பட மூலாதாரம், ACC
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
ஓமனில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய பிறகு இந்திய அணியினர் வெற்றியைக் கொண்டாடிய விதம் குறித்து சமூக ஊடகங்களில் விவாதம் எழுந்துள்ளது.
இந்திய அணி வீரர்களுக்கு சிலர் ஆதரவு தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில், விளையாட்டு மைதானத்தில் இதுபோன்ற கொண்டாட்டங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, இந்திய அணி கொண்டாடிய விதம் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் மற்றும் நிபுணர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
உண்மையில், வெற்றிக்குப் பிறகு இந்திய இளம் வீரர்கள் ஆக்ரோஷமாகக் கொண்டாடினர். சிலர் பாகிஸ்தான் வீரர்களுக்கு முன்னால் நின்றும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, இந்திய அணியின் உதவிப் பணியாளர்கள் வீரர்களை அமைதிப்படுத்தி மைதானத்திலிருந்து அழைத்துச் செல்வதைக் காண முடிந்தது. சில வீரர்கள் பாகிஸ்தான் அணியை நோக்கி சைகைகளையும் செய்தனர்.
பிசிசிஐ கூறியது என்ன?
பட மூலாதாரம், Getty Images
இந்த விவகாரம் தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் (பிசிசிஐ) கருத்து தெரிவித்துள்ளது.
இந்திய அணிக்கு பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஏஎன்ஐ செய்தி முகமைக்கு அவர் அளித்த பேட்டியில், “இது இந்திய அணியின் மன உறுதியையும் போராட்டக் குணத்தையும் காட்டுகிறது.” என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், “இது கடுமையான போட்டியாக இருந்தது. இந்த ஆட்டம் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இல்லை. சுமார் 280 ரன்கள் இருந்தபோது எட்டு விக்கெட்டுகள் சரிந்துவிட்டன. ஓவர்களும் மிகக் குறைவாகவே எஞ்சியிருந்தன. அந்தச் சூழலில் இந்திய அணி வெற்றி பெற்றது. இது இந்திய அணியின் நம்பிக்கையை அதிகரித்திருக்கும்” என்றார்.
“இவ்வளவு கடினமான போட்டியில் வெற்றி பெறும்போது வீரர்கள் கொண்டாடுவது இயல்பானது. அவர்கள் வெற்றி பெற்ற விதத்தைப் பார்க்கும்போது, அவர்களின் கொண்டாட்டம் நியாயமானதுதான் என்று கருதுகிறேன்” என்றும் அவர் தெரிவித்தார்.
இந்திய வீரர்களுக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் அறிவுரை
பட மூலாதாரம், ACC
சனிக்கிழமை நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை இறுதிப் போட்டி கடைசிப் பந்து வரை நீடித்தது. இதில் இந்திய அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஒரு கட்டத்தில் ஆட்டம் இந்திய அணியின் கையைவிட்டுச் சென்றுவிட்டதாகவே தோன்றியது. ஆனால், பின் வரிசை பேட்டர்கள் நம்பிக்கையுடன் விளையாடி, இந்திய அணியைச் சாம்பியன் பட்டம் வெல்லச் செய்தனர்.
இருப்பினும், இந்திய அணி வீரர்கள் கொண்டாடிய விதத்தை பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் விமர்சித்துள்ளனர்.
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அகமது ஷெசாத் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவில், “தொடரைக் கைப்பற்றிய இந்திய அணிக்கு வாழ்த்துகள். சிறப்பாக விளையாடி, தொடர் முழுவதும் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் 19 வயதுக்கு உட்பட்டோர் அணிக்கும் பாராட்டுகள்.
வெற்றியை மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டுமே தவிர, ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தியோ தேவையற்ற பகைமையைத் தூண்டியோ கொண்டாடக் கூடாது. இவர்கள் இளம் வீரர்கள். வெற்றி, தோல்வியைத் தாண்டி விளையாட்டின் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதை அவர்களுக்குக் கற்றுக்கொடுப்பது முக்கியம்.
துரதிர்ஷ்டவசமாக, மாற்றப்பட வேண்டிய சில பழக்கங்களை மூத்த வீரர்களும் கடைபிடித்து வந்துள்ளனர். இப்போது நம்மை மாற்றிக்கொள்ள வேண்டிய நேரம். எதிரணிக்கு மதிப்பளித்து, விளையாட்டின் உண்மையான உணர்வைப் பின்பற்ற வேண்டும். பெருமையுடன் வெற்றி பெறுங்கள். முழு உத்வேகத்துடன் போட்டியிடுங்கள். ஆனால், எப்போதும் விளையாட்டுக்கு மதிப்பளியுங்கள்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அக்தர் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், “இந்திய அணிக்கு வாழ்த்துகள். அவர்கள் மிகச் சிறப்பாக விளையாடினர். ஆனால், ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். கிரிக்கெட் விளையாடுவது மட்டுமல்லாமல், அதற்குரிய பண்புகளையும் நாம் பின்பற்ற வேண்டும்.
இன்றும் சச்சின் குறித்து நான் நல்லவிதமாகப் பேசுகிறேன். உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் அவர்தான் என்று இன்றும் கருதுகிறேன். சேவாக், சௌரவ் உள்ளிட்டோருடன் நாங்கள் விளையாடியிருக்கிறோம். நாங்கள் அனைவரும் நல்ல நண்பர்கள். நாங்கள் இதுபோன்ற எதிர்வினைகளை ஒருபோதும் வெளிப்படுத்தியதில்லை.
