பட மூலாதாரம், Getty Images
-
பிரசுரிக்கப்பட்டது
-
வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
இந்தியாவில் விபத்துகளில் காயமடைந்தவர்களுக்கு, உரிய நேரத்தில் உதவி செய்து உயிர் காப்பவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கும் நல்ல சமாரியன் திட்டத்தில் பரிசுத்தொகையை ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.25 ஆயிரமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. ஆனால் இந்த திட்டம் அமலுக்கு வந்து 5 ஆண்டுகளாகியும் இதுவரை நாடு முழுவதும் ஆயிரம் பேர் கூட இந்த பரிசுத்தொகையை பெறவில்லை எனத் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் இந்த எண்ணிக்கை மிகமிகக்குறைவாகவுள்ளது. உதாரணமாக கோவையில் இந்த திட்டத்தில் இதுவரை ஒருவர் கூட பரிசுத்தொகையைப் பெறவில்லை.
உயிர் காக்க உதவும் இந்த திட்டத்தில் மக்கள் பங்கேற்க முன் வராததற்கு, சட்டச்சிக்கல் குறித்த மக்களின் அச்சம் காரணமா, திட்டம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லையா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
பட மூலாதாரம், Getty Images
”நல்ல சமாரியன்” திட்டம் என்றால் என்ன?
மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சக இணையதள புள்ளி விபரங்களின்படி, இந்தியாவில் கடந்த 2016-ஆம் ஆண்டில் 1,50,785 பேர், சாலை விபத்துகளில் உயிரிழந்தனர். கடந்த 2024 ஆம் ஆண்டில், தேசிய அளவில் 4,87,707 சாலை விபத்துகளில் 1,77,175 பேர் மரணமடைந்துள்ளனர். மொத்தம் 4,71,441 பேர் காயமடைந்திருந்தனர்.
தேசிய அளவில் ஆண்டுதோறும் மோட்டார் வாகனங்கள் எண்ணிக்கை 10 சதவீதம் அதிகரித்து வருவதாக புள்ளி விபரம் கூறும் அமைச்சகம், அதேபோல விபத்துகளும் அதிகரித்து வருவதையும் சுட்டிக்காட்டுகிறது.
2014 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில், இந்தியாவில் சாலை விபத்துகளில் 15.3 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர் என்று ”டைம்ஸ் ஆஃப் இந்தியா” செய்தி தெரிவிக்கிறது. சாலை விபத்துகளையும், விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளையும் குறைப்பதற்காக மத்திய, மாநில அரசுகளும் பல திட்டங்களை செயல்படுத்துகின்றன.
குறிப்பாக, விபத்தில் சிக்கியவர்களை “கோல்டன் ஹவர்” காலத்திற்குள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் நபர்களுக்கு வெகுமதி வழங்கும் வகையில், கடந்த 2021 ஆம் ஆண்டில் ‘நல்ல சமாரியன்’ (Good Samaritans) திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. அந்த ஆண்டில் அக்டோபர் மாதத்திலிருந்து திட்டம் நடைமுறைக்கு வந்தது.
முன்பு ‘நல்ல சமாரியன்’ என்று பெயரிடப்பட்டிருந்த இந்த திட்டத்திற்கு இப்போது ‘சாலை நாயகன்’ என்று இந்தியில் பெயர் மாற்றப்பட்டுள்ளது.
சாலை விபத்துகளில் காயமடைந்து பாதிக்கப்பட்டவர்களை முதல் ஒரு மணி நேரமான ‘கோல்டன் ஹவர்’ என்ற காலத்திற்குள் எவ்வித எதிர்பார்ப்புமின்றி மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் நபர்களை பாராட்டி பரிசு வழங்குவதே ‘நல்ல சமாரியன்’ திட்டமாகும்.
இத்திட்டத்தில் முதலில் ரூ.5 ஆயிரம் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டிருந்தது. கடந்த ஜூலை 17 ஆம் தேதியிலிருந்து இந்தத் தொகையை ரூ.25 ஆயிரமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இந்த பரிசுடன், பாராட்டுச்சான்றிதழும் வழங்கப்படும் என்பதே இந்த திட்டமாகும்.
திட்டத்தைச் செயல்படுத்தும் அமைப்பாக மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்கள் இயங்கும். இதற்காக ஆரம்பகட்ட நிதியாக ரூ.25 லட்சத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. திட்டத்துக்கான அறிவிப்பு, 2019-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
மோட்டார் வாகனத் திருத்தச் சட்டம் 2019 இன் பிரிவு 134A இன் கீழ் உள்ள விதிகளின்படி, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தால் 2020 செப்டெம்பர் 29 அன்று அறிவிக்கை வெளியிடப்பட்டு ”நல்ல சமாரியன்” விதிகள் அறிவிக்கப்பட்டன.
