• Sat. Aug 8th, 2026

24×7 Live News

Apdin News

கோவென்ட் கார்டன் கத்திக்குத்து சம்பவம்: 4 பேரை காயப்படுத்தியதாக பெண் மீது குற்றச்சாட்டு

Byadmin

Aug 8, 2026


இலண்டன், கோவென்ட் கார்டன் பகுதியில் நான்கு ஆண்கள் கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

47 வயதான ஸ்டெல்லா கோலோவெனா (Stella Gollovena) மீது, கடுமையான உடல் சேதத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் காயப்படுத்தியதாக நான்கு குற்றச்சாட்டுகளும், பொது இடத்தில் ஆபத்தான ஆயுதத்தை வைத்திருந்ததாக ஒரு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளது.

நிலையான முகவரி இல்லாதவராக குறிப்பிடப்பட்டுள்ள அவர், வியாழக்கிழமை பிற்பகல் ஹைக்பரி கார்னர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முதல் முறையாக இந்தக் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார்.

நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட தகவலின்படி, சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் பகுதியான என்டெல் ஸ்ட்ரீட்டில் (Endell Street) புதன்கிழமை நண்பகல் சுமார் 12.25 மணியளவில் காயமடைந்த ஒருவர், பொலிஸாரை அணுகி உதவி கோரியுள்ளார்.

அந்த நபரும் மற்றொரு நபரும் தாங்கள் கத்திக்குத்துக்கு உள்ளானதாக தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சந்தேகநபர் துரத்தப்பட்டு, பொலிஸாரால் டேசர் (Taser) பயன்படுத்தி கைது செய்யப்பட்டுள்ளார்.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நான்கு ஆண்களிடமிருந்து பொலிஸார் வாக்குமூலங்களை பெற்றுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இவர்களுக்கு முதுகுப் பகுதியில் கத்திக்குத்து காயங்கள் ஏற்பட்டிருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும், சம்பவ இடத்தில் இருந்த மற்றொருவர் தானும் தாக்கப்பட்டதாக தெரிவித்த போதிலும், பொலிஸாரிடம் உத்தியோகபூர்வ வாக்குமூலம் வழங்க மறுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டபோது கோலோவெனாவிடம் கத்தரிக்கோல் அல்லது வெட்டும் கருவி போன்ற ஆயுதம் இருந்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

துணை தலைமை மாஜிஸ்திரேட் டான் இக்ராம், அடுத்த விசாரணை செப்டம்பர் 3ஆம் திகதி ஸ்னேர்ஸ்புரூக் கிரவுன் நீதிமன்றத்தில் நடைபெறும் வரை அவரை காவலில் வைக்க உத்தரவிட்டார்.

By admin