தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து முதல்வர் விஜய் இன்று உரையாற்றினார். தனது உரையில் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள், அவதூறு பேச்சுகள் மற்றும் திமுக மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.
அரசியல் ரீதியாக விமர்சனங்கள் செய்வது இயல்பானது என்றாலும், தனிப்பட்ட முறையிலும் பெண்களைப் பற்றியும் அவதூறாக பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று விஜய் கூறினார்.
தனக்கு மக்கள் வழங்கிய வெற்றியையும் பெறுவதில் பெண்கள் முக்கிய பங்கு வகித்துள்ளனர் என்றும், அவர்களை இழிவுபடுத்தும் கருத்துகள் ஏற்க முடியாதவை என்றும் அவர் தெரிவித்தார்.
”எதிர்க்கட்சியினர் கடுமையான அரசியல் கருத்துகளை முன்வைக்கலாம். ஆனால், தனிநபர் தாக்குதல்கள் மற்றும் பெண்களை குறிவைத்து பேசுவது தவிர்க்கப்பட வேண்டும்” என்றார்.
மேலும், மக்கள் தங்களுக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக அவர்களை அவமதிக்கும் வகையில் கருத்து கூறுவது கண்டிக்கத்தக்கது என்றும், மக்கள் அளித்த தீர்ப்பை மதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அப்போது திமுகவினர் தங்களது இருக்கையில் இருந்து எழுந்துநின்று பேச அனுமதி கோரினார். இருந்தபோதிலும் அவர்களது கூச்சல் மற்றும் எதிர்ப்புக்கு மத்தியில் விஜய் தொடர்ந்து பேசினார்.
“நாங்கள் மிசாவைப் பார்த்தவர்கள்” என்று சிலர் கூறுவதாகக் குறிப்பிட்ட விஜய், அப்போது அப்போது என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும் என்றார்.
தனது உரையின் ஒரு பகுதியில் திமுக அரசுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளையும் சுட்டிக்காட்டினார்.
சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் இடம்பெற்ற சில பகுதிகளை சட்டப்பேரவையில் வாசித்த விஜய், மேலும் கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை அனுப்பிய கடிதத்தில் உள்ள பகுதிகளையும் குறிப்பிட்டார்.
“ஆதாரம் வேண்டும் என்று கேட்பவர்களுக்கு இந்த இரு அறிக்கைகளும் போதாதா?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
காவல்துறை செயல்பாடுகள் குறித்து பேசிய அவர், தற்போதைய ஆட்சியில், ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
முதல்வரின் பதிலுரைக்கு பிறகு பேச அனுமதி தரவில்லை என திமுகவினர் சட்டப்பேரவை தலைவர் முன்பு அமளியில் ஈடுபட்டனர்.
”முதலமைச்சர் பேசிக்கொண்டிருந்தபோது அமளியில் ஈடுபட்டு அவரை பேசவிடக்கூடாது என்ற நோக்கத்துடன் திமுகவினர் வந்ததாக தெரிந்தது. எனவே பேச அனுமதிக்க முடியாது” என சட்டப்பேரவை தலைவர் கூறினார்.
அப்போது விஜய் குறுக்கிட்டு திமுகவினர் பேச அனுமதி தருமாறு கூறினார். ”முதல்வர் அனுமதி தருமாறு கூறியிருக்கிறார், அமருங்கள்” என சட்டப்பேரவை தலைவர் கூறினார்.
தான் அட்டவணைப்படி செல்வதாகவும் இப்போது பேச அனுமதிக்க முடியாது எனவும் சட்டப்பேரவை தலைவர் திமுகவினரிடம் கூறினார்.
அப்போது சில திமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவை தலைவர் முன்பு தரையில் அமர்ந்தனர். பின்னர் அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.
ஷார்ட் வீடியோ
காணொளிக் குறிப்பு,
உதயநிதி பதில்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், பேரவையில் திமுக சார்பில் முன்வைக்கப்பட்ட எந்த கேள்விக்கும் முதலமைச்சரின் பதிலுரையில் பதிலளிக்கப்படவில்லை என குற்றம்சாட்டினார். முதலமைச்சர் போதிய தயாரிப்புடன் வருவார் என எதிர்பார்த்ததாகவும் ஆனால் அவர் மனப்பாடம் செய்த பொய்யான குற்றச்சாட்டுகளை ஒப்பித்திருக்கிறார் எனவும், அதே பஞ்ச் டயலாக், சினிமா வசனங்கள், அதே நடிப்பு என ரீல்ஸ்களுக்காக மட்டுமே முதலமைச்சர் பதிலுரையை சொல்லியிருக்கிறார் என உதயநிதி கூறினார்.
தவெக அமைச்சர்கள், நிர்வாகிகள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படுமா என தாங்கள் கேட்டிருந்த நிலையில் அதை திசைதிருப்பும் வகையில் திமுகவினர் மீது வழக்கு இருந்ததாக முதலமைச்சர் கூறுவதாக உதயநிதி தெரிவித்தார்.
முதலமைச்சரின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வாய்ப்பு தருவதாக முதலில் கூறிய சட்டப்பேரவை தலைவர் உடனடியாக அந்த நிலைப்பாட்டிலிருந்து மாறிவிட்டதாகவும் தெரிவித்த உதயநிதி சட்டப்பேரவை தலைவர் பாரபட்சமாக நடந்துகொள்வதாக கண்டனம் தெரிவித்தார்.