற்பு நடனமும், உதவி மாவட்டச் செயலாளர் திருமதி ஹ. சத்தியஜீவிதா அவர்களின் வரவேற்புரையும் இடம்பெற்றன.

இதனைத் தொடர்ந்து, வட்டக்கச்சி சிவஞானாலய கலைமன்றத்தின் காலிங்க நர்த்தனம், நாச்சிக்குடா கிளி/முஸ்லீம் அ.த.க பாடசாலையின் றபான் நடனம், முழங்காவில் ஸ்ரீ ஆருத்திரா நர்த்தனாலயத்தின் புத்தாக்க நடனம், கோறக்கன்கட்டு புத்தொளி கலை இலக்கிய மன்றத்தின் கிராமிய நடனம், இயக்கச்சி கங்கைத் தமிழ் மன்றத்தின் நாட்டிய நாடகம் மற்றும் பளை துர்க்கா கலைமன்றத்தின் ‘சத்தியவான் சாவித்திரி’ இசை நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன.

மேலும், கலை மன்றங்களுக்கிடையில் நடத்தப்பட்ட மாவட்ட மட்டப் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வில் 2026 ஆம் ஆண்டுக்கான கலை விருதுகள் வழங்கி கௌரவிப்பு

மாவட்டத்தின் கலை, இலக்கிய மற்றும் பண்பாட்டுத் துறைகளின் வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்த கலைஞர்கள் இவ்விழாவில் விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

கலைக்கிளி விருது – 2026

கரைச்சி: திரு. வேலன் இராசேந்திரம் (கிராமியக்கலை), திரு. கந்தையா கணேசலிங்கம் (இலக்கியம்).

பூநகரி: திரு. ஆறுமுகம் முத்துத்தம்பி (கூத்து), திரு. செபஸ்தி சந்தியா (நாடகம்).

பச்சிலைப்பள்ளி: திரு. நாகராசா நகுலேஸ்வரன் (நாடகம்), திரு. கந்தையா பொன்னுத்துரை (நாடகம்).

கண்டாவளை: திருமதி. செல்வநாயகி தெய்வேந்திரமூர்த்தி (இலக்கியம்).

இளங்கலைஞர் விருது – 2026

கரைச்சி: திருமதி. சுகந்தன் தேவிகா (வாத்தியக்கலை), திரு. சிறுசாந்தகுமார் வினோத் (இலக்கியம்).

பூநகரி: திரு. இராமச்சந்திரன் திருக்குமரன் (நாடகம்).

கண்டாவளை: திரு. கனகரட்ணம் செந்துரன் (இலக்கியம்).

பச்சிலைப்பள்ளி: திரு. கணேசு திவாகர் (கூத்து).

கலைஞர்களின் ஆற்றல்களையும் படைப்பாற்றல்களையும் வெளிக்கொணர்வதுடன், மாவட்டத்தின் பாரம்பரியக் கலை, இலக்கியம் மற்றும் பண்பாட்டு விழுமியங்களைப் பாதுகாத்து அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் இப்பெருவிழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்வின் நிறைவில் சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் திருமதி கி. மாலினி அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து தமிழ்மொழி வாழ்த்துடன் மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா நிறைவடைந்தது.

மாவட்ட ஊடகப்பிரிவு

மாவட்டச்செயலகம்

கிளிநொச்சி.

By admin