பட மூலாதாரம், @BJP
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
இந்தியா தனது 80-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது. புதுடெல்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டையில் நடைபெற்ற அதிகாரப்பூர்வ விழாவில், 80 ஆண்டுகால பாரம்பரியத்தில் முதல் முறையாக மாற்றம் செய்யப்பட்டது.
நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூர் எழுதிய தேசிய கீதமான ‘ஜன கண மன’ பாடப்படுவதற்கு முன்பு, தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடப்பட்டது.
செங்கோட்டையில் இருந்து உரையாற்றிய பிரதமர் மோதி, “சுதந்திரத்துக்குப் பிறகு செங்கோட்டையில் ‘வந்தே மாதரம்’ இசைக்கப்படுவது இதுவே முதல் முறை” என்று கூறினார்.
‘வந்தே மாதரம்’ பாடலின் முழு வடிவத்துக்கும் தேசிய கீதத்துக்கு இணையான சட்டப் பாதுகாப்பு சமீபத்தில் வழங்கப்பட்டது. 80-வது சுதந்திர தினத்துக்கு முந்தைய நாளான வெள்ளிக்கிழமை, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் நாட்டு மக்களுக்கான உரைக்கு முன்பும், உரையின் முடிவிலும் ‘வந்தே மாதரம்’ இசைக்கப்பட்டது.
இந்த மாற்றம் முக்கியத்துவம் வாய்ந்தது.
ஏனெனில் தேசிய கீதத்துக்கு அரசியலமைப்பு அந்தஸ்து உள்ளது. அதிகாரப்பூர்வ நடைமுறையின்படி, குடியரசின் உயர்ந்த இசை அடையாளமாக அது கருதப்படுகிறது.
எனினும், பாஜகவும், சங்பரிவாருடன் தொடர்புடைய அமைப்புகளும் நீண்ட காலமாக ‘வந்தே மாதரம்’ பாடலை ஆதரித்து வருகின்றன. இந்தப் பாடலில் இந்து மதக் குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன.
சமீபத்தில், நரேந்திர மோதி அரசு சட்டத்தில் திருத்தம் செய்து, ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு ‘ஜன கண மன’வுக்கு இணையான அந்தஸ்தை வழங்கியது.
இதற்கு முன்பு அரசு மற்றும் மாநில நிகழ்ச்சிகளில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு வந்த நிலையில், தேசியப் பாடல் பெரும்பாலும் கலாசார நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது.
சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்குப் பொறுப்பான பாதுகாப்பு அமைச்சகம், ‘வந்தே மாதரம்’ பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் வகையில், முதன்முறையாக அதற்கு சிறப்பு மரியாதை அளிக்கப்படும் என்று சமீபத்தில் அறிவித்திருந்தது.
‘வந்தே மாதரம்’ பாடலை விமர்சிக்கும் பலர், இது சங்பரிவாரின் விரிவான இந்துத்துவக் கொள்கையின் ஒரு பகுதியாக இருப்பதாகக் கூறுகின்றனர். இதன் மூலம் இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் பன்மைத்துவத்தைப் பிரதிபலிக்கும் தேசிய கீதத்துக்குப் பதிலாக, ‘வந்தே மாதரம்’ பாடலின் ஆறு சரணங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க முயற்சி நடப்பதாக அவர்கள் வாதிடுகின்றனர்.
‘வந்தே மாதரம்’ பாடலின் இந்தச் சரணங்களில் துர்கா, சரஸ்வதி, லட்சுமி உள்ளிட்ட இந்து தெய்வங்கள் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. இந்தியா வணங்கத்தக்க தாய் தெய்வமாக இதில் சித்தரிக்கப்படுகிறது.
பட மூலாதாரம், ANI
திருத்தப்பட்ட சட்டங்கள்
திருத்தப்பட்ட சட்டத்தின்படி, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு இந்த வார தொடக்கத்தில் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்ற 1971-ஆம் ஆண்டின் தேசிய கவுரவத்தை அவமதிப்பதைத் தடுக்கும் சட்டத்தின் கீழ், தேசிய கீதத்தை அவமதிப்பது போல தேசியப் பாடலை அவமதிப்பதும் அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குரிய குற்றமாகும்.
மூத்த காங்கிரஸ் தலைவரும் மக்களவை உறுப்பினருமான சசி தரூர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
எக்ஸ் தளத்தில் பதிவிட்ட சசி தரூர், “வந்தே மாதரம் திருத்தச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இது நாடாளுமன்றத்தில் எந்த விவாதமும் இன்றி நிறைவேற்றப்பட்டது. இந்தத் திருத்தத்தின்படி, தேசிய கீதத்துடன் சேர்த்து, ஒவ்வொரு அதிகாரப்பூர்வ நிகழ்ச்சியின் தொடக்கத்திலும் முடிவிலும் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ முழுமையாகப் பாடுவது கட்டாயமாக்கப்படும்” என்று பதிவிட்டுள்ளார்.
“இரண்டின் மீதும் எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. ‘வந்தே மாதரம்’ பாடலின் முதல் இரண்டு சரணங்களை என்னால் பாட முடியும். ஆனால், மீதமுள்ள நான்கு சரணங்களை என்னால் பாட முடியாது. ஏனெனில் அவை இதுவரை கட்டாயமாக்கப்படவில்லை.
நமது அதிகப்படியான ஆர்வம் கவனிக்கத் தவறிய நடைமுறை சார்ந்த ஒரு விஷயத்தை மட்டுமே நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அது மனித இயல்பு” என்று அவர் அப்பதிவில் கூறியிருந்தார்.
மேலும், “ஜன கண மன இசைக்கப்படும் போது, மக்கள் சுமார் 52 விநாடிகள் மரியாதையுடன் எழுந்து நின்று கவனத்துடன் இருக்க வேண்டும். வந்தே மாதரம் முழுப் பதிப்பு மூன்று நிமிடங்கள் 10 விநாடிகள் நீளமானது. இந்த இரண்டு பாடல்களுக்கு முன்பாக சுமார் இரண்டு நிமிடங்கள் நீளமுள்ள மாநிலப் பாடலான ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடப்பட வேண்டும் என்று தமிழ்நாடு தற்போது முடிவு செய்துள்ளது”என்று சசி தரூர் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், “ஒவ்வொரு நிகழ்ச்சியின் தொடக்கத்திலும் முடிவிலும், சுமார் ஆறு நிமிடங்கள் இந்தப் பாடல்களைக் கேட்டு மக்கள் அசையாமல் மரியாதையுடன் நிற்க வேண்டும் என்று நாம் உண்மையிலேயே எதிர்பார்க்கிறோமா?
ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் கூடுதலாக மொத்தம் 12 நிமிடங்கள் ஆகுமா? சட்டத்தின் மூலம் மரியாதையையும் பொறுமையையும் கட்டாயப்படுத்த முடியுமா?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
“தேசிய கீதத்தின் மீது அதிக மரியாதையை ஏற்படுத்த வேண்டும் என்ற இந்தச் சட்டத்தின் நோக்கம் நிறைவேறாது என்று நான் அஞ்சுகிறேன். உண்மையில், இதற்கு நேர்மாறான விளைவையே அது ஏற்படுத்தக்கூடும்” என்றும் அவர் கூறியுள்ளார்.
பட மூலாதாரம், ANI
முஸ்லிம் தலைவர்கள் எதிர்ப்பு
முஸ்லிம் அமைப்புகள் இந்த விதிமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகள், அல்லாவைத் தவிர வேறு யாரையும் வணங்குவதைத் தடை செய்கின்றன என்று அவை வாதிட்டுள்ளன.
ஹைதராபாத் மக்களவை தொகுதி உறுப்பினர் அசாதுதீன் ஒவைசியும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், “நீங்கள் ‘ஜன கண மன’ பாடும்போது, அதில் எதைப் பார்க்கிறீர்கள்? இந்த நாட்டையும் அதன் மக்களையும் பார்க்கிறீர்கள். ஆனால், ‘வந்தே மாதரம்’ பாடும்போது, அதில் கடவுள்களையும் தெய்வங்களையும் வழிபடுவதாக அமைகிறது” என்றார்.
“நாட்டின் சுதந்திரத்துக்காக உயிர்த் தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றி இப்போது என்ன சொல்வீர்கள்? ‘ஜன கண மன’ மக்களுக்காக எழுதப்பட்டது. 1950-ல் ராஜேந்திர பிரசாத் மிகப்பெரிய தவறு செய்தார் என்று நான் கருதுகிறேன். முறையான தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டிய நிலையில், அவர் எந்தவொரு முறையான தீர்மானமும் இல்லாமல் அதை ‘தேசியப் பாடல்’ என்று அறிவித்தார். ‘தேசியப் பாடல்’ என்ற சொல் எங்கும் வரையறுக்கப்படவில்லை. மத்திய அரசு அரசியலமைப்பின் 25, 26 மற்றும் 29-வது பிரிவுகளை மீறுகிறது” என்றார்.
உண்மையில், மோதி அரசு நாடாளுமன்றத்தில் வெறும் 15 நிமிட விவாதத்துக்குப் பிறகு இந்த மசோதாவை நிறைவேற்றியபோதும், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
திமுக எம்.பி.யான கனிமொழி, தேசியவாதம் என்ற பெயரில் பாஜக இந்துத்துவக் கொள்கையை முன்னெடுத்து வருவதாகக் குற்றம்சாட்டினார். இந்தச் சட்டம் “கூட்டாட்சிக்கு எதிரானது” என்றும், சட்டத்தின் மூலம் தேசியவாதத்தைத் திணிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
1937-ல், அப்போது ஜவஹர்லால் நேரு தலைமையிலான காங்கிரஸ், ‘வந்தே மாதரம்’ பாடலை தேசியப் பாடலாக ஏற்றுக்கொள்வது குறித்து ரவீந்திரநாத் தாகூரிடம் ஆலோசனை கேட்டது. அப்போது, துர்கா தேவியைப் பற்றிக் குறிப்பிடும் ‘வந்தே மாதரம்’ பாடலின் பிந்தைய சரணங்களுக்கு முஸ்லிம்கள், பிரம்ம சமாஜத்தைப் பின்பற்றுபவர்கள் போன்றவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கக்கூடும் என்று தாகூர் கூறினார்.
தாய்நாட்டின் அழகை விவரிக்கும் முதல் இரண்டு சரணங்களை மட்டும் தேசியப் பாடலாக வைத்துக்கொள்ளுமாறு அவர் நேருவுக்கு அறிவுறுத்தினார்.
பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா 1875-ல் ‘வந்தே மாதரம்’ பாடலை எழுதினார். அதன் பிற சரணங்கள் பின்னர் 1882-ல் அவர் எழுதிய ‘ஆனந்தமத்’ நாவலில் இடம்பெற்றன.
பாஜக ஆட்சி இல்லாத தமிழ்நாடும் கேரளாவும் மத்திய அரசின் உத்தரவைப் பின்பற்றப் போவதில்லை என்று ஏற்கெனவே தெளிவுபடுத்தியிருந்தன.
தமிழ்நாட்டின் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து அரசு நிகழ்ச்சிகள் மற்றும் அதிகாரப்பூர்வ விழாக்களிலும் மாநிலத்தின் அதிகாரப்பூர்வ பாடலான “தமிழ்த்தாய் வாழ்த்து” முதலில் பாடப்படும் என்று புதன்கிழமை அறிவித்தார்.
இதற்கிடையில், கேரளாவில் உள்ள காங்கிரஸ் அரசு, ‘வந்தே மாதரம்’ பாடலின் ஆறு சரணங்களும் பாடப்படாது என்று தெளிவுபடுத்தியுள்ளது.
அதன்படி, முந்தைய ஆண்டுகளின் நடைமுறையைப் பின்பற்றி, சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் உள்ளிட்ட மாநிலத்தின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் முதல் இரண்டு சரணங்கள் மட்டுமே பாடப்படும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு