பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கரூர் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு இளநிலை உதவியாளர் உள்ளிட்ட அரசு வேலைக்கான ஆணைகளையும், பணியாற்ற முடியாத நிலையில் உள்ள ஒருவருக்கு ரூ.10 லட்சத்தையும் முதலமைச்சர் விஜய் அவர்கள் வழங்கியுள்ளார். கருணை அடிப்படையிலான இந்த உதவி வரவேற்கத்தக்கது; அதே நேரத்தில் இத்தகைய உதவிகள் ஒரு சாராருக்கு மட்டுமின்றி, பல்வேறு காலகட்டங்களில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும்.
பாமக நிலைப்பாடு
கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி த.வெ.க. தலைவர் விஜய் அவர்கள் பங்கேற்ற பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதனால் வாழ்வாதாரம் இழந்த அவர்களின் குடும்பங்களுக்கு உதவும் வகையில், அந்தக் குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு அவர்களின் சொந்த மாவட்டங்களில் இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட அரசு பணிகளுக்கான ஆணையை கரூரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் அவர்கள் வழங்கினார். மேலும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவருக்கு ரூ.10 லட்சம் கருணைத் தொகையையும் முதலமைச்சர் வழங்கியிருக்கிறார்.
தமிழக அரசின் இந்த நடவடிக்கைகள் சரியானதா? என்பது தொடர்பாக அரசியல் ரீதியாகவும், சட்டரீதியாகவும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அவை அனைத்தும் ஒருபுறம் இருந்தாலும், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களும் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றன என்பது உண்மை. அதைக் கருத்தில் கொண்டும், கருணையை மட்டும் அளவீடாகக் கொண்டும் பார்க்கும் போது இந்த நடவடிக்கைகள் மிகவும் தேவையானவை என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும்.