பட மூலாதாரம், Getty Images
-
- எழுதியவர், மெலிசா ஹோகன்பூம்
- பதவி,
-
பிரசுரிக்கப்பட்டது
-
வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பது குறித்து சமீப காகமாக அதிகம் பேசப்படுகிறது. ஆனால், உணவு சாப்பிட்ட பிறகு ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பது உடலின் இயல்பான செயல்பாடுகளில் ஒன்று.
அப்படியானால், ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது எப்போது கவலைப்பட வேண்டும், எப்போது கவலைப்படத் தேவையில்லை என்பது?
கடந்த சில ஆண்டுகளில் இரண்டு வியப்பூட்டும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. முதலாவதாக, நீரிழிவு நோய் உள்ளிட்ட எந்தப் பாதிப்பும் இல்லாத பல ஆரோக்கியமானவர்கள்கூட இப்போது நாள் முழுவதும் ரத்த சர்க்கரை அளவைக் கண்காணிக்கும் கருவிகளை அணியத் தொடங்கியுள்ளனர். அதேவேளையில், சிலர் வெள்ளை ரொட்டி, பாஸ்தா போன்ற சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுகளை முற்றிலுமாகத் தவிர்த்து வருகின்றனர்.
ரத்தச் சர்க்கரை அளவு அதிகரித்தால் எப்போது கவலைப்பட வேண்டும்?
பல எழுத்தாளர்கள், பாட்காஸ்ட் நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள், உடல்நலம் குறித்துப் பேசும் சமூக ஊடகப் பிரபலங்கள் எனப் பலரும், ரத்த சர்க்கரை அளவு திடீரென அதிகரிப்பதைக் கண்காணித்து, அதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று கூறி வருகின்றனர்.
இவர்களில் சிலர் இதை இன்னும் ஒருபடி மேலே கொண்டுசென்று ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகமாக உயர்வது ஆபத்தானதாக இருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.
வளர்சிதை மாற்றம் தொடர்பான நோய்கள் இல்லாதவர்களுக்குக் கூட, அதாவது ஆரோக்கியமானவர்களுக்குக்கூட ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதால் பாதிப்புகள் ஏற்படலாம் என்பது அவர்களின் வாதம். ஹார்மோன் சமநிலை பாதிக்கப்படுவது, முகப்பருக்கள் தோன்றுவது, மனநிலையில் மாற்றங்கள் ஏற்படுவது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் உருவாகலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
ஆனால், இந்தக் கூற்றுகள் குறித்து நிபுணர்கள் இப்போது கேள்வி எழுப்புகின்றனர். எனவே, ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது எப்போது கவலைப்பட வேண்டும், கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவதால் நீண்டகாலத்தில் பாதிப்பு ஏற்படும் என்று எப்போது அஞ்சத் தேவையில்லை என்பதைப் பார்ப்போம்.
சாப்பிட்ட பிறகு ரத்த சர்க்கரை அளவு ஏன் அதிகரிக்கிறது?
பட மூலாதாரம், Getty Images
நாம் சர்க்கரை, பழங்கள் அல்லது கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளைச் சாப்பிடும்போது, அவை செரிமானமாகும் செயல்முறையில் ரத்தச் சர்க்கரை அளவு இயல்பாகவே சிறிது அதிகரிக்கிறது.
இதற்குக் காரணம், செரிமானத்தின்போது கார்போஹைட்ரேட்டுகளும் சர்க்கரையும் உடைக்கப்பட்டு குளுக்கோஸாக மாறுவதுதான்.
இந்தக் குளுக்கோஸ் ரத்தத்தில் கலப்பதால், சிறிது நேரத்துக்கு ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது.
அப்போது கணையம், இன்சுலின் என்ற ஹார்மோனைச் சுரக்கிறது.
இன்சுலின், ரத்தத்தில் உள்ள குளுக்கோஸை உடலின் செல்களுக்குக் கொண்டு செல்கிறது. செல்கள் இந்தக் குளுக்கோஸை பயன்படுத்தி ஆற்றலை உருவாக்குகின்றன.
உணவு சாப்பிடுவதால் மட்டுமே ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிப்பதில்லை
பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவின் கனெக்டிகட் மாநிலத்தில் உள்ள யேல் மருத்துவப் பள்ளியைச் சேர்ந்த மருத்துவர் ஜெனிஃபர் ஷெர், குழந்தைகளின் ஹார்மோன் தொடர்பான நோய்களில் நிபுணத்துவம் பெற்றவர். நாம் தீவிரமாக உடற்பயிற்சி செய்யும்போது, அட்ரினலின் போன்ற ஹார்மோன்கள் உடலில் சுரக்கின்றன என்று அவர் கூறுகிறார். இந்த ஹார்மோன்கள், கல்லீரலில் இருந்து ரத்தத்தில் அதிக அளவு குளுக்கோஸ் வெளியிடப்படுவதற்குத் தூண்டுகின்றன.
இந்தக் கூடுதல் குளுக்கோஸ், உடற்பயிற்சியில் ஈடுபடும் தசைகளுக்கு அதிக ஆற்றலை வழங்குகிறது. இதன் காரணமாகவும் சிறிது நேரத்துக்கு ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிக்கலாம்.
நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இரண்டு வகையான பிரச்னைகளில் ஒன்று ஏற்படுகிறது. ஒன்று, அவர்களது உடலால் போதுமான அளவு இன்சுலினை உற்பத்தி செய்ய முடியாது. மற்றொன்று, இன்சுலின் உற்பத்தியானாலும் அது சரியாகச் செயல்படாது. இந்த இரண்டாவது நிலை, ‘இன்சுலின் எதிர்ப்பு’ என்று அழைக்கப்படுகிறது.
இதனால், உணவு சாப்பிட்ட பிறகு அவர்களது ரத்த சர்க்கரை அளவு ஆபத்தான அளவுக்கு அதிகரிக்கலாம்.
இத்தகையவர்கள் தங்களது உணவுப் பழக்கத்திலும் உடற்பயிற்சியிலும் கவனம் செலுத்த வேண்டும். ரத்த சர்க்கரை அளவு திடீரென அதிகரிக்காமல் இருப்பதற்காக அதைத் தொடர்ந்து பரிசோதிக்க வேண்டும். சிலர் இன்சுலின் அல்லது மெட்ஃபார்மின் போன்ற மருந்துகளையும் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும்.
ஆரோக்கியமானவர்களுக்கு ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பது இயல்பானது
உணவு சாப்பிட்ட பிறகு ஆரோக்கியமானவர்களின் ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிப்பது உடலின் இயல்பான செயல்முறையாகும்.
பிரிட்டனின் லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் ஊட்டச்சத்து மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் துறையின் இணைப் பேராசிரியராக உள்ள அட்ரியன் பிரவுன், “ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிப்பது ஒவ்வொரு முறையும் தீங்கு விளைவிக்கும் என்று கருதுவதுதான் மிகப் பெரிய தவறான புரிதல்,” என்று கூறுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
சமீபத்தில் ஆறு வாரங்களுக்கு, உணவு மற்றும் பானங்களில் கூடுதலாகச் சேர்க்கப்படும் சர்க்கரையை நான் தவிர்த்திருந்தேன். அதன்பிறகு, இனிப்பான ஏதாவது ஒன்றைச் சாப்பிடும்போது ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிப்பது இயல்பானதுதான் என்பதை இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ளத் தொடங்கினேன்.
பொதுவாக, உணவு சாப்பிட்ட சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு ரத்தச் சர்க்கரை அளவு உச்சத்தை அடைகிறது.
அதன்பிறகு, அடுத்த இரண்டு மணி நேரத்துக்குள் அது மீண்டும் இயல்பான நிலைக்குத் திரும்புகிறது.
ரத்தச் சர்க்கரை அளவு சிறிது நேரத்துக்கு மட்டுமே அதிகரித்து, உடல் உணவைச் செரிமானம் செய்து அதிலிருந்து ஆற்றலைச் சரியாகப் பெறுமானால் கவலைப்படத் தேவையில்லை என்று பிரவுன் கூறுகிறார்.
எதிர்பார்த்ததைவிட நீண்ட நேரம் ரத்தச் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் கவலைப்பட வேண்டும் என்று ஜெனிஃபர் ஷெர் கூறுகிறார்.
உடலால் குளுக்கோஸைச் சரியாகக் கையாள முடியவில்லை என்பதற்கு இது அறிகுறியாக இருக்கலாம்.
இது இன்சுலின் எதிர்ப்பின் அறிகுறியாகவும் இருக்கலாம். இந்த நிலையில், இன்சுலினுக்கு எதிர்வினையாற்றும் விதத்தில் உடல் சரியாகச் செயல்படுவதில்லை.
உடலில் நீண்டகாலமாக ரத்தச் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், இன்சுலின் எதிர்ப்பு ஏற்படலாம். பின்னர், இது நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலைக்கும் (ப்ரீ-டயாபடீஸ்), வகை 2 நீரிழிவு நோய்க்கும் வழிவகுக்கலாம்.
நீரிழிவு நோய் உள்ள சிலருக்கு ரத்தச் சர்க்கரை அளவு தொடர்ந்து அதிகமாக இருந்தால், நரம்புகளும் கண்களும் பாதிக்கப்படலாம்.
இதனால் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கலாம்.
இருப்பினும், ரத்தச் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதாலேயே நேரடியாக இன்சுலின் எதிர்ப்பு ஏற்படுகிறது என்பதற்குப் போதுமான ஆதாரங்கள் இன்னும் இல்லை என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர்.
பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் ஊட்டச்சத்து நிபுணராகவும் மூத்த ஆய்வாளராகவும் உள்ள நிக்கோலா கெஸ் இதற்கு மற்றொரு காரணத்தைக் குறிப்பிடுகிறார்.
உடலுக்குத் தேவையான அளவைவிட அதிகமாக நாம் சாப்பிடும்போது, பயன்படுத்தப்படாமல் எஞ்சியிருக்கும் கலோரிகள் பெரும்பாலும் கொழுப்பாக உடலில் சேமிக்கப்படுகின்றன என்று அவர் கூறுகிறார்.
இதனால் உடல் எடை அதிகரிக்கிறது. அதிகரித்த உடல் எடை, வகை 2 நீரிழிவு நோய் ஏற்படும் அபாயத்தை உயர்த்துகிறது.
ஆரோக்கியமானோரிடமும் ரத்தச் சர்க்கரை கண்காணிப்புக் கருவிகளின் பயன்பாடு அதிகரிப்பு
பட மூலாதாரம், Getty Images
நீரிழிவு நோய் உள்ளவர்கள் ஏற்கெனவே தங்களது ரத்தச் சர்க்கரை அளவை அடிக்கடி பரிசோதித்து வருகின்றனர்.
இதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு கருவி, தொடர்ச்சியான குளுக்கோஸ் கண்காணிப்புக் கருவி (Continuous Glucose Monitor – CGM) ஆகும். இந்தக் கருவி நாள் முழுவதும் ரத்தச் சர்க்கரை அளவைத் தொடர்ந்து கண்காணிக்கிறது.
இப்போது நீரிழிவு நோய் இல்லாத ஆரோக்கியமானவர்களுக்கும் இந்தக் கருவிகள் விற்பனை செய்யப்படுகின்றன. அவர்களிடையே இந்தக் கருவிகளுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஆனால், நீரிழிவு நோய் இல்லாதவர்களுக்கு இந்தக் கருவிகள் தேவையில்லை என்று சில நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
உதாரணமாக, நீரிழிவு நோய் இல்லாதவர்களை உள்ளடக்கிய ஓர் ஆய்வில், 96 சதவீத நேரம் அவர்களது ரத்தச் சர்க்கரை அளவு சரியான நிலையில் இருந்தது கண்டறியப்பட்டது.
இந்தக் கருவிகளைப் பயன்படுத்துவதால், தங்களது உணவுப் பழக்கத்தில் உடல்நலத்துக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய மாற்றங்களைச் சிலர் மேற்கொள்ளக்கூடும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதனால், தங்களது உடல்நலம் குறித்துத் தவறான புரிதல்களையும் அவர்கள் உருவாக்கிக்கொள்ளக்கூடும்.
இந்தக் கருவிகள் சில நேரங்களில் உண்மையான அளவைவிட அதிகமான ரத்தச் சர்க்கரை அளவைக் காட்டக்கூடும் என்பதும் இதற்கு ஒரு காரணம்.
அட்ரியன் பிரவுனும் அவரது சக ஆய்வாளர்களும் அண்மையில் இந்தத் தலைப்பில் வெளியான ஆய்வுகளை ஆராய்ந்தனர்.
நீரிழிவு நோய் இல்லாதவர்கள் தொடர்ச்சியான குளுக்கோஸ் கண்காணிப்புக் கருவிகளைப் பயன்படுத்துவதால் அவர்களது உடல்நலம் மேம்படுகிறது என்பதை நிரூபிக்கும் உறுதியான, நம்பகமான ஆதாரங்கள் எதையும் அவர்கள் கண்டறியவில்லை.
இருப்பினும், வகை 2 நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் உள்ளவர்களுக்கு நிலைமை வேறுபடலாம்.
இந்தக் கருவிகள் யாருக்கு வகை 2 நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் அதிகம் என்பதை அடையாளம் காண உதவக்கூடும் என்று ஆரம்பகட்ட ஆய்வுகள் தெரிவிப்பதாக ஜெனிஃபர் ஷெர் கூறுகிறார்.
ஆனால், இத்தகையவர்களுக்கு இந்தக் கருவிகள் உண்மையிலேயே பயனளிக்கின்றனவா என்பதை அறிய இன்னும் கூடுதல் ஆதாரங்கள் தேவைப்படுகின்றன.
சமச்சீரான உணவுதான் இன்னமும் சிறந்த வழி
ஆரோக்கியமானவர்களுக்கு ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிப்பது பொதுவான ஒன்று. இதனால் கடுமையான பாதிப்புகள் ஏற்படும் அபாயமும் குறைவு. இருப்பினும், ரத்த சர்க்கரை அளவு மிக வேகமாக ஏறி இறங்குவதைத் தடுப்பதால் சில நன்மைகள் கிடைக்கக்கூடும்.
உதாரணமாக, உணவு சாப்பிட்ட பிறகு ரத்த சர்க்கரை அளவு வேகமாகக் குறைந்தால், அதிக பசி ஏற்படலாம். இதனால் நாள் முழுவதும் அதிகமாகச் சாப்பிடுவதுடன், உடலுக்குள் அதிக கலோரிகளும் செல்லக்கூடும்.
வெவ்வேறு உணவுகள் ரத்த சர்க்கரை அளவில் வெவ்வேறு தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. ரத்த சர்க்கரை அளவைச் சீராக வைத்திருக்க உதவும் உணவுகளைச் சாப்பிடும்போது, வயிறு நீண்ட நேரத்துக்குப் பசியின்றி நிறைந்திருக்கும். முழு தானியங்களும் புரதம் நிறைந்த உணவுகளும் இத்தகைய உணவுகளில் அடங்கும். மறுபுறம், வெள்ளை ரொட்டி, வெள்ளை அரிசி போன்ற எளிய கார்போஹைட்ரேட்டுகள் விரைவாகச் செரிமானமாகின்றன. அவற்றிலிருந்து உருவாகும் குளுக்கோஸ் விரைவாக ரத்தத்தில் கலக்கிறது.
பட மூலாதாரம், Getty Images
உணவுப் பொருட்களை எந்த வரிசையில் சாப்பிடுகிறோம் என்பதும் ரத்த சர்க்கரை அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கார்போஹைட்ரேட் உணவுகளைச் சாப்பிடுவதற்கு முன்பு புரதம் நிறைந்த உணவுகளையும் காய்கறிகளையும் சாப்பிட்டால், வழக்கத்தைவிட ரத்த சர்க்கரை அளவு குறைவாகவே அதிகரிக்கும் என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.
உணவில் புரதம், நார்ச்சத்து அதிகமுள்ள தாவர உணவுகள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் ஆகியவற்றையும் சேர்த்துக்கொள்வது மற்றொரு வழியாகும். இத்தகைய சமச்சீரான உணவு மெதுவாகச் செரிமானமாகி, உடலுக்குத் தொடர்ந்து ஆற்றலை வழங்குகிறது. உடல் எடையைச் சரியான அளவில் பராமரிக்கவும் இது உதவுகிறது. ஒரே உணவு வெவ்வேறு நபர்களின் உடலில் வெவ்வேறு தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
“வெவ்வேறு நபர்களின் உடல்கள் உணவுக்கு வெவ்வேறு விதமாக எதிர்வினையாற்றுகின்றன” என்று பிரவுன் கூறுகிறார்.
“ஒரே நபரின் உடல்கூட வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு விதமாக எதிர்வினையாற்றலாம். அது அவர்களின் தூக்கம், மன அழுத்தம், உடல் செயல்பாடுகள், சாப்பிடும் உணவின் வகை போன்றவற்றைப் பொறுத்தது.”
ஒரு குறிப்பிட்ட உணவுமுறையைப் பின்பற்றுவதற்காகக் கார்போஹைட்ரேட்டுகளை முற்றிலுமாகத் தவிர்ப்பது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம் என்று நிக்கோலா கெஸ் கூறுகிறார்.
சில காலம் கார்போஹைட்ரேட் உணவுகளைத் தவிர்த்துவிட்டு, மீண்டும் அவற்றைச் சாப்பிடத் தொடங்கும்போது ரத்த சர்க்கரை அளவு வழக்கத்தைவிட அதிகமாக உயரக்கூடும். கார்போஹைட்ரேட்டுகள் சமச்சீரான உணவின் முக்கியப் பகுதி என்பதே மிகவும் முக்கியமான விஷயம்.
உணவுகள் குறித்த அண்மைய ஆய்வு மதிப்பாய்வு ஒன்றில் நிக்கோலா கெஸ், “உணவுப் பொருட்களின் முழு வகைகளையும் நாம் தவிர்த்துவிட்டால், அதனால் தேவையின்றிப் பல ஆரோக்கியமான உணவுகளையும் நமது உணவுமுறையிலிருந்து நீக்கிவிட நேரிடலாம்” என எழுதியுள்ளார்.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, ரத்த சர்க்கரை அளவைத் தொடர்ந்து கண்காணிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இதுவரை உறுதியான முடிவு எதுவும் எட்டப்படவில்லை.
தற்போதைக்கு, நம்மில் பெரும்பாலானோர் உணவு மற்றும் பானங்களில் கூடுதலாகச் சேர்க்கப்படும் சர்க்கரையை ஏற்கெனவே தேவைக்கு அதிகமாக உட்கொள்கிறோம் என்பதை நினைவில் கொள்வது பயனுள்ளதாக இருக்கும். இந்தச் சர்க்கரையின் அளவைக் குறைக்க நாம் முயற்சி செய்யலாம்.
இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தகவல்களுக்காக மட்டுமே. இவற்றை மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரின் ஆலோசனைக்கு மாற்றாகக் கருதக் கூடாது.
மெலிசா ஹோகன்பூம் பிபிசியின் மூத்த சுகாதாரச் செய்தியாளர். ‘பிரெட்வின்னர்ஸ்’, ‘தி மதர்ஹுட் காம்ப்ளெக்ஸ்’ ஆகிய நூல்களை அவர் எழுதியுள்ளார். இன்ஸ்டாகிராமில் அவரது கணக்கு: melissa_hogenboom.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு