பிரதமர் மோடி சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை கண்டு அஞ்சுவதாக ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார்.
டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில், நீட் தேர்வு முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, சோனம் வாங்சுக் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வருகிறார்.
இந்தப் போராட்டக் களத்திற்கு இன்று நேரில் சென்ற அரவிந்த் கெஜ்ரிவால், வாங்சுக்கிற்கு தனது ஆதரவைத் தெரிவித்தார். தொடர்ந்து போராட்டக் களத்தில் பேசிய கெஜ்ரிவால் தர்மேந்திரப் பிரதானை நீக்கிவிட்டு, சோனம் வாங்சுக்கை கல்வி அமைச்சராக்க வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் வாங்சுக் பேச்சை அரசு கேட்கவேண்டும் என்றும், இல்லையென்றால் 2011-ல் நடத்திய அண்ணா ஹசாரேவுடனான போராட்டத்தால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு ஏற்பட்ட அதே கதியை பாஜக அரசும் சந்திக்கும் என தெரிவித்தார்.
மேலும் வாங்சுக் போன்றவர்கள் கல்வித் துறையில் பெரிய புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டு வந்துவிடுவார்கள் என்ற பயத்தின் காரணமாகவே, பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் மௌனம் காப்பதாக குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து 19 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் சோனம் வாங்சுக்கின் உடல்நிலை கடுமையாக நலிவடைந்துள்ள நிலையில், அவரது உடல்நிலையைத் தினமும் கண்காணிக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றமும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது