பட மூலாதாரம், Arun SANKAR / AFP via Getty Images
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
சனிக்கிழமை டெல்லியில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி காக்ரோச் ஜனதா கட்சி நடத்திய போராட்டத்தின்போது காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து ஐ.நா. சபையின் மனித உரிமைகள் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
இந்தப் போராட்டத்தின்போது பல இடங்களில் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. இந்தச் சூழ்நிலையில், இன்று (அக்டோபர் 11) காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு தமது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில், “சனிக்கிழமை டெல்லியில் நடந்த போராட்டங்களுக்கு முன்னரும், அவை நடந்தபோதும், போராட்டக்காரர்கள், போராட்டத் தலைவர்கள், பொது மக்கள், சமூக அமைப்புகளின் உறுப்பினர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் எனப் பலர் காவல்துறையால் தடுத்து வைக்கப்பட்டதாக வெளியான தகவல்கள் குறித்து கவலை கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளதுடன், அமைதியான முறையில் ஒன்றுகூடிப் போராடுவதற்கான உரிமை முழுமையாக மதிக்கப்பட்டு, பாதுகாக்கப்படுவதையும் அதிகாரிகள் உறுதிசெய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
பட மூலாதாரம், Arun SANKAR / AFP via Getty Images
சனிக்கிழமை என்ன நடந்தது?
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டுமெனக் கோரி, சிஜேபி மற்றும் பல இடதுசாரி அமைப்புகள் சார்பில் அக்டோபர் 10 அன்று டெல்லியில் போராட்டங்கள் நடைபெற்றன. நாள் முழுவதும் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் காவலில் எடுக்கப்பட்ட நிலையில், சில இடங்களில் மோதல்களும் வன்முறைச் சம்பவங்களும் பதிவாகின.
கன்னாட் பிளேஸ் என்ற பகுதியில் சிஜேபி ஆதரவாளர்களுக்கும் சிஜேபி எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. எதிர்ப்பாளர்கள் கடுமையான வார்த்தைகள் மற்றும் வன்முறையைத் தூண்டும் முழக்கங்களைப் பயன்படுத்தியதாக சிஜேபி போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டியதுடன் காவல்துறை இரட்டை நிலைப்பாட்டுடன் செயல்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட பல சிஜேபி தொண்டர்களை காவல்துறை காவலில் எடுத்தது.
