‘குட் நைட்’ , ‘லவ்வர்’, ‘குடும்பஸ்தன்’ என தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றி திரைப்படங்களை வழங்கிய நடிகர் கே. மணிகண்டன் கதையின் நாயகனாக அதிரடியான எக்சன் அவதாரத்தில் நடித்திருக்கும் ‘மக்கள் காவலன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘இக்னோர்’ எனும் முதல் பாடலும், பாடலுக்கான பிரத்யேக காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் சந்தோஷ் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மக்கள் காவலன்’ திரைப்படத்தில் கே. மணிகண்டன், வாகை சந்திரசேகர், திவ்யா ஸ்ரீபதா, ஏ. வெங்கடேஷ், ஆர் கே விஜய் முருகன், சண்முகம் முத்துச்சாமி, சபு மோன் , உன்னி மாயா பிரசாத், ஜென்சன் திவாகர், ஜெமினி மணி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
பிரதீபன் செல்வரத்தினம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்திருக்கிறார்.
எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
எதிர்வரும் டிசம்பர் மாதம் நான்காம் திகதி முதல் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற ‘எனக்குள் ஒடுங்கி நடுங்கி உடையும் ஒருவன் வெடிக்க நினைக்க..’ எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான பிரத்யேக காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் எம். கே. பாலாஜி எழுத, பின்னணி பாடகர்கள் யோகி பி – நிவாஸ் கே. பிரசன்னா மற்றும் பின்னணி பாடகி அதிதி ஷங்கர் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள்.
றாப் இசை பாடலாக உருவாகி இருக்கும் இந்த பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இதன் காரணமாக இந்த பாடல் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட டிஜிட்டல் பார்வைகளைப் பெற்று சாதனை படைத்து வருகிறது.
The post சாதனை படைக்கும் நடிகர் கே.மணிகண்டனின் ‘மக்கள் காவலன்’ படத்தின் முதல் பாடல் appeared first on Vanakkam London.