பட மூலாதாரம், NOAH SEELAM/AFP via Getty Images
-
பிரசுரிக்கப்பட்டது
-
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
தமிழ்நாட்டில் முட்டை விலை சமீப காலமாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு அறிவிப்பின்படி, கடந்த ஒரு வாரத்தில் ஒரு முட்டையின் விலை 40 காசுகள் வரை உயர்ந்து, ரூ.6.10 என்ற விலையை எட்டியுள்ளது.
கோடையில் கோழி முட்டைகளின் அளவு வழக்கத்தைவிடச் சிறிதாக இருப்பதாகவும் நுகர்வோர் மத்தியில் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
முட்டையின் அளவு மட்டுமின்றி, உற்பத்திக் குறைவு, கடும் வெப்பத்தால் போதிய அளவு உணவு உட்கொள்ள இயலாமையால் கோழிகள் ஊட்டச்சத்துக் குறைபாடுகளைச் சந்திக்கும் அபாயம் போன்ற சிக்கல்களும் இருப்பதாக கோழிப் பண்ணையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இத்தகைய விளைவுகளுக்குப் பின்னால் வெப்பஅலை இருக்கக்கூடுமா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.
குறிப்பாக, நாட்டின் முக்கிய கோழி வளர்ப்பு மற்றும் முட்டை உற்பத்தி மையங்களில் ஒன்றான நாமக்கல் மாவட்டத்தில், தீவிர கோடையின் தாக்கம் இந்த பாதிப்புகளுக்குக் காரணமாக இருக்கலாம் என்று தமிழ்நாடு கோழிப் பணியாளர்கள் சங்கத் தலைவர் சிங்கராஜ் பிபிசி தமிழிடம் பேசியபோது தெரிவித்தார்.
உண்மையில் அதிகரித்து வரும் வெப்பநிலை முட்டையின் அளவைக் குறைக்கிறதா? ஆய்வுகள் கூறுவது என்ன?
முட்டை பொருளாதாரத்தின் மையத்தில் நாமக்கல்
இந்தியாவின் முட்டை உற்பத்தியில் நாமக்கல் என்ற பெயர் பிரிக்க முடியாத வகையில் பிணைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான கோழிப் பண்ணைகள், குஞ்சு பொரிப்பகங்கள், தீவன உற்பத்தி நிலையங்கள் உள்ளன.
இவை அனைத்தும் மாநிலத்தின் முட்டை உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் தமிழ்நாடு முழுவதும் உள்ள சந்தைகளுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் செல்வதுடன், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் ஆகிறது.
மாநிலத்தின் முட்டை உற்பத்திக்கான மையமாக நாமக்கல் திகழ்வதால், அங்கு உற்பத்தித் திறனில் ஏற்படும் சிறு பாதிப்புகூட ஒட்டுமொத்த துறையிலும் தாக்கம் செலுத்தக்கூடும்.
கோழிப் பண்ணையாளர்களைப் பொறுத்தவரை, கோடைக்காலத்தில் வழக்கமாகவே முட்டை உற்பத்தி அளவைத் தக்கவைப்பது சவாலாகத்தான் இருப்பதாக தமிழ்நாடு கோழிப் பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் சிங்கராஜ் கூறுகிறார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், “கடுமையான வெப்பம் மட்டுமே இங்கு நிலவும் சவால் இல்லை. வெப்பநிலையுடன், ஈரப்பதம், நீர் இருப்பு, வெயில் காலத்தில் அதிகரிக்கும் கோழிகளுக்கான பரமாரிப்புச் செலவு எனப் பல காரணிகள் இதில் பங்கு வகிக்கிறது,” என்றார்.
நாமக்கல் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையின் உயரதிகாரி ஒருவர் இதுகுறித்து பெயர் குறிப்பிட வேண்டாம் என்ற நிபந்தனையுடன் பிபிசி தமிழிடம் பேசியபோது, “முட்டையிடும் கோழிகளின் உடலில் அதீத வெப்பத்தின் தாக்கத்தால் ஏற்படும் விளைவுகள் இதில் முக்கியப் பங்கு வகிப்பதாக” தெரிவித்தார்.