அவர்கள் இளம் வீரர்கள் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், நமது குழந்தைகளுக்கு நல்ல பண்புகளையும் கற்றுக்கொடுக்க வேண்டும். முந்தைய போட்டியில் இந்திய அணியின் கேப்டன், ‘அவர்கள் எங்களைவிடச் சிறப்பாக விளையாடினார்கள். அவர்கள் சிறந்த அணி’ என்று கூறினார். அந்தப் பண்புகளை காண மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
இந்திய வீரர்களுக்கு எனது செய்தி இதுதான்: நிச்சயமாக ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துங்கள். அவர்களின் ஆக்ரோஷத்தைப் பார்ப்பதற்கு நன்றாக இருந்தது. அதேநேரத்தில், இந்தத் தொடர் முழுவதும் பாகிஸ்தான் சிறப்பாக விளையாடியது.” என்றார்.
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது யூசுப் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவில், “19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை நிறைவடைந்துள்ளது. வழக்கம்போல, நெருக்கடியான சூழலில் இந்தியா பாகிஸ்தானை வென்றுள்ளது. இரு அணிகளுக்கும், எதிர்கால நட்சத்திரங்களாக உருவாகும் திறன்கொண்ட வீரர்களுக்கும் இது ஒரு சிறந்த கற்றல் வாய்ப்பாக அமைந்தது.
நீங்கள் விளையாட்டில் ஈடுபடும் போது அல்லது எந்தவொரு நிலையிலும் போட்டியிடும்போது, உங்கள் நாட்டை மட்டுமல்ல, உங்கள் வளர்ப்பு முறையையும், உங்கள் பெற்றோர் சிறுவயதிலிருந்தே உங்களுக்குக் கற்றுக்கொடுத்த பண்புகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறீர்கள் என்பதைச் சொல்ல விரும்புகிறேன்.
வெற்றி, தோல்வி எதுவாக இருந்தாலும், எப்போதும் மரியாதையுடன் நடந்துகொள்ளுங்கள். நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். ஆட்டத்தின் முடிவு எதுவாக இருந்தாலும், மைதானத்திலும் அதற்கு வெளியேயும் நீங்கள் நடந்துகொள்ளும் விதத்தில்தான் உண்மையான விளையாட்டு உணர்வு வெளிப்படுகிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் என்ன பேசப்படுகிறது?
பட மூலாதாரம், ACC
இந்திய அணியின் வீரர் மொஹித் உல்வா இதுகுறித்துப் பேசுகையில், வீரர்களின் கொண்டாட்டம் இயல்பானது என்றும், யாரையும் குறிவைத்து அவ்வாறு கொண்டாடவில்லை என்றும் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், “இது இந்தியா – பாகிஸ்தான் போட்டி. அதுவும் இறுதிப் போட்டி. எனவே, இத்தகைய எதிர்வினை இயல்பானதுதான். இதற்கு முன்பு ஒரு போட்டியில் அவர்கள் எங்களைத் தோற்கடித்திருந்தனர். அப்போது அவர்கள் செய்ததற்கு நாங்கள் எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை. அவர்கள் வெற்றியைக் கொண்டாடினார்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.
நாங்களும் அதேபோல எங்கள் வெற்றியைக் கொண்டாடினோம். இதில் ஆக்ரோஷமும் உணர்ச்சிகளும் கலந்திருந்தன. அவர்களுக்குக் காட்ட வேண்டும் அல்லது எதையாவது வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் நாங்கள் இதைச் செய்யவில்லை” என்றார்.
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவில், “இந்திய கிரிக்கெட் அணி மைதானத்தில் தனது ‘ஆக்ரோஷமான அணுகுமுறையை’ வெளிப்படுத்த விரும்பினால், அதற்கு இணையான பலம் கொண்ட அணிகளிலிருந்து வீரர்களைத் தேர்வு செய்ய வேண்டும். பாகிஸ்தான் இப்போது பலவீனமான, எளிதில் தோற்கடிக்கக் கூடிய அணியாக மாறிவிட்டது. ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து போன்ற அணிகளை நான் பரிந்துரைக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அணிக்கு ஆதரவான கருத்துகள்
இந்திய அணி கொண்டாடிய விதத்துக்கு ஆதரவாகவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பத்திரிகையாளர் அபிஜித் மஜும்தார் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “வெற்றிக்குப் பிறகு 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணி பாகிஸ்தானுக்குத் தகுந்த பதிலடி கொடுத்துள்ளது. நமது இளம் வீரர்களின் இந்த வெளிப்படையான, ஆக்ரோஷமான அணுகுமுறை குறித்து நாங்கள் பெருமைப்படுகிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
முக்கு என்ற பெயரில் ஒருவர் வெளியிட்ட பதிவில், “லீக் போட்டியில் இந்தியாவைத் தோற்கடித்த பிறகு, பாகிஸ்தான் வீரர்கள் இந்திய அணியின் ஓய்வறைக்கு முன்னால் தேவையற்ற ஆக்ரோஷத்தைக் காட்டினர். இப்போது இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு இந்திய அணியும் அதேபோலச் செய்துள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு