0
75 ஆண்டுகளாக இலங்கையில் சமூகப் பணிகளில் ஈடுபட்டு வரும் தேசிய கிறிஸ்தவ சுவிசேஷக் கூட்டமைப்பின் ACT NOW பிரச்சாரம் 2018 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஜனநாயக உரிமைகள், குடிமைப் பொறுப்புகள் மற்றும் சமூக அரசியல் விழிப்புணர்வு குறித்து இளைஞர்களை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ள இப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகவே இந்த புகைப்படக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இக் கண்காட்சியில் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் வாழும் ஒதுக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை அனுபவங்கள், மனித உரிமை மீறல்கள், நிலம், நீதி, நல்லிணக்கம், ஜனநாயகம் மற்றும் சமூக ஒற்றுமை தொடர்பான பிரச்சினைகள் புகைப்படங்களின் ஊடாக பதிவுசெய்யப்பட்டுள்ளன. பொதுவாக ஊடகங்களிலும் பொதுக் கலந்துரையாடல்களிலும் போதிய கவனம் பெறாத சமூகங்களின் கதைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே இக் கண்காட்சியின் பிரதான நோக்கமாகும்.
புகைப்படக் கண்காட்சியுடன் இணைந்து பல்வேறு மனித உரிமை மற்றும் சட்ட நிபுணர்கள் பங்கேற்கும் கலந்துரையாடல்களும் நடைபெறவுள்ளன. கண்காட்சி ஆரம்ப நாளான இன்று மாலை 4 மணிக்கு “பதிலளிக்கப்படாத துயரங்களும் தீர்க்கப்படாத அநீதிகளும் மீது இலங்கையின் எதிர்காலத்தை கட்டியெழுப்ப முடியுமா?” என்ற தலைப்பில் முதல் கலந்துரையாடல் நடைபெறுகிறது. உண்மை, நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நிலையான சமாதானத்தின் அவசியம் குறித்து இதில் ஆராயப்படவுள்ளது.
கண்காட்சியை மாற்றுக் கொள்கைகளுக்கான மையத்தின் (CPA) நிறுவனர் மற்றும் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து பிரதம உரையாற்றி ஆரம்பித்து வைத்தார். சமூகத்தின் ஓரங்கட்டப்பட்ட மக்களின் குரல்களை வெளிக்கொணர்வதன் அவசியம், நீதி, நல்லிணக்கம் மற்றும் ஜனநாயக விழுமியங்களை வலுப்படுத்த வேண்டிய தேவை ஆகியவற்றை அவர் தனது உரையில் வலியுறுத்தியதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜூலை 17 ஆம் திகதி மலையகத் தமிழர்களின் நிலம், வீடமைப்பு மற்றும் ஏனைய மனித உரிமைகள் தொடர்பான சவால்கள் குறித்து கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. அதேவேளை, கண்காட்சியின் இறுதி நாளான ஜூலை 20 அன்று “கறுப்பு ஜூலை: முடிவுறாத கடந்தகாலம்” என்ற தலைப்பில் 1983 தமிழர் இனப்படுகொலை மற்றும் அதன் தொடர்ச்சியான தாக்கங்கள், வரலாற்று நீதியின் அவசியம், நல்லிணக்கத்தின் எதிர்காலம் ஆகியவை குறித்து விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
மனித உரிமைகள், ஜனநாயகம், சமூக நீதி ஆகியவற்றில் அக்கறையுடைய பொதுமக்கள், மாணவர்கள், சிவில் சமூக அமைப்புகள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்கள் அனைவரும் இப் புகைப்படக் கண்காட்சியையும் அதனுடன் இணைந்த கலந்துரையாடல்களையும் பார்வையிடுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.