11
* “தொற்று நோய் மரணம்” என மடைமாற்றப்படும் வாதங்கள்
* பேராசிரியர் ராஜ் சோமதேவவின் மனச்சாட்சி சொல்வது என்ன?
—- — —
வடமாகாணம் யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபதி இந்து மயானப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய அகழ்வாராய்ச்சி குறித்த இடைக்கால அறிக்கை, இந்த ஒக்ரோபர் மாதம் 19 ஆம் திகதி, பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் தொல்பொருள் ஆய்வாளர் அனுஷா வன்னி நாயக்க ஆகியோரால் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
110 நாட்கள் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில், 583 மனித எச்சங்களை உள்ளடக்கித் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை, இன்னும் பகிரங்கப்படுத்தப்படவில்லை.
இறப்புக்கான காரணங்கள் குறித்து இந்த அறிக்கை இன்னும் தீர்க்கமான முடிவுகளை முன்வைக்கவில்லை என்ற போதிலும், இதுவொரு திட்டமிட்ட ‘சட்டவிரோதக் கொலை’ (Unlawful killing) என்ற உண்மையை அது நிராகரிக்கவும் இல்லை.
ஆனால், வரலாறு காட்டும் உண்மைகளும், கடந்த காலத் தடயவியல் சான்றுகளும் முற்றிலும் வேறொரு கதையைச் சொல்கின்றன.
–1999 இல் தொடங்கிய உண்மைகளின் தேடல்–
இன்று அகழப்படும் அதே செம்மணி மண்ணில், சரியாக 27 ஆண்டுகளுக்கு முன்பு 1999 இல் முதலாவது அகழ்வாராய்ச்சி நடைபெற்றது.
யாழ் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி, கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் தண்டனை பெற்ற லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச என்ற சிப்பாய், கொழும்பு மேல் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலம் அந்தப் பேராபத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது.
அப்போதைய மன்னார் நீதவான் மாணிக்கவாசகம் இளஞ்செழியனின் தினசரி நேரடி மேற்பார்வையில், சர்வதேச அவதானிகளின் முன்னிலையில் நடைபெற்ற அந்த அகழ்வில், சோதனைச் சாவடிக்கு அருகில் இருந்து 15 உடல்கள் மீட்கப்பட்டன.
–மூடிமறைக்கப்பட்ட தடயவியல் உண்மைகள்–
அப்போது ருகுணு பல்கலைக்கழகத்தின் தலைமைத் தடயவியல் நிபுணர் பேராசிரியர் நிரியல்லகே சந்திரசிறி மேற்கொண்ட ஆய்வுகள், அதுவொரு திட்டமிட்ட படுகொலை என்பதை அறிவியல்பூர்வமாக நிரூபித்தன
அப்போது இராணுவத்தால் கடத்தப்பட்ட இராசையா சதீஸ்குமார் மற்றும் மகேந்திரன் உதாஸ்கரன் ஆகிய இருவரின் சடலங்கள், அகழ்வின் போது, முழுமையான ஆடைகளுடன் இருந்ததால் குடும்பத்தினரால் அடையாளம் காணப்பட்டன.
உடல்கள் வீசப்பட்டுக் கிடந்த விதம், அவை எவ்வித மத சடங்குகளுக்கோ அல்லது சட்டபூர்வமான அடக்க முறைக்கோ உட்படுத்தப்படவில்லை என்பதைத் திட்டவட்டமாக நிரூபித்தது.
–நீதிக்காகக் காத்திருக்கும் எலும்புகள்–
2000 ஆம் ஆண்டில் இந்த வழக்கில் தொடர்புடைய கப்டன் லலித் ஹேவா உள்ளிட்ட இராணுவத்தினர் கைது செய்யப்பட்டாலும், பாதுகாப்பு காரணங்களைக் கூறி வழக்கு கொழும்புக்கு மாற்றப்பட்டு, பின்னர் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
அடையாளம் காண்பதற்காக இந்தியா, பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு அனுப்பப்பட்ட எலும்பு மாதிரிகள் என்னவாயின என்று தெரியாமலேயே பேராசிரியர் சந்திரசிறி 2006 இல் காலமானார்.
இந்த ஆண்டு, ஜூன் மாதம் கருத்துத் தெரிவித்த இலங்கையின் நீதி அமைச்சர், 1998 ஆம் ஆண்டு விசாரணை குறித்த எவ்வித தடயவியல் கண்டுபிடிப்புகளோ, ஆவணங்களோ தற்போது அரசிடம் இல்லை எனக் கூறி கைகளைக் கழுவியுள்ளார்.
–அன்றும் இன்றும்: மாறாத நிலமும், எழும் கேள்விகளும்–
1996 காலப்பகுதியில் செம்மணியின் சதுப்பு நிலப்பரப்பில் அரியலை சிந்துபதி இந்து மயானத்தைத் தவிர வேறு கட்டிடங்கள் எவையும் இருக்கவில்லை. அந்த மயானப் பகுதியை ஒட்டியே இப்போதைய அகழ்வுகள் நடக்கின்றன.
2025 இல் இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு கண்டறிந்த தரவுகளின்படி, புதிதாகத் தோண்டப்பட்ட தளத்தில் உள்ள 90 சதவீதத்திற்கும் அதிகமான மனித எச்சங்களில் ஆடைகள் எதுவும் இல்லை.
அன்று 1999 இல் ஆடைகள் திட்டமிட்டுக் கழற்றப்பட்டு, படுகொலை செய்யப்பட்டு, இரகசியமாகப் புதைக்கப்பட்டார்கள் என்ற உண்மை தடயவியல் ரீதியாகப் பேசியது.
உண்மைகள் இன்னும் முடிவாகவில்லை. தற்போது அமைக்கப்பட்டு வரும் புதிய நிபுணர் குழுவின் கைகளில்தான், இந்த 583 ஆன்மாக்களின் மரணத்திற்கான உண்மையான நீதியும், அந்த எலும்புகள் சொல்லப்போகும் வரலாறும் தங்கியுள்ளன.
–சர்வதேசத்தின் சாட்சியமும் நீதிக்கான சவாலும்–
1999 ஆம் ஆண்டு செம்மணி அகழ்வாராய்ச்சியானது வெறும் உள்நாட்டு விவகாரமாக மட்டும் இருக்கவில்லை. ‘மனித உரிமைகளுக்கான மருத்துவர்கள் அமைப்பு’ (Physicians for Human Rights) சார்பாக வருகை தந்த உலகப் புகழ்பெற்ற தடயவியல் நிபுணர்களான டொக்ரர் வில்லியம் ஹாக்லண்ட், மெலிசா கானர், அவுஸ்திரேலியாவின் டொக்ரர் கெவின் லீ, அமெரிக்காவின் தால் சிம்மன்ஸ் மற்றும் கனடாவின் ஆர். டி. ஸ்டேர் ஆகியோர் அடங்கிய சர்வதேச நிபுணர் குழுவும், தூதரக அதிகாரிகளும் இந்த அகழ்வாய்வை முழுமையாகக் கண்காணித்தனர்.
ஒரேயொரு எலும்புக்கூட்டில் மட்டும் முதுகெலும்பு காசநோய் இருந்ததை அவர்கள் மேலதிகமாகக் கண்டறிந்தனர். இந்த சர்வதேச அவதானிப்புகள் அனைத்தும் நேரடியாக சட்டமா அதிபருக்கு அறிக்கையிடப்பட்டன.
DNA எனப்படும் மரபணு பரிசோதனைக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட எலும்பு மாதிரிகள் இன்று வரை திருப்பி அனுப்பப்படவுமில்லை; எஞ்சிய எச்சங்கள் எவையும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுமில்லை.
இறுதியாக, 2026 ஜூன் மாதம் இலங்கையின் நீதி அமைச்சர் “கடந்த காலத் தடயவியல் ஆவணங்கள் அரசிடம் இல்லை” எனக் கூறிப் பொறுப்பற்ற முறையில் பதிலளித்துள்ளமை நீதிக்கான கதவுகள் திட்டமிட்டு மூடப்படுவதையே காட்டுகின்றது.
அன்று 1999 இல், சர்வதேசக் கண்காணிப்பில் ஆராயப்பட்ட எலும்புகள் செம்மணியின் கொடூரமான படுகொலை வரலாற்றுக்கு உண்மையாகப் பதிலளித்தன.
காலம் உண்மைகளைத் தின்ன முயன்றாலும், செம்மணியின் இந்த புதிய எலும்புக்கூடுகளும் ஒரு நாள் உண்மையை உரக்கப் பேசும் என்பதே உலகத் தமிழர்களின் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் ஆகும்.
ஆங்கிலத்தில் anangu.substack com இணையம்
தமிழில் அமலன்