பட மூலாதாரம், Getty Images
-
பிரசுரிக்கப்பட்டது
-
வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்
கடந்த 2021 ஆம் ஆண்டில் கோவை மாநகராட்சியில் நியமிக்கப்பட்ட 54 இளநிலை உதவியாளர் நியமனங்களை ரத்து செய்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்த நியமனங்களால் பாதிக்கப்பட்ட தூய்மைப்பணியாளர்கள், இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் தங்களை அந்தப் பணியிடங்களில் நியமிக்கவேண்டுமென்று அத்துறையை வைத்துள்ள தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.
நீதிமன்றத் தீர்ப்பால் பாதிக்கப்பட்டுள்ள 54 பேர்களில் பெரும்பாலானோர் மிகவும் ஏழ்மைப்பட்டவர்கள் என்பதால் தமிழக அரசே தங்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டுமென்கின்றனர் பணியிழக்கவுள்ள இளநிலை உதவியாளர்கள். நீதிமன்ற உத்தரவு குறித்து அரசின் ஆலோசனைப்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதாக மாநகராட்சி ஆணையர் ரவி தேஜா கூறியுள்ளார்.
பணி நியமனம் தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்ததுபோல முன்னாள் அமைச்சர் வேலுமணியின் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென்று திமுக வலியுறுத்தியுள்ளது. ஆனால் அந்த நியமனத்தில் தான் எந்த குறுக்கீடும் செய்யவில்லை, பணம் எதுவும் வாங்கவில்லை என்று விளக்கம் அளித்துள்ள வேலுமணி, திமுக ஆட்சியில் திட்டமிட்டு சிலரை தூண்டிவிட்டு வழக்குத் தொடுத்துள்ளதாகவும், நேர்காணல் கோப்புகளை திருடி, மார்க் ஷீட்டை தொலைத்துவிட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
பணி நியமனம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் கடுமையான கருத்துகள்!
கடந்த 2021 பிப்ரவரி மாதத்தில், கோவை மாநகராட்சியில் 103 இளநிலை உதவியாளர்கள் புதிதாக நேரடி நியமனம் செய்யப்பட்டனர். இந்த நியமனம் தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின்படி, இந்த 103 பணியிடங்களில் தூய்மைப்பணியாளர், ஓட்டுநர் மற்றும் பதிவுரு எழுத்தர் போன்ற பணிகளில் இருந்த 34 பேருக்கு மூப்புரிமை அடிப்படையில் இந்த பணியிடங்கள் வழங்கப்பட்டன.
மீதமுள்ள 69 பணியிடங்களுக்கு மாநகராட்சி நிர்வாகத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்டு, நேர்காணல் நடத்தப்பட்டது. மொத்தம் 654 பேர் விண்ணப்பித்ததில், 440 பேர் மட்டுமே நேர்காணலில் பங்கேற்றனர். கருணை அடிப்படையில் சிலர் நியமிக்கப்பட்டதுபோக, 54 பேர் புதிதாக நேரடி நியமனம் செய்யப்பட்டனர்.
2021 பிப்ரவரி 8 ஆம் தேதியன்று நேர்காணல் நடத்தி முடிக்கப்பட்டு, அதே நாளில் நியமனக்குழுவால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மறுநாளே அனைவருக்கும் பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது. அந்த ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிப்பு வெளியிடுவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பாக, அதிமுக ஆட்சியின் இறுதிக்காலத்தில், இந்த நியமனம் தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இவ்வாறு பணி நியமனம் வழங்கப்பட்டதில் பெரும் முறைகேடு நடந்திருப்பதாகவும், அப்போது தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணியின் செல்வாக்கைப் பயன்படுத்தி, பல்வேறு விதிகளை மீறி நியமனம் நடந்துள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
நியமனம் செய்யப்பட்ட 54 பேர்களில் பெரும்பாலானோர், வேலுமணியின் தொகுதியான தொண்டாமுத்தூர் தொகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் எதிர்க்கட்சியினர், தூய்மைப்பணியாளர்கள் அமைப்பினர் குற்றம்சாட்டினர்.
முறைகேடாக நியமிக்கப்பட்ட 54 பேருடைய பணி நியமனங்களை ரத்து செய்ய வேண்டுமென்று, கோவை மாநகராட்சி தூய்மைப்பணியாளர் ஈஸ்வரி உள்ளிட்ட 11 பேர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் கடந்த ஜூன் 18 ஆம் தேதியன்று, உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, முக்கிய உத்தரவை வழங்கியது.
அதில் 54 பேருடைய பணி நியமனங்களை ரத்து செய்வதாக அமர்வு உத்தரவிட்டது. தங்களுடைய உத்தரவில், இந்த நியமனத்தில் நடந்த பல்வேறு முறைகேடுகளையும் நீதிபதிகள் குறிப்பிட்டு, கடுமையாக தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தனர். தீர்ப்பில் அவர்கள் குறிப்பிட்டிருந்த முக்கிய அம்சங்கள்:
- 440 விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத்தேர்வு எதுவுமே நடத்தப்படவில்லை.
- இளநிலை உதவியாளர் பணிக்குரியவர்களை தேர்வு செய்ய, உதவி ஆணையர் தலைமையிலான சரிபார்ப்புக் குழு (verification committee) அமைக்கப்பட்டதானது பணி விதிகளுக்கு முரணானதும், அறியப்படாத நடைமுறையுமாகும்.
- பணிக்கான ஆள் சேர்ப்பு நடவடிக்கை, ஓர் உதவி ஆணையரால் நடத்தப்பட்டுள்ளது. அவரும் வெறும் சான்றிதழ்களை மட்டுமே சரி பார்த்துள்ளார். உண்மையான தேர்வு அல்லது மதிப்பீடு எதுவுமே செய்யப்படவில்லை.
- * இந்த செயல்முறை, ஒரு மோசடி என்பதையும், முழு செயல்முறையையும் இது முற்றிலும் சீர்குலைக்கிறது என்பதையும் உறுதிப்படுத்தும் வகையில் வெளிப்படையாக அமைந்துள்ளது.
- தேர்வுச் செயல்முறை முழுவதுமே ஒரு மோசடியாகவும், வேட்பாளர்கள் விருப்பு வெறுப்பு மற்றும் உறவுமுறைச் சார்பின் அடிப்படையிலும் தேர்ந்தெடுக்கப்படுவதால், பணி நியமனத்தை ரத்து செய்வதைத் தவிர நீதிமன்றத்துக்கு வேறு வழியில்லை. அதுவே இம்மன்றத்தின் முன் உள்ள ஒரே தீர்வாகும்.
- இவ்வழக்கில் உள்ள தேர்வு நடைமுறையை ஆய்வு செய்வது மனசாட்சியை உலுக்கும் வகையில் உள்ளது; ஏனெனில், அத்தேர்வு நடைமுறைக்காக அமைக்கப்பட்ட குழுவே ஒரு மோசடியான ஒன்றாகும்.
- சட்டத்தின் பார்வையில், தேர்ந்தெடுக்கப்படாதவர்கள் நிலைமையும் கருத்தில் கொள்ளவேண்டும். அவர்கள் இம்முறை மீதோ அல்லது எதிர்கால அரசுப் பணித் தேர்வுகள் மீதோ நம்பிக்கை இழக்கக்கூடாது. இவ்வழக்கில் முறையான தேர்வு நடைமுறை ஏதுமில்லை என்ற முடிவுக்கு இம்மன்றம் வந்துள்ளது; இதன் விளைவாக மேற்கொள்ளப்பட்ட நியமனங்கள் சட்டவிரோதமானவை என அறிவிப்பது தவிர்க்க முடியாததாகிறது.இவ்வாறு அந்த தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.
பட மூலாதாரம், Getty Images
இந்த வழக்கில் துாய்மைப் பணியாளர்கள் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் பன்னீர் செல்வம், ”நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு, நியமனக்குழு தீர்மானம், நியமனம் அத்தனையும் ஒரே நாளில் நடந்தது. இதற்கான அறிவிக்கை விளம்பரம், மக்கள் யாருமே பார்க்கக்கூடாத வகையில் 2 மாலை நாளிதழ்களில் வெளியாகியிருந்தது. அதிலும் ஒன்றில் ஆன்லைன் பக்கம் மட்டுமே நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 325 தூய்மைப்பணியாளர்கள் எடுக்க வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 2018 ஆம் ஆண்டில் வாங்கப்பட்ட மூப்புப் பட்டியலையே 2021 ஆம் ஆண்டிலும் பயன்படுத்தியிருந்தனர்.” என்றார் வழக்கறிஞர் பன்னீர்செல்வம்.
வழக்கமாக புதிதாகப் பணிக்குச் சேரும் ஒருவருக்கு சர்வீஸ் ரிக்கார்டு தயாராக ஒரு மாதமாகும். அதையே ஒரே நாளில் தயாரித்து பணி நியமன உத்தரவும் வழங்கி, அன்றே பணியையும் ஒதுக்கிவிட்டதாக கூறினார் வழக்கறிஞர் பன்னீர் செல்வம். இந்த வழக்கு தொடர்பாக மனுதாரர்கள் தரப்பில், பல்வேறு தகவல்களையும் பல துறைகளிடமிருந்து வாங்கியுள்ளனர்.
பிபிசியிடம் இதுபற்றி மேலும் விளக்கிய வழக்கறிஞர் பன்னீர் செல்வம், ”இளநிலை உதவியாளராகப் பணி நியமனம் பெற்ற ஒருவர், பணியில் சேர்ந்த ஒரு வாரத்துக்குப் பின்பே, அவர் படித்த கல்லூரியில் சான்றிதழ் கோரி விண்ணப்பித்துப் பெற்றுள்ளார். பணி நியமனம் பெற்ற