அவரது கூற்றுப்படி, ” அதிக வெப்பநிலையில் நீண்டகாலம் இருக்கும் கோழிகள் வெப்ப அழுத்தத்தால் பாதிக்கப்படும், இதனால் தீவன உட்கொள்ளல் குறையும் மற்றும் அதன் விளைவு வளர்சிதை மாற்றம், முட்டை உற்பத்தி, முட்டையின் தரம் ஆகியவற்றிலும் தெரியலாம்.”
பட மூலாதாரம், Getty Images
வெப்ப அலை என்றால் என்ன?
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, ஒரு பிராந்தியத்தின் இயல்பான வெப்பநிலை சூழல்களைப் பொறுத்து, வெப்பநிலை சில வரம்புகளைத் தாண்டும்போது அது வெப்ப அலையாக அறிவிக்கப்படுகிறது.
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் (ICAR) மத்திய வறண்ட நில வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தால் கடந்த 2022ஆம் ஆண்டு வெப்ப அலையின் தாக்கம் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு, “இயல்பான வெப்பநிலையில் இருந்து வெப்பநிலை விலகல் மற்றும் உண்மையான அதிகபட்ச வெப்பநிலை அளவுகள் போன்ற காரணிகளின் அடிப்படையில் வெப்ப அலைகள் அடையாளம் காணப்படுகின்றன. சமவெளிகளைப் பொறுத்தவரை, அதிகபட்ச வெப்பநிலை இயல்பான அளவைவிடக் கணிசமாக உயரும்போது வெப்ப அலை நிலையாகக் கருதப்படுகிறது. அதேநேரம், மிகவும் தீவிரமான சூழ்நிலைகளில் கடுமையான வெப்ப அலையாக அறிவிக்கப்படுகிறது,” என்று கூறுகிறது.
வெப்ப அலைகள், அதிர்வெண், தீவிரம், கால அளவு ஆகிய மூன்று முக்கியக் காரணிகளால் வகைப்படுத்தப்படுவதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
அதாவது, வெப்பம் எவ்வளவு தூரம் அதிகரிக்கிறது என்பது மட்டுமின்றி, அத்தகைய நிகழ்வுகள் எவ்வளவு அதிகமாக நடக்கின்றன மற்றும் எவ்வளவு காலத்திற்கு நீடிக்கின்றன என்பதைப் பொறுத்து வெப்ப அலை வகைப்படுத்தப்படுகிறது.
கோழி வளர்ப்பைப் பொறுத்தவரை, இந்தக் கால அளவு முக்கியமானது என்று கோழி வளர்ப்பில் ஈடுபடுவோர் கூறுகின்றனர். ஏனெனில், “ஒரே ஒரு வெப்ப நாள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் பல நாட்கள் தொடர்ச்சியாக தீவிர வெப்பத்தின் தாக்கத்திற்கு ஆளாவது கோழிகளின் ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடும்” என்று விவரித்தார் நாமக்கல்லில் கோழிப் பண்ணை நடத்தி வரும் சரவணன்.
பட மூலாதாரம், Getty Images
அதிகரிக்கும் வெப்பம் கோழிகளை எளிதில் பாதிப்பது ஏன்?
மனிதர்களைப் போலன்றி, கோழிகளுக்குத் தங்கள் உடலைக் குளிர்விக்க உதவும் வியர்வைச் சுரப்பிகள் இல்லை.
அவை முதன்மையாக, சுவாசிக்கும் வேகத்தை அதிகரிப்பதன் மூலம் உடல் வெப்பநிலையை ஒழுங்குபடுத்த முயல்கின்றன. கடுமையான வெப்பத்தின்போது, பறவைகள் தங்கள் வளர்ச்சி அல்லது முட்டை உற்பத்திக்குத் தங்கள் ஆற்றலைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக தங்கள் உடல் வெப்பநிலையைப் பராமரிக்க முயல்வதில் அதிக ஆற்றலைச் செலவிடுகின்றன.
இவ்வாறாக, “கோழிகள் தமது உடலின் வெப்ப உற்பத்தி மற்றும் வெப்ப இழப்பைச் சமநிலைப்படுத்த முயல்வதால் ஏற்படும் வெப்ப அழுத்தம், அவற்றின் முட்டை உற்பத்தித் திறனை பாதிப்பதாக” இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் ஆய்வறிக்கை விளக்குகிறது.
அந்த ஆய்வின்படி, “வெப்பநிலை உயரும்போது, வளர்சிதை மாற்ற வெப்ப உற்பத்தியைக் குறைப்பதற்காக கோழிகள் தீவன நுகர்வைக் குறைக்கின்றன. 32 டிகிரி செல்ஷியஸ் மற்றும் 38 டிகிரி செல்ஷியஸுக்கு இடையே ஒவ்வொரு டிகிரி வெப்பநிலை அதிகரிப்புக்கும், கோழிகள் தீவன நுகர்வை சுமார் 5% குறைக்கக்கூடும்.”
“முட்டை உருவாக்கத்திற்கு புரதம், தாதுக்கள், கால்சியம் போன்ற ஊட்டச்சத்துகள் தொடர்ச்சியாகத் தேவைப்படுகிறது. கோழிகள் போதிய தீவனத்தை உட்கொள்ளாமல் போனால் முட்டை உருவாக்கத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துகளின் அளவு குறைகிறது. இதைச் சரிக்கட்ட வைட்டமின்களையும் ஊட்டச்சத்துகளையும் கொடுக்கிறோம்.
இருப்பினும், கோழிகள் வெயில் காலத்தில் அவை சாப்பிடும் அளவு வெகுவாகக் குறைவதால், முட்டை உற்பத்தி மட்டுமின்றி, அதன் அளவும் பாதிக்கப்படுகிறது. நாடு முழுவதும் முட்டைக்கான தேவை அதிகரித்து வருகிறது. ஆனால் கோடைக் காலத்தில் முட்டையின் உற்பத்தியும் அதன் அளவும் ஓரளவுக்குக் குறைவது வழக்கம்தான் என்றாலும், இந்த முறை அதீத வெப்பதால் அது சற்று தீவிரமாக இருக்கிறது. முட்டையின் விலை வெகுவாக உயர்ந்து கொண்டிருப்பதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம்,” என்று விளக்கினார் சிங்கராஜ்.
கடந்த 2024ஆம் ஆண்டு ‘அனிமல்ஸ்’ என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வில், முட்டையிடும் கோழிகளில் ஏற்படும் வெப்ப அழுத்தம், உற்பத்தித் திறன், உடலியல் எதிர்வினைகள், முட்டையின் தரம் ஆகியவற்றைப் பாதிப்பது கண்டறியப்பட்டது.
சிங்கராஜ் கூறுவதை உறுதி செய்யும் அந்த ஆய்வின் முடிவு, “தீவிரமான வெப்பநிலை சூழல், கோழிகளின் தீவன உட்கொள்ளலைக் குறைத்து, முட்டை உற்பத்தி மற்றும் தர அளவுருக்களை எதிர்மறையாகப் பாதிக்கலாம்” என்று தெரிவிக்கிறது.
பட மூலாதாரம், Getty Images
வெப்ப அலையின் தாக்கத்தால் பலவீனமாகும் முட்டையின் ஓடு
வெப்ப அலை நேரடியாக முட்டையின் அளவைச் சுருக்குவதில்லை. அது, கோழியின் உடலில் முட்டை உருவாகும் செயல்முறையில் தாக்கம் செலுத்துகிறது.
அந்தத் தாக்கம், உருவாகும் முட்டையின் அளவை மட்டுமின்றி, அதன் ஒட்டினுடைய தடிமனையும் குறைக்கக்கூடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கோழி வளர்ப்போரைப் பொறுத்தவரை, முட்டையின் அளவு என்பதைவிட, அதன் ஓட்டினுடைய தரம் பாதிக்கப்படுவதுதான் முக்கியப் பிரச்னையாகப் பார்க்கப்படுகிறது.
“முட்டை ஓடு உருவாக கால்சியம் தேவை என்பதுடன் கோழியின் உடலியல் செயல்பாடுகள் முறையாக நடக்க வேண்டியதும் அவசியம். ஆனால், வெப்ப அழுத்தத்திற்கு ஒரு கோழி பாதிக்கப்படும்போது சுவாசிக்கும் முறையில் மாற்றங்கள் நிகழும். இது அதன் உடலில் கால்சியம் போன்ற தாதுக்களின் சமநிலையின்மையைக் குலைத்து, முட்டையின் ஓடு உருவாக்கத்தில் இடையூறு விளைவிக்கலாம்” என்று கால்நடைப் பராமரிப்புத் துறையின் உயரதிகாரி பிபிசி தமிழிடம் விளக்கினார்.
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் 2022ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கைப்படி, வெப்ப அழுத்தம் கோழிகளின் உடலில் பிளாஸ்மா புரதம், கால்சியம் ஆகியவற்றின் அளவைக் குறைக்கக்கூடும்.
இதனால், “முட்டை ஓட்டின் தடிமன் குறைவதுடன், முட்டைகள் எளிதில் உடைந்து போவதும் அதிகரிக்கிறது. இத்தகைய பலவீனமான முட்டைகள் கையாளும்போதும் போக்குவரத்தின் போதும் எளிதில் உடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால் முட்டை உற்பத்தியாளர்களுக்கு இது நேரடிப் பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது.”
அதேவேளையில், “வெப்ப அலையால் தற்காலிகமாக முட்டையின் அளவு மற்றும் உற்பத்தி குறையலாம், ஓட்டின் தரம் பலவீனப்படலாம் என சான்றுகள் தெரிவிக்கின்றன. ஆனால், அனைத்து கோழி முட்டைகளும் நிரந்தரமாகச் சிறிதாகி வருவதாகக் கூறுவதற்கு எவ்வித அறிவியல் சான்றும் இல்லை.
எனவே, இந்த நிலை வெப்பம் மிகுந்த பருவகாலத்தில் மட்டுமே வழக்கமாக நிலவக்கூடிய பிரச்னைதான். இது நிரந்தரமான மாற்றம் இல்லை. இவற்றைக் கையாள்வதற்குரிய, விளைவுகளை ஓரளவுக்கு தணிக்க உதவக்கூடிய வழிகாட்டுதல்கள் கோழிப் பண்ணையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன,” என்று பிபிசி தமிழிடம் விளக்கினார் நாமக்கல் மாவட்ட கால்நடைப் பராமரிப்புத் துறையின் உயரதிகாரி.
பட மூலாதாரம், Getty Images
முட்டையில் சத்துகள் குறையுமா?
தீவிரமடைந்து வரும் வெப்ப அலையால், கோழிகளின் தண்ணீர் தேவை அதிகரிப்பது, காற்றோட்டத்தின் அவசியம், அதிகரிக்கும் மின்சாரப் பயன்பாடு, அவசியமாகும் குளிர்விக்கும் வசதிகள் ஆகியவற்றோடு சேர்த்து, உற்பத்தி அளவும் குறைவது, கோழிப் பண்ணை உரிமையாளர்களுக்குப் பல கூடுதல் சவால்களை ஏற்படுத்துவதாகக் கூறுகிறார் சிங்கராஜ்.
ஆனால், அதற்கும் முட்டையால் கிடைக்கக்கூடிய ஆரோக்கிய நன்மைகளுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
ஒரு முட்டை அளவில் சிறிதாக இருப்பதாலேயே அது ஆரோக்கியமற்றது எனப் பொருளல்ல. அதன் ஊட்டச்சத்து மதிப்பு, கோழி உட்கொள்ளும் உணவு மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியம் உள்படப் பல காரணிகளைச் சார்ந்துள்ளது. அளவில் ஏற்படும் வேறுபாடு, முட்டையைப் பாதுகாப்பற்றதாக மாற்றுவதில்லை எனவும், அதற்கு இருக்கும் உள்ளடக்கத்தின் அளவை மட்டுமே மாற்றுவதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
அதேவேளையில், உயரும் வெப்பநிலை முட்டை சேமிப்பின் தரத்தைப் பாதிக்கக்கூடும்.
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் செயல்படும் நிறுவனங்களைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு ‘இந்தியன் ஜர்னல் ஆஃப் பவுல்ட்ரி சயின்ஸ்’ என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வு, சேமிப்பு வெப்பநிலை முட்டையின் தரத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதை ஆராய்ந்தது.
அதன்படி, “கட்டுப்படுத்தப்பட்ட, குளிர்ச்சியான சூழ்நிலைகளில் பராமரிக்கப்படும் முட்டைகளுடன் ஒப்பிடுகையில், அறை வெப்பநிலையில் சேமிக்கப்படும் முட்டைகளின் தரம் வேகமாகச் சிதைவது கண்டறியப்பட்டது.”
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு