பட மூலாதாரம், Kenzo TRIBOUILLARD / AFP via Getty Images
பாரிஸில் உள்ள ஈஃபிள் கோபுரத்தில் அண்மையில் நடந்த ஒரு சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது, பரந்துபட்ட சுவாமிநாராயண் சமயப் பிரிவின் ஒரு பகுதியாக இருக்கும் போச்சாசன்வாசி அக்ஷர் புருஷோத்தம் ஸ்வாமிநாராயண் சன்ஸ்தா (BAPS) அமைப்பில் பெண்களின் பங்கு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்த சமயப் பிரிவு சுமார் 200 ஆண்டுகள் பழமையானது. இதை சுவாமிநாராயண் என்பவர் நிறுவினார். உத்தரப் பிரதேசத்தில் கன்ஷ்யாம் பாண்டே என்ற பெயரில் அவர் பிறந்தார்.
சுவாமிநாராயண் பிரிவைப் பின்பற்றுபவர்கள் அவரை ‘கடவுள்’ என்று அழைப்பது குறிப்பிடத்தக்கது.
பாரிஸ் சர்ச்சை, பல நூற்றாண்டுகள் பழமையான இந்த சமயப் பிரிவின் மரபுகளை மீண்டும் விவாதத்துக்குக் கொண்டு வந்துள்ளது. சுவாமிநாராயண் பிரிவின் மத நூல்களில் பெண்கள் குறித்து உண்மையில் என்ன கூறப்பட்டுள்ளது, துறவிகள் ஏன் பெண்களிடம் இருந்து இடைவெளியைப் பேணுகின்றனர் என்பது உள்ளிட்ட சில கேள்விகளை பிபிசி ஆராய்ந்தது.
சுவாமிநாராயண் கோயில்களுக்கு வழக்கமாகச் செல்லும் பக்தர்களின் கூற்றுப்படி, ஆசீர்வாதம் பெறுவதற்காக பெண்கள் துறவிகளின் காலில் விழுந்து வணங்க அனுமதிக்கப்படுவதில்லை. இந்த விவகாரம் குறித்து பிஏபிஎஸ் அமைப்பின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளரிடம் பிபிசி பேச முயன்றது. ஆனால், அவர் இந்த விவகாரம் குறித்து பேச மறுத்துவிட்டார்.
இந்தியாவில் பெண்களை மத வழிபாட்டுத் தலங்களிலிருந்து விலக்கி வைக்கும் மரபு புதிதல்ல. கேரளாவில் உள்ள சபரிமலை கோயிலில் பெண்கள் நுழைவதற்கான தடை நீண்ட காலமாக சர்ச்சைக்குரிய விவகாரமாக இருந்து வருகிறது.
இந்தத் தடையை நீக்க இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தாலும், இந்த விவகாரத்தில் இறுதித் தீர்ப்பு இன்னும் வெளியாகவில்லை.
சமூக செயற்பாட்டாளரும் எழுத்தாளரும் பகுத்தறிவுவாதியுமான ஸ்வரூப் துருவ் பிபிசியிடம் கூறுகையில், “எனது பார்வையில், ஒவ்வொரு மதமும் ஏதோ ஒரு வகையில் பெண்களைத் தீண்டத்தகாதவர்களாகக் கருதியுள்ளது. ஆனால், சுவாமிநாராயண் பிரிவைப் போல சிலர் அதைத் தங்களது தனித்துவமாக முன்னிறுத்தியுள்ளனர்” என்றார்.
சுவாமிநாராயண் பிரிவின் வரலாற்றைப் பார்க்கும்போது, சமூகவியலாளரும் சுவாமிநாராயண் பிரிவு குறித்த ஆய்வாளருமான கௌரங் ஜானி, சமூகத்தின் ஒடுக்கப்பட்ட மற்றும் விளிம்புநிலை மக்களைக் கவரும் நோக்கத்துடன் சுவாமிநாராயண் மரபு உருவாக்கப்பட்டதாக கூறுகிறார்.
19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இந்து மதத்துக்குள் ஏற்கெனவே பல்வேறு பிரிவுகள் இருந்த நிலையில், கன்ஷ்யாம் பாண்டே 1801ஆம் ஆண்டு ஒரு புதிய மரபைத் தொடங்கி அதற்கு சுவாமிநாராயண் சம்பிரதாயம் (Swaminarayan Sampraday) என்று பெயரிட்டார்.
இந்தப் பிரிவின் தலைமையகம் மேற்கு இந்திய மாநிலமான குஜராத்தில் இருந்து வருகிறது.
1801ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து, சுவாமிநாராயண் மரபில் அதன் சீடர்களுக்குக் கடுமையான விதிமுறைகள் இருந்து வருகின்றன. குறிப்பாக, அதன் துறவிகள் கடைப்பிடிக்க வேண்டிய பிரம்மச்சரியம் தொடர்பாக கடுமையான விதிகள் உள்ளன.
சுவாமிநாராயண் எழுதிய இந்தப் பிரிவின் பழமையான மத நூலான ‘சிக்ஷாபத்ரி’யின்படி, துறவிகள் ஒரு பெண்ணைத் தொடவோ அல்லது அவர்களைப் பார்க்கவோ கூடாது.
பாரிஸ் விவகாரம் குறித்து பிஏபிஎஸ் என்ன கூறியது?
பட மூலாதாரம், SAM PANTHAKY/AFP/GETTY IMAGES
துறவிகள் கடுமையான பிரம்மச்சரிய விரதத்தை மேற்கொண்டிருப்பதால், பெண்களுடனான தொடர்பை மிகவும் குறைக்க வேண்டும் என்று பிஏபிஎஸ் துறவிகளைக் கொண்ட குழுவினர் கோரிக்கை விடுத்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதையடுத்து, ஈஃபிள் கோபுர நிர்வாகம் பெண் ஊழியர்களை அவர்களது பணியிடங்களிலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தி, அவர்களுக்குப் பதிலாக ஆண் ஊழியர்களை நியமித்தது. சில பகுதிகளில், பெண் ஊழியர்கள் “பார்வையில் படாமல் இருக்க வேண்டும்” அல்லது “தங்களை மறைத்துக்கொள்ள வேண்டும்” என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்தச் சர்ச்சை தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், “பாரிஸில் பிஏபிஎஸ் கோயில் திறப்பு விழா நடைபெற்றது குறித்து நாங்கள் அறிந்திருக்கிறோம். எனினும், ஈஃபிள் கோபுரம் தொடர்பாக எழுப்பப்பட்ட குறிப்பிட்ட விவகாரம், சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு இடையிலான முற்றிலும் உள்விவகாரம் மற்றும் பரஸ்பரமானது” என்றார்.
பிஏபிஎஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “துறவிகளின் பாரிஸ் பயணம் ஈஃபிள் கோபுர நிர்வாகத்துடன் முன்கூட்டியே ஒருங்கிணைக்கப்பட்டது. ஊழியர்கள், பிற பார்வையாளர்கள் மற்றும் அந்தத் தளத்தின் இயல்பான செயல்பாடுகளுக்கு இடையூறு பெரிதாக ஏற்படாத வகையில், வழக்கமான பணிநேரத்தில் இந்தப் பயணம் தொடங்க திட்டமிடப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டது.
“இந்த ஒருங்கிணைப்பு ஈஃபிள் கோபுரத்தின் செயல்பாடு மற்றும் நிர்வாகத்தை கருத்தில் கொண்டே மேற்கொள்ளப்பட்டது என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறோம்” என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
“ஏராளமான மக்கள் எந்தவித சிரமமும் இன்றி எளிதாகச் செல்லவும், ஈஃபிள் கோபுரத்தின் ஊழியர்கள் அல்லது பொதுமக்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படாமல் இருப்பதையும் உறுதி செய்வதே நோக்கமாக இருந்தது.
“எந்தக் கட்டத்திலும் பாலின அடிப்படையிலான எந்தவொரு கோரிக்கையையும் முன்வைக்கும் நோக்கம் எங்களுக்கு இருக்கவில்லை.
“அதற்கு மாறாகக் கூறப்படும் எந்தவொரு கருத்தும் எங்கள் சமயப் பிரிவின் அல்லது எங்கள் குழுவினரின் கொள்கைகள் மற்றும் மதிப்புகளைப் பிரதிபலிக்காது” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலினம், பின்னணி அல்லது நம்பிக்கை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் சமத்துவம், பரஸ்பர மரியாதை மற்றும் சேவை ஆகிய கொள்கைகளில் பிஏபிஎஸ் முழுமையான அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த மதிப்புகள் அவர்களின் மரபின் போதனைகளின் மையமாக இருப்பதுடன், உலகம் முழுவதும் அவர்களின் சமூகத்தால் மேற்கொள்ளப்படும் பணிகளிலும் பிரதிபலிப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது.
சமூகவியலாளர் கூறுவது என்ன?
பட மூலாதாரம், SAM PANTHAKY/AFP/GETTY IMAGES
எனினும், பிஏபிஎஸ் மரபைப் பின்பற்றும் வழக்கமான பக்தர்களைப் பொறுத்தவரை இது புதிதான விஷயமல்ல.
உதாரணமாக, கௌரங் ஜானியின் தாயார் சுவாமிநாராயண் கோயில்களுக்கு வழக்கமாகச் சென்று வந்தார்.
புகழ்பெற்ற சமூகவியலாளரும் குஜராத் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையின் முன்னாள் தலைவருமான ஜானி, தனது தாயார் வழக்கமாகக் கோயிலுக்குச் செல்லும்போது, மற்றவர்கள் செல்வதைப் போல இயல்பாகக் கடவுளைத் தரிசிக்கவோ, கோயிலுக்குள் இயல்பாக நுழையவோ அனுமதிக்கப்படவில்லை என்பதைக் கவனித்திருந்தார். பெண்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டாலும், அவர்கள் எப்போதும் ஆண்களிடமிருந்து தனியாக வைக்கப்பட்டனர்.
பிபிசியிடம் அவர் கூறுகையில், “மதத்தைப் பொறுத்தவரை, நமது சமூக வரலாறு பெண்கள் அதை கடவுளின் அடையாளமாக ஏற்றுக்கொண்டதைக் காட்டுகிறது.
“மதச் சடங்குகள் மற்றும் மரபுகள் குறித்து எந்தக் கேள்வியும் கேட்கக் கூடாது என்று ஆரம்பத்திலிருந்தே நமக்குக் கற்பிக்கப்படுகிறது.
“இதனால், சுவாமிநாராயண் கோயில்களிலும் இந்த நடைமுறை படிப்படியாகப் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அங்கு ஏராளமான பெண்கள் தொடர்ந்து தரிசனத்துக்கு வருகின்றனர்” என்றார்.
எனினும், இது எவ்வாறு தொடங்கியது என்பதைத் தெரிந்துகொள்வது சுவாரஸ்யமானது.
19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இந்து மதத்தில் ஏற்கெனவே பல்வேறு பிரிவுகள் உருவாகியிருந்த நிலையில், கன்ஷ்யாம் பாண்டே 1801ஆம் ஆண்டு ஒரு புதிய மரபைத் தொடங்கி, அதற்கு சுவாமிநாராயண் சம்பிரதாயம் என்று பெயரிட்டார். அதன்பிறகு, இந்தப் பிரிவின் தலைமையகம் மேற்கு இந்திய மாநிலமான குஜராத்திலேயே இருந்து வருகிறது.
இந்தப் பிரிவு குறித்து ஆய்வு செய்துள்ள கௌரங் ஜானியின் கருத்துப்படி, இந்தக் கடுமையான பிரம்மச்சரிய விதிகள் பிற மத மரபுகளிலிருந்து தங்களை வேறுபடுத்திக் காட்டும் முயற்சியின் ஒரு பகுதியாக இருந்திருக்கலாம்.
அந்தக் காலத்தில், மக்களைத் தங்கள் பக்கம் ஈர்ப்பதற்காக இந்த மத மரபுகளுக்கு இடையே போட்டி நிலவியது.
அவர் கூறுகையில், “வைணவம் போன்ற இந்து மதத்தின் பிற சமயப் பிரிவுகளுடன் இந்தப் பிரிவு போட்டியை எதிர்கொண்டது. எனவே, மற்றவர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்திக் காட்டுவதற்காக அவர்கள் கடுமையான பிரம்மச்சரியத்தை வலியுறுத்தினர். அந்தப் பிரிவின் துறவிகளாக மாறுவதற்கு மக்கள் பிரம்மச்சரியத்தைப் பின்பற்றவும் ஊக்குவித்தனர்” என்றார்.
சுவாமிநாராயண் பிரிவு எவ்வாறு தொடங்கியது?
பட மூலாதாரம், SAM PANTHAKY/AFP/GETTY IMAGE
19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மேற்கு இந்தியாவில் சுவாமிநாராயண் பிரிவு உருவானது. இதன் நிறுவனர் சுவாமிநாராயண். அவர் 1781ஆம் ஆண்டு இன்றைய உத்தரப் பிரதேசத்தில் உள்ள சப்பையா கிராமத்தில் கன்ஷ்யாம் என்ற பெயரில் பிறந்தார்.
இந்தியா முழுவதும் ஏழு ஆண்டுகள் பயணம் செய்த பின்னர் குஜராத்துக்கு வந்து, 1801ஆம் ஆண்டு இந்தப் பிரிவைத் தொடங்கினார்.
ஒடுக்கப்பட்ட மற்றும் விளிம்புநிலை மக்களிடையே நிலவிய வெற்றிடத்தை நிரப்பி, அவர்களைத் தங்கள் பக்கம் ஈர்ப்பதற்காக இந்தப் பிரிவு தொடங்கப்பட்டது. பின்னர், உலகின் பல்வேறு பகுதிகளுக்குக் குடிபெயர்ந்த குஜராத்தின் படிதார் சமூகத்தினர் இந்தப் பிரிவின் மிகப்பெரிய ஆதரவாளர்களாக மாறினர்.
இதன் விளைவாக, இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பே, 1945ஆம் ஆண்டு இந்தப் பிரிவின் முதல் சர்வதேசக் கோயில் நைரோபியில் கட்டப்பட்டது.
சுவாமிநாராயண் பிரிவின் துறவிகள், ஒரு நகரத்தின் மேயர் முதல் அமெரிக்க அதிபர் வரை பல்வேறு அரசியல் தலைவர்களுடன் நல்ல உறவைக் கொண்டுள்ளனர்.
கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தின் இணையதளத்தில் இடம்பெற்றுள்ள தகவலின்படி, “சுவாமிநாராயண் இந்து மிஷனின் (BAPS) தலைவரான பிரமுக் சுவாமி மகராஜ், 1971ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2007 ஆம் ஆண்டு நவம்பர் வரையிலான காலகட்டத்தில் ஐந்து கண்டங்களில் இந்து முறைப்படி 713 கோயில்களைக் கட்டி, அவற்றில் பிரதிஷ்டை செய்துள்ளார்.”
பிஏபிஎஸ் அமைப்பின் இணையதளத்தின்படி, உலகம் முழுவதும் சுமார் 1,300 கோயில்கள் உள்ளன.
சுவாமிநாராயண் பிரிவில் ஏன் பிரம்மச்சரியம் கடைப்பிடிக்கப்படுகிறது?
பட மூலாதாரம், Getty Images
சுவாமிநாராயண் எழுதிய ‘சிக்ஷாபத்ரி’ என்ற நூல், இந்தப் பிரிவைப் பின்பற்றுபவர்களுக்கான நடத்தை விதிமுறைகளை வழங்குகிறது. 212 பாடல்களைக் கொண்ட இந்த நூல், குடும்பத்தினர், பெண்கள், துறவிகள் மற்றும் கடுமையான பிரம்மச்சரிய விரதத்தை மேற்கொண்டுள்ள சந்நியாசிகள் ஆகியோருக்குப் பல்வேறு விதிமுறைகளை வழங்குகிறது.
இந்த மரபைப் பின்பற்றுபவர்களுக்கு வழிகாட்டுவதற்காக சிக்ஷாபத்ரி எழுதப்பட்டது. பெண்களுக்கான குறிப்பிட்ட விதிமுறைகளும் இதில் இடம்பெற்றுள்ளன.
மாதவிடாய் காலத்தில் ஒரு பெண் மூன்று நாட்களுக்கு எந்த நபரையும், ஆடைகளையும் அல்லது பாத்திரங்களையும் தொடக்கூடாது என்று அது கூறுகிறது. நான்காவது நாள் குளித்த பிறகு தொடலாம் என்றும் குறிப்பிடுகிறது.
எனினும், பெண்களுடன் தொடர்புகொள்வது தொடர்பான மிகவும் கடுமையான விதிகள் பெண்களுக்கானவை அல்ல; மாறாக, வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சரிய விரதத்தை மேற்கொண்டுள்ள துறவிகள் அல்லது சந்நியாசிகளுக்கானவை.
அவர்கள் வேண்டுமென்றே ஒரு பெண்ணைத் தொடவோ, அவரிடம் பேசவோ அல்லது அவரைப் பார்க்கவோ கூடாது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
அமைப்பின் இணையதளத்தின்படி, இந்த விதியின் நோக்கம் பெண்களைத் தாழ்வானவர்களாகவோ தூய்மையற்றவர்களாகவோ கருதுவது அல்ல. ஆன்மிகப் பயிற்சியில் ஈடுபடும் துறவி, உலகியல் ஆசைகள் மற்றும் பற்றுதல்களில் இருந்து விடுபட்டு இருப்பதற்கு உதவுவதே இதன் நோக்கம்.
இந்த நடைமுறையை விமர்சிப்பவர்கள், இதற்குப் பின்னால் மதரீதியான காரணங்கள் கூறப்பட்டாலும், நடைமுறையில் அதன் சுமை பெரும்பாலும் பெண்கள் மீதே சுமத்தப்படுவதாகக் கூறுகின்றனர். ஆண் துறவி தனது பிரம்மச்சரிய விரதத்தைப் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு பெண்கள்மீது விழுகிறது என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
பல பெண் உரிமைச் செயற்பாட்டாளர்கள், இந்தச் சமயப் பிரிவில் ஆரம்பத்தில் பிரச்னை ஆண்களின் உணர்வுகள் மற்றும் அவற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பானதாக இருந்தாலும், இறுதியில் அதன் விளைவுகளையும் சிரமங்களையும் பெண்களே எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டதாகக் கருதுகின்றனர்.
சுவாமிநாராயண் மரபின் சில கிளைகளுக்கு மாறாக, குஜராத்தின் வதோதராவில் உள்ள ஹரிதாம் சோகடாவில் பெண்களை சாதுக்கள் சங்கத்தில் இணைய அனுமதிக்கும் மரபு உள்ளது.
பிஏபிஎஸ் அமைப்பிலிருந்து பிரிந்த மறைந்த ஹரிபிரசாத் சுவாமியால் இது நிறுவப்பட்டது. அதன்பிறகு, ஹரிதாமில் பெண் துறவிகளான சாத்விகளும் உள்ளனர்.
அதன் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளரான சாதக் சுவாமியிடம் பிபிசி பேச முயன்றது. ஆனால், அவர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
பெண்கள் என்ன கூறுகின்றனர்?
சமூக செயற்பாட்டாளரும் எழுத்தாளரும் பகுத்தறிவுவாதியுமான ஸ்வரூப் துருவ் பிபிசியிடம் கூறுகையில், “துறவிகளால் அவர்களது உணர்வுகளையும் ஆசைகளையும் கட்டுப்படுத்த முடியாததால்தான் இந்தச் சமயப் பிரிவில் பெண்கள் இவ்வாறு நடத்தப்படுகின்றனர்” என்றார்.
அவர் மேலும் கூறுகையில், “பெண்களைப் பார்க்கும்போது துறவிகளால் தங்களது உணர்வுகளையும் மனநிலையையும் கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே, அவர்கள் பெண்களைப் பார்க்கவோ, தொடவோ, ஒரு பெண்ணின் புகைப்படத்தைக் கூடப் பார்க்கவோ அனுமதிக்கப்படுவதில்லை. ஆகவே, பிரச்னை பெண்களிடம் இல்லை; இந்தப் பிரிவின் துறவிகளிடம்தான் உள்ளது” என்றார்.
பகுத்தறிவுவாதியும் சமூகச் செயற்பாட்டாளருமான துருவ், தனது எழுத்துகள் மற்றும் தெரு நாடகங்கள் மூலம் மதங்களில் பெண்களுக்கு எதிரான பாகுபாடான அணுகுமுறைகளுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
பிரபல கலைஞரும் சமூகச் செயற்பாட்டாளருமான மல்லிகா சாராபாய், நடந்ததும் நடந்துகொண்டிருப்பதும் முற்றிலும் தவறானது என்று கருதுகிறார்.
பிபிசியிடம் அவர் கூறுகையில், “பிரச்னை ஆண்களிடம்தான் உள்ளது, பெண்களிடம் இல்லை. ஒரு பெண்ணைப் பார்க்கும்போது ஆண்களால் தங்களது உணர்வுகளையும் மனநிலையையும் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், அதற்காகப் பெண்கள் ஏன் தண்டிக்கப்பட வேண்டும்?
“அவர்கள் கண்களை மூடிக்கொள்ள வேண்டும் அல்லது பெண்கள் இருக்கும் இடங்களுக்குச் செல்லாமல் இருக்க வேண்டும். இது, ‘நான் சைவ உணவு மட்டுமே சாப்பிடுகிறேன்; எனவே நான் வெளியே செல்லும்போது என்னைச் சுற்றியுள்ள அசைவ உணவுக் கடைகள் அனைத்தையும் மூட வேண்டும்’ என்று கோருவதைப் போன்றது” என்றார்.
பிரான்ஸின் வரலாறும் பெண்களின் உரிமைகளும்
பட மூலாதாரம், KEYSTONE-FRANCE/Gamma-Rapho via Getty Images
ஒருபுறம், சுவாமிநாராயண் பிரிவில் பெண்கள் நடத்தப்படும் விதம் இந்தியாவில் சில எதிர்ப்புகளை ஏற்படுத்திய நிலையில், அதே நடைமுறை பாரிஸில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.
பெண்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த வலுவான பெண்ணிய மரபு பிரான்ஸில் இருந்ததால், இந்த விவகாரம் அங்கு அதிகமாகப் பேசப்பட்டதாகப் பலர் கருதுகின்றனர்.
அவர்களில் குறிப்பிடத்தக்கவர் செயற்பாட்டாளர் ஒலிம்ப் டி கூஜ். 1791ஆம் ஆண்டு அவர் ‘பெண்ணின் மற்றும் பெண் குடிமகளின் உரிமைகள் பிரகடனம்’ (Declaration of the Rights of Woman and of the Female Citizen) என்ற நூலை வெளியிட்டார்.
அதில், “பெண்களுக்கு தூக்குமேடையில் ஏறுவதற்கான உரிமை இருந்தால், அரசியல் மேடையில் நிற்பதற்கான உரிமையும் அவர்களுக்கு இருக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.
1789ஆம் ஆண்டு நடைபெற்ற பிரெஞ்சுப் புரட்சியின்போது, நவீன ஐரோப்பிய ஜனநாயகத்தின் அடிப்படைக் கருத்துகள் பிரான்ஸில் உருவாயின. எனினும், ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகப் பெண்கள் அரசியல் களத்தில் புறக்கணிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன.
பெண்களுக்கும் வாக்களிக்கும் உரிமை கிடைத்ததன் மூலம் உண்மையான ஜனநாயகம் 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில்தான் உருவானது. அதன்பிறகு, பெண்களின் உடல் மீதான உரிமைகள் மற்றும் பொருளாதாரச் சுதந்திரத்தை உறுதி செய்வதற்காகப் பல தசாப்தங்களாகச் சட்டப் போராட்டங்கள் நடைபெற்றன.
லூயிஸ் வெய்ஸ் போன்ற முன்னணி பெண்கள் 1930களில் ‘லா ஃபெம் நுவெல்’ (La Femme Nouvelle – புதிய பெண்) என்ற இயக்கத்தைத் தொடங்கினர்.
அவர் வன்முறையற்ற ரீதியில் சட்டத்தை எதிர்த்தார், பெரிய அளவிலான பொதுநிகழ்வுகளில் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தினார். அப்போது நடைமுறையில் இருந்த சட்டத்தின்படி எந்தப் பதவிக்கும் தேர்ந்தெடுக்கப்பட அவருக்கு அனுமதி இல்லாதபோதிலும், தேர்தலிலும் போட்டியிட்டார்.
இரண்டாம் உலகப் போரின்போது பிரெஞ்சு எதிர்ப்புப் படையில் பெண்கள் ஆற்றிய மிகப்பெரிய பங்களிப்பை அங்கீகரித்து, ஜெனரல் சார்லஸ் டி கால் 1944ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி பெண்களுக்கு வாக்களிக்கவும் தேர்தலில் போட்டியிடவும் உரிமை வழங்கும் சட்ட ஆணையை அங்கீகரித்தார்.
1945ஆம் ஆண்டு ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில்தான் பிரெஞ்சுப் பெண்கள் முதன்முறையாக வாக்களித்தனர்.
தற்போது பிரான்ஸில் பாலின சமத்துவ நிலை கணிசமாக மேம்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ யூரோஸ்டாட் புள்ளிவிவரங்களின்படி, தேசிய அரசுகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் 48.6 சதவிகிதமாக உள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு