12
இங்கிலாந்தின் ஹாம்ப்ஷயர் (Hampshire) பகுதியில் இரு சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காகச் சிறைத்தண்டனை வழங்கப்படாமல் விடுவிக்கப்பட்ட சிறுவர்களின் தண்டனை விவரம், தற்போது மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்குப் (Court of Appeal) பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
2024 நவம்பர் மற்றும் 2025 ஜனவரி மாதங்களில் நடைபெற்ற தனித்தனி சம்பவங்களில், 15 மற்றும் 14 வயதுடைய இரு சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். இந்த வழக்கில் 14 வயதுடைய இரண்டு சிறுவர்களும், 13 வயதுடைய ஒரு சிறுவனும் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டனர். இவர்கள் மீது மொத்தம் 10 பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட போதிலும், இவர்களுக்குச் சிறைத்தண்டனை வழங்கப்படவில்லை.
சவுதாம்ப்டன் கிரவுன் நீதிமன்றத்தின் (Southampton Crown Court) நீதிபதி நிக்கோலஸ் ரோலண்ட், குற்றவாளிகளுக்கு “இளைஞர் மறுவாழ்வு ஆணைகளை” வழங்கினார்.
“இந்தக் குழந்தைகளைத் தேவையின்றி குற்றவாளிகளாக மாற்றுவதைத் தவிர்க்க வேண்டும் மற்றும் அவர்கள் மீண்டும் சமூகத்துடன் இணைவதற்கு ஆதரவளிக்க வேண்டும்” என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார். எனினும், இந்தத் தாக்குதல்களை அவர்கள் அலைபேசியில் படம்பிடித்து இணையத்தில் பகிர்ந்தது, குற்றத்தின் தீவிரத்தை அதிகரிப்பதாக நீதிபதியே ஒப்புக்கொண்டார்.
மேற்படி தீர்ப்பு பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், பிரதமர் சர் கீர் ஸ்டார்மர் (Sir Keir Starmer) இது “மிகவும் வருத்தமளிக்கும் வழக்கு” என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, தலைமை வழக்கறிஞர் (Attorney General) லார்ட் ஹெர்மர், இந்தத் தண்டனையை மறுபரிசீலனை செய்ய மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்குப் பரிந்துரைத்துள்ளார். தண்டனை மிகவும் மென்மையாக இருப்பதாகக் கருதப்பட்டால், அதனை மாற்றியமைக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டு. இந்த மேல்முறையீட்டு விசாரணையில் மூன்று மூத்த நீதிபதிகள் தண்டனை குறித்த இறுதி முடிவை எடுப்பார்கள்.
பாதிக்கப்பட்ட ஒரு சிறுமி, நீதிபதியின் தீர்ப்பு “தனது முகத்தில் கல்லைத் தூக்கி எறிந்தது போல இருந்ததாக” பிபிசியிடம் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்தி – இங்கிலாந்தில் இரு சிறுமிகள் பாலியல் பலாத்கார வழக்கில் தீர்ப்பு: பிரதமர் கண்டனம்
“சரியான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், இனிவரும் காலங்களில் நீதிபதிகள் குற்றத்திற்கு ஏற்ற தண்டனையை வழங்குவதை இது உறுதி செய்ய வேண்டும்” என்றும் ஒரு சிறுமியின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.