• Sat. Oct 3rd, 2026

24×7 Live News

Apdin News

சிக்மா- திரைவிமர்சனம்

Byadmin

Oct 3, 2026


கதை

ஆந்திராவில் தாதாவாக இருக்கும் சம்பத்துக்கு சொந்தமான ரூ.1,000 கோடி மாபியா பணம் வெளிநாட்டு லாக்கரில் உள்ளது. அந்த லாக்கரை திறக்கும் சாவியை தனது நம்பிக்கைக்குரிய ஒருவரிடம் தந்து வைக்கிறார், சம்பத்.

இன்னொரு புறம் கடன் பிரச்சனையில் சிக்கி தவிக்கும் சந்தீப் கிஷன், சூதாட்டத்தில் இருக்கும் பணத்தையும் இழந்து நிற்கிறார். அப்போது அவருக்கு அந்த லாக்கரின் சாவியுடன் கூடிய ஒரு பென்-டிரைவும் கிடைக்கிறது.

அந்த பென்-டிரைவ் மூலமாக சூதாட்ட கிளப் உரிமையாளரிடம் இருந்து பணம் கறக்க நினைக்கும் சந் தீப் கிஷனுக்கு, தான் வைத்திருக்கும் அந்த பென்-டிரைவ் விவகாரமான ஒன்று என தெரிய வருகிறது.

அதனைத்தொடர்ந்து பல்வேறு ஆபத்துகள் அவரை சூழ்ந்து கொள்கின்றன. அந்த பென்-டிரைவில் இருக்கும் விஷயம் தான் என்ன? தன்னை நோக்கி வரும் ஆபத்துகளில் இருந்து சந்தீப் கிஷன் மீண்டாரா? அடுத்து என்ன ஆனது? என்பதே பரபரப்பான மீதி கதை.

நடிகர்கள்

சந்தீப் கிஷன் பக்கத்து வீட்டு பையன் போல கலகலப்பான வேடத்தில் கலக்கி இருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளிலும் அசத்தியுள்ளார். ‘எமோஷனல்’ காட்சிகளில் இன்னும் கொஞ்சம் பயிற்சி வேண்டும்.

கதாநாயகியாக பெயருக்கு வந்தாலும், நடித்த காட்சிகளில் கவனம் ஈர்த்துள்ளார் பரியா அப்துல்லா. அன்புதாசனின் டைமிங் காமெடிகள் ஓரளவு ஆறுதல். ராஜூ சுந்தரத்தின் நடிப்பு கடுப்பு ஏற்றுகிறது. சம்பத், ஷிவ் பண்டிட் இன்னும் வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கலாம். வழக்கம்போல ஹீரோவை தவிர அனைவரிடமும் ‘மாஸ்’ காட்டியுள்ளனர்.

இயக்கம்

ஆக்ஷன் காட்சிகளும், நடிகர்களின் பங்களிப்பும் படத்துக்கு பலம். திரைக்கதையில் கொஞ்சம் தடுமாற்றம் தெரிகிறது. பல இடங்களில் ‘லாஜிக்’ மீறல்களும் எட்டிப் பார்க்கிறது.

எது எப்படி இருந்தாலும், எதிர்பார்ப்புகளுக்கு பெரியளவில் குறை வைக்காமல், பரபரப்பு குறையாத காட்சிகள் கொண்ட படமாக இயக்கி கவனம் ஈர்த்துள்ளார், ஜேசன் சஞ்சய். நிறைய பாடங்கள் கற்றுக் கொண்டு அடுத்தமுறை இன்னும் வலிமையாக களம் இறங்குங்கள்.

இசை

தமனின் இசை ‘தெறி’க்கிறது.

ஒளிப்பதிவு

கிருஷ்ணன் வசந்தின் ஒளிப்பதிவில் காட்சிகள் நேர்த்தி.

By admin