• Sun. Nov 15th, 2026

24×7 Live News

Apdin News

ஈழத்தமிழர் அரசியலில் சுயமரியாதையின் பிரதான வகிபாகம் சிவாஜிலிங்கம் : அ. நிக்ஸன்

Byadmin

Nov 15, 2026


* மூத்த தலைவர்களில் ஒருவர் என்ற பெயரை இயல்பாகப் பெற்றுக்கொண்ட ஆளுமை

* சக்கர நாற்காலியில் நாடாளுமன்றம் சென்றவர்

* அரசியலில் ஈடுபட்டுச் சொத்துச் சேர்க்காத செம்மல்
— — —
இலங்கைத்தீவின் வடக்கு – கிழக்கு ஈழத்தமிழர்களின் சமகால அரசியல் வரலாற்றில், கொள்கைப் பிடிப்பும், அஞ்சாமையும், எளிமையும் கொண்ட தனித்துவமான ஆளுமையாக மகாலிங்கம் கனகலிங்கம் சிவாஜிலிங்கம் திகழ்கின்றார்.

வடமராட்சியின் தமிழ் வீர வரலாறு கொண்ட வல்வெட்டித்துறை மண்ணில் 1957ஆம் ஆண்டு ஒகஸ்ட் 15ஆம் திகதி பிறந்த இவர், ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்ட வரலாற்றோடு பின்னிப் பிணைந்த ஒரு மக்கள் பிரதிநிதியாக வாழ்ந்து மறைந்துள்ளார்.

ரெலோ எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடாகத் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்த சிவாஜிலிங்கம், 2001ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது அதன் முக்கிய தூண்களில் ஒருவராகச் செயற்பட்டார்.

2001 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட இவர், 2013இல் வடமாகாண சபை உறுப்பினராகவும், மரணிக்கும் காலம் வரை வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவராகவும் மக்களுக்குப் பணியாற்றினார்.

அரசியலில் ஈடுபட்டால் உண்மையான மக்கள் சேவகனாக இருக்க வேண்டும் என்பதற்குச் சிவாஜிலிங்கம் ஒரு வாழும் உதாரணமாகத் திகழ்ந்தார்.

சமகால அரசியலில் மக்கள் பிரதிநிதித்துவப் பதவிகளைப் பயன்படுத்தித் தலைமுறைக்கும் சொத்துச் சேர்க்கும் போக்கு அதிகரித்துள்ள நிலையில், ‘அண்ணன்’ சிவாஜிலிங்கம் முற்றிலும் மாறுபட்ட ஒரு தூய பொதுவாழ்வை மேற்கொண்டார்.

நாடாளுமன்ற உறுப்பினராகவும், மாகாண சபை உறுப்பினராகவும் பல ஆண்டுகள் பதவி வகித்தபோதும், தனக்கோ தனது குடும்பத்தினருக்கோ உறவினர்களுக்கோ எந்தவொரு சொத்தையும் அவர் சேர்த்து வைக்கவில்லை.

மாறாக, தனக்குக் கிடைத்த வருமானத்தையும் வளங்களையும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவே செலவிட்டார்.

குறிப்பாக, 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் மற்றும் முன்னாள் போராளிகளின் வாழ்வாதார உதவிகளுக்காகத் தனது இறுதி மூச்சுவரை உழைத்திருந்தார்.

சிவாஜிலிங்கத்தின் அரசியல் துணிச்சலுக்கும் சுயமரியாதைக்கும் 2001ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் ஒரு வரலாற்றுச் சாட்சியாகும்.

அத்தேர்தல் பிரச்சாரத்திற்காக யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பகுதிக்குச் சென்றிருந்த வேளையில், ஆயுதக் குழு ஒன்றின் கொடூரத் தாக்குதலுக்கு உள்ளானார்.

இத்தாக்குதலில் அவருடன் பயணித்த இருவர் கொல்லப்பட்டதுடன், 29 பேர் படுகாயமடைந்தனர். சிவாஜிலிங்கமும் கடுமையாகத் தாக்கப்பட்டுக் கால் முறிவடைந்த நிலையில் உயிர் தப்பினார்.

இத்தனை கொலைவெறித் தடைகளையும் தாண்டி, 17,859 விருப்பு வாக்குகளைப் பெற்று மக்கள் ஆணையுடன் நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.

நடக்க முடியாத நிலையிலும், தனது மக்களின் குரலைச் சபையில் ஒலிக்கச் செய்வதற்காக, நாடாளுமன்றப் படைக்கல சேவிதர்களின் உதவியுடன் சக்கர நாற்காலியில் (Wheelchair) சபைக்குள் அழைத்து வரப்பட்டார்.

தனக்குரிய ஆசனத்திற்குச் செல்ல முடியாத நிலையிலும், சபையின் வாசல் கதவருகே சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே அவர் ஆற்றிய உரை, ஈழத்தமிழர்களின் தளராத மனவுறுதியையும் சுயமரியாதையையும் தென்னிலங்கைக்கு உரத்து உணர்த்தியது.

தமிழ்த் தேசியக் கொள்கையில் எவ்வித சமரசத்திற்கும் இடமளிக்காத சிவாஜிலிங்கம், இலங்கை அரச கட்டமைப்பின் அடக்குமுறைகளுக்கு எதிராக வீதியிலும் சபையிலும் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார்.

தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்குப் புரியும் வகையில், இலங்கை நாடாளுமன்றத்தில் சிங்கள மொழியிலேயே உரத்துச் சத்தமிட்டுத் தமிழ் மக்களின் நியாயங்களை முன்வைத்தார்.

குறிப்பாக, 2003ஆம் ஆண்டு நாடாளுமன்ற அமர்வின் போது, “ஐக்கிய நாடுகள் சபையில் புலிக் கொடி பறக்கும்” என அவர் முழங்கியமை, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி சிங்கள உறுப்பினர்களிடையே பெரும் சலசலப்பையும் வாய்த்தர்க்கத்தையும் ஏற்படுத்தியது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், மாவீரர் நாள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டங்களில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் தடைகளை மீறி முன்னின்று செயற்பட்டார்.

இதனால் பலமுறை கைது செய்யப்பட்டும், நீதிமன்ற வழக்குகளை எதிர்கொண்டும் தனது கொள்கையில் உறுதியாக நின்றார்.

2010 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் போட்டியிட்டதன் ஊடாக, தமிழர்களின் அரசியல் அபிலாசைகளைச் சர்வதேசத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் ஒரு ஜனநாயகப் பொறிமுறையாக அதனைப் பயன்படுத்தினார்.

மகாலிங்கம் கனகலிங்கம் சிவாஜிலிங்கம் என்பது வெறுமனே ஒரு தனிமனிதனின் பெயரல்ல; அது ஈழத்தமிழர்களின் அஞ்சாமையினதும் சுயமரியாதையினதும் அடையாளம்.

எளிமையான வாழ்க்கை, மக்களுக்கான அர்ப்பணிப்பு, அதிகார வர்க்கத்திற்கு அடிபணியாத நெஞ்சுரம் ஆகியவற்றால் ‘ஈழத்தமிழ் மக்களின் மூத்த தலைவர்களில் ஒருவர்’ என்ற பெருமையை இயல்பாகவே பெற்றுக்கொண்டார்.

இந்த நவம்பர் மாதம் 14ஆம் திகதி அவர் தமிழ் மண்ணை விட்டுப் பிரிந்தாலும், சொத்துச் சேர்க்காமல் மக்களுக்காக வாழ்ந்த அவரது தூய அரசியல் வரலாறு, வருங்காலத் தமிழ் அரசியல் தலைமுறைக்கு என்றும் வழிகாட்டும். அது நிலைத்திருக்கும்.

அ.நிக்ஸன்-
பத்திரிகையாளர்-

By admin