விபத்தில் சிக்கியவர்களுக்கு எவ்வித சட்ட அல்லது நடைமுறைச் சிக்கல்களையும் கண்டு அஞ்சாமல் உதவும் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். உச்சநீதிமன்ற உத்தரவின்படி, விபத்தில் காயமடைந்தவர்களுக்கு, சிகிச்சையின் முதல் ஏழு நாட்களுக்குத் தேவைப்படும் மருத்துவமனைச் செலவுகளில், 1.5 லட்சம் ரூபாய் வரையிலான தொகையை மத்திய அரசே ஏற்கும் திட்டமும் இந்த விதிகளில் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி காயமடைந்தவரை கொண்டு வந்து சேர்ப்பவர்களுக்கு பரிசுத்தொகையை வழங்குவதுடன், காயமடைந்தவருக்கு உயிர் காப்பு சிகிச்சைக்கு ரூ.1.5 லட்சமும் மத்திய அரசு வழங்குகிறது.
பட மூலாதாரம், Getty Images
ஒரு விபத்து நிகழ்வில் ‘கோல்டன் ஹவர்’ எப்படி வரையறுக்கப்படுகிறது?
மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 2(12A) இன்படி “கோல்டன் ஹவர்” என்பது அதிர்ச்சிகரமான காயத்தைத் தொடர்ந்து ஒரு மணி நேரம் நீடிக்கும் காலமாக வரையறுக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்திற்குள் உடனடி மருத்துவ உதவியை வழங்குவதன் மூலம் மரணத்தைத் தடுக்க அதிக வாய்ப்புள்ளது என்பதே இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான மிக முக்கியமான காரணியாகவுள்ளது.
ஒரு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுபவர்களில் எத்தனை பேருக்கு இந்த பரிசுத்தொகை வழங்கப்படும்?
ஒரு விபத்தில் ஒரு நபரின் உயிரைக் காப்பாற்ற ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் உதவினால், அந்த விருதுத்தொகை ரூ. 25,000 அவர்களுக்குச் சமமாகப் பிரித்து வழங்கப்படும்.
ஒரே விபத்தில் பலரும் பாதிக்கப்பட்டு, அவர்கள் உயிரைக் காப்பாற்ற பலரும் சேர்ந்து உதவியிருந்தால், காப்பாற்றப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் தலா ரூ. 25,000 வீதமாகக் கணக்கிட்டு, உதவியவர்களுக்கு பிரித்து வழங்கப்படும்.
இருப்பினும் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ. 25,000 மட்டுமே வழங்கப்படும். பண வெகுமதியுடன் ஒவ்வொருவருக்கும் ஒரு “பாராட்டுச் சான்றிதழ்” வழங்கப்படும்.
ஒரு நபர், அதிகபட்சமாக ஓராண்டில் 5 முறை இந்த பரிசுத்தொகையைப் பெறலாம். தங்கள் விபரங்களை வெளிப்படுத்த விரும்பாத நபர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் பரிசு மற்றும் பாராட்டுச்சான்று வழங்கப்படுவதில்லை.
இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கான பயனாளிகள் எப்படி தேர்வு செய்யப்படுகிறார்கள்?
விபத்து குறித்த தகவலை ஒருவர், முதன்முதலில் காவல்துறைக்குத் தெரிவிக்கும் பட்சத்தில், மருத்துவர் மூலம் விவரங்களைச் சரிபார்த்த பிறகு, காவல்துறை அந்த நபருக்கு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் சான்று வழங்கும்.
அதில் அவருடைய பெயர், முகவரி, அலைபேசி எண், விபத்து நடந்த இடம், தேதி மற்றும் நேரம் ஆகியவற்றுடன், பாதிக்கப்பட்ட நபரின் உயிரைக் காப்பாற்ற அவர் எவ்வாறு உதவினார் என்பது போன்ற குறிப்புகள் இடம் பெற்றிருக்கும்.
இந்த ஒப்புதல் சான்றிதழின் நகல், மாவட்ட ஆட்சியரின் தலைமையிலான மாவட்ட அளவிலான மதிப்பீட்டுக் குழுவிற்கு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தால் அனுப்பி வைக்கப்படும். அதன் நகல் உதவிய நபருக்கும் அனுப்பப்படும்.
மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், முதன்மை மருத்துவ அலுவலர் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஆகியோர் உறுப்பினர்களாக இருக்கும் மாவட்ட அளவிலான மதிப்பீட்டுக் குழு பரிசீலித்து ஒப்புதல் வழங்கும்.
அந்த பட்டியல், மாநில போக்குவரத்து ஆணையருக்கு அனுப்பப்படும். அதன்பின் போக்குவரத்து ஆணையரால், பொது நிதி மேலாண்மை அமைப்பு வாயிலாக உதவிய நபரின் வங்கிக்கணக்கிற்கு நேரடியாகப் பணம் வழங்கப்படும்.
இவ்வாறு செலவிடப்பட்ட தொகையை, மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்திடம் சமர்ப்பித்து, அதைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். இந்த செயல்பாடுகளை உள்துறை செயலாளரை தலைவராகவும், போக்குவரத்து ஆணையரை உறுப்பினர் செயலராகவும், சுகாதாரத்துறை ஆணையர் மற்றும் கூடுதல் காவல்துறை இயக்குநர் (போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு) ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்ட மாநில அளவிலான குழு கண்காணிக்கும். 6 மாதங்களுக்கு ஒரு முறை இந்த குழு கூடும்.
இந்த திட்டம் எப்போது வரை செயல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது?
பட மூலாதாரம், Getty Images
இந்தத் திட்டம் 16வது நிதி ஆணையச் சுழற்சி காலம் முடியும் வரை அதாவது 2031 மார்ச் 31 வரை செயல்பாட்டில் இருக்குமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. திட்டத்திற்கான வழிகாட்டுதல்கள், அமைச்சகத்தின் இணையதளத்தில் விரிவாகத் தரப்பட்டுள்ளது.
சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் நபர்கள், பரிசு பெறுவதற்கு என்னென்ன விபரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்?
பெயர், அலைபேசி எண், முகவரி, விபத்து நடந்த இடம், விபத்து நடந்த தேதி மற்றும் நேரம், வங்கிக்கணக்கு விபரங்கள் (வங்கியின் பெயர், முகவரி, வங்கிக்கணக்கு எண், கணக்கு வைத்திருப்பவரின் பெயர், ஐஎஃப்எஸ்சி (IFSC) குறியீடு ஆகியவை படிவத்தில் இடம் பெற வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் உதவியிருந்தால் தனித்தனி படிவங்களைப் பயன்படுத்த வேண்டும்.
காவல்துறையின் சான்றளிப்பில், காவல் நிலையத்தின் பெயர், முகவரி, தொலைபேசி எண், காவல் நிலைய பொறுப்பாளரின் பெயர், அலைபேசி எண், விபத்தின் விபரம் (அதில் ஒரு நபர் செய்த உதவி குறித்து சுருக்கமான பதிவு இருக்க வேண்டும்) ஆகியவற்றுடன், ‘கோல்டன் ஹவர்’ நேரத்துக்குள் சம்பந்தப்பட்ட நபரால் உரிய உதவி செய்யப்பட்டதும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
இவை தவிர்த்து, மருத்துவமனைத் தலைவரின் (நிர்வாக இயக்குநர்/இயக்குநர்/சூப்பிரண்டு போன்றவர்கள்) பெயர் மற்றும் தொலைபேசி எண், விபத்து ஏன் தீவிரமானதாகக் கருதப்படுகிறது என்பதற்கான சுருக்கமான காரணம் ஆகியவையும், ‘கோல்டன் ஹவர்’ காலத்திற்குள் உதவி செய்பவரால் உதவி வழங்கப்பட்டதும் மருத்துவமனை நிர்வாகத்தால் உறுதிப்படுத்தப்பட்டு கையெழுத்திட்டிருக்க வேண்டும்.
இந்த திட்டத்தில் இதுவரை எவ்வளவு பேர் பரிசுத்தொகை பெற்றிருக்கிறார்கள்?
கடந்த 2021 அக்டோபரில் இந்த திட்டம் துவக்கப்பட்டது. ஆனால் 2026 ஜூலையிலிருந்தே பரிசுத்தொகை ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 2021-ஆம் ஆண்டிலிருந்து கடந்த 5 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் 813 பேர் மட்டுமே, இத்திட்டத்தில் கெளரவிக்கப்பட்டிருப்பதாக மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், மக்களவையில் தகவல் சமர்ப்பித்துள்ளது.
அதில் கடந்த 2021–2022 ல் 77 பேர், 2022–2023 ல் 75 பேர், 2023–2024ல், 384 பேர், 2024–2025ல் 177 பேர், 2025–2026 ல் 100 பேர் என புள்ளி விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 8 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் மட்டுமே இத்தகைய உதவியாளர்களைக் கண்டறிந்து வெகுமதிகளை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கிறது அந்த அறிக்கை. அதிலும் அதிகபட்சமாக ராஜஸ்தானில் 224 நபர்களுக்கு வெகுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதற்கு அடுத்தபடியாக பீகாரில் 95 நபர்களுக்கும், மத்தியப் பிரதேசத்தில் 54 நபர்களுக்கும் வெகுமதிகள் வழங்கப்பட்டுள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.
அமைச்சகத்தின் தரவுகளின்படி, தமிழகத்தில் இத்திட்டத்தின் கீழ் 5 ஆண்டுகளில் 19 பேர் மட்டுமே பரிசுகள் பெற்றுள்ளனர். சில மாநிலங்களில் யாருக்குமே இந்த பரிசுத்தொகை வழங்கப்படவில்லை என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி தெரிவிக்கிறது.
தமிழகத்தில் அதிக விபத்து உயிரிழப்புகள் பதிவாகும் மாவட்டமாகவுள்ள கோவை மாவட்டத்தில் இதுவரை ஒருவர் கூட இந்த பரிசுத் தொகையைப் பெறவில்லை என்று பிபிசியிடம் தெரிவித்தார் கோவை மாநகர காவல் போக்குவரத்து துணை ஆணையர் மகேஸ்வரன்.
பரிசுத்தொகை அறிவித்தும் விபத்துகளில் உதவ மக்கள் முன் வரமறுப்பது ஏன்?
‘நல்ல சமாரியன்’ திட்டத்தில் பயன் பெறுவோர் எண்ணிக்கை இவ்வளவு குறைவாக இருக்கக் காரணமென்ன… விபத்துகள் பற்றி தகவல் தெரிவிப்பதால் ஏற்படும் சட்டச் சிக்கல் குறித்த அச்சமா, வேறு காரணமா?
இதுபற்றி பிபிசி தமிழிடம் விளக்கிய கோவை மாநகர காவல் போக்குவரத்து பிரிவு துணை ஆணையர் மகேஸ்வரன், ”இப்போதெல்லாம் சட்டச்சிக்கல்கள் எதுவும் எழுவதில்லை. அதுபற்றி மக்களும் அச்சப்படுவதில்லை. ஆனால் இந்த திட்டம் பற்றி மக்களுக்குத் தெரியவேயில்லை என்பதே உண்மை. சாலை விபத்துகளில் சிக்குவோர், 108 ஆம்புலன்ஸில் மருத்துவமனை அழைத்து வரப்படுகின்றனர். அங்கே தகவல் தெரிவித்தவர் குறித்த படிவத்தில் உண்மையாகக் கொண்டு வந்தவரின் பெயரைக் குறிப்பிடாமல் பாதிக்கப்பட்ட நபரின் உறவினர் அல்லது நண்பரின் பெயரை மட்டுமே குறிப்பிடுகின்றனர்.” என்றார்.
”அத்துடன் விபத்துகளில் சிக்கியவர்களைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்கும் பலரும், ”நல்ல சமாரியன்” திட்டத்தில் பயன்பெறுவதற்கு முறைப்படி விண்ணப்பிப்பதில்லை. தமிழகத்தில் இந்த திட்டம் குறித்து நிறைய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியுள்ளது. அதிக விபத்துகள் நடக்கும் கோவையில் இதுவரை ஒருவர் கூட இதற்கு விண்ணப்பிக்கவில்லை என்பதே இதற்கு உதாரணம். கோவை மாவட்டத்தில் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட போக்குவரத்து அதிகாரியான மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார்.” என்றார் கோவை மாநகர காவல் துணை ஆணையர் மகேஸ்வரன்.
உயிர் காக்கும் சிகிச்சைக்கு இத்திட்டத்தில் தரப்படும் உதவித்தொகை விபரம்!
பட மூலாதாரம், Getty Images
சாலை விபத்துகளில் சிக்கி, மருத்துவமனையில் சேர்க்கப்படுவோர்க்கு உயிர் காக்கும் சிகிச்சைக்கு மத்திய அரசின் எந்த திட்டத்தில் எவ்வளவு தொகை வழங்கப்படுகிறது?
மத்திய அரசின் மோட்டார் வாகனச் சட்டத்தின் (Motor Vehicles Act, 1988) பிரிவு 162-ன் கீழ் “பிரதம மந்திரி – சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவமனை அனுமதி மற்றும் உறுதிசெய்யப்பட்ட சிகிச்சைத் திட்டம் (PM-RAHAT Scheme)” குறித்த அறிவிக்கை, 2025 மே 5 அன்று வெளியிடப்பட்டது. திட்டம் குறித்த அரசாணை ஜூன் 4 அன்று வெளியிடப்பட்டு, 2026 பிப்ரவரி 13 அன்று பிரதமர் மோதியால் துவக்கிவைக்கப்பட்டது.
இத்திட்டத்தின்படி, விபத்தில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் ரூ.1.5 லட்சம் வரையிலான சிகிச்சைச் செலவு மத்திய அரசால் வழங்கப்படும். விபத்து நடந்த நாளிலிருந்து 7 நாட்களுக்குள் மட்டுமே இத்திட்டம் பொருந்தும். இந்த திட்டத்தை மத்திய அரசு அறிவிப்பதற்கு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு பொதுநலமனு முக்கியக் காரணமாகும்.
அந்த மனுவை தாக்கல் செய்தவர், கோவையைச் சேர்ந்த எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவரும், உலக எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான எஸ்.ராஜசேகரன்.
சாலை பாதுகாப்பை உறுதிப்படுத்த உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் 2012-ஆம் ஆண்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவமனைகளில் தரப்படும் உயிர் காக்கும் சிகிச்சைக்கு அரசு நிதி வழங்க வேண்டுமென்பது முக்கியக் கோரிக்கையாக இருந்தது.
இந்த மனுவின் மீதான உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில்தான், தற்போது பிரதமரின் பணமில்லா சிகிச்சை திட்டத்தில், விபத்தில் பாதிக்கப்பட்ட நபருக்கு 7 நாட்களுக்குள் ரூ.1.5 லட்சம் சிகிச்சைச் செலவை மத்திய அரசு வழங்குகிறது. இதைத் தவிர்த்து, சாலை பாதுகாப்புக்கு மாநில அரசுகள் எடுக்க வேண்டிய பலவிதமான நடவடிக்கைகள் குறித்தும் உச்சநீதிமன்றம் பல உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய மனுதாரர் மருத்துவர் எஸ்.ராஜசேகரன், ”என்னுடைய வழக்கின் அடிப்படையில், கடந்த 10 ஆண்டுகளில் உச்சநீதிமன்றம் தொடர்ந்து பல உத்தரவுகளை மாநில அரசுகளுக்குப் பிறப்பித்து வருகிறது. இதை சில மாநில அரசுகள் மட்டுமே அமல்படுத்துகின்றன. அதில் ஒன்றாக போக்குவரத்து விதிகளைக் கடுமையாக அமல்படுத்த வேண்டுமென்று 2025 அக்டோபரில் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுகளை அமல்படுத்தினாலே விபத்துக்களைக் குறைக்க முடியும்.” என்றார்.
”நல்ல சமாரியன்” திட்டத்தில் அதிகம் பேர் பங்கேற்க அரசு செய்ய வேண்டிய நடவடிக்கைகள் என்ன?
பட மூலாதாரம், Handout
இதுகுறித்து பிபிசியிடம் பேசிய கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ் செயலரும், கோவை மாவட்ட சாலை பாதுகாப்புக்குழு உறுப்பினருமான கதிர்மதியோன், ”இந்த திட்டம் பற்றி மக்களுக்குத் தெரியவில்லை என்பதால்தான் யாரும் விண்ணப்பிப்பதில்லை. இதுபற்றி மக்களிடம் விளம்பரப்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அரசின் கடமை.” என்றார்.
”அதேபோன்று உயிர் காக்கும் சிகிச்சைக்கு மத்திய அரசு வழங்கும் ரூ.1.5 லட்சம் நிதியில் பயன் பெறுவது குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை. இத்திட்டத்தில் சிகிச்சையளித்து தொகையைப் பெறுவதற்கு மருத்துவமனை நிர்வாகங்களே விண்ணப்பித்து இணைய வேண்டுமென்ற நடைமுறை உள்ளது. இதனால் இதில் பதிவு செய்யாத பெரும்பாலான மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர்க்கு எந்த உதவியும் கிடைப்பதில்லை. இதைப்பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.” என்றார் கதிர்மதியோன்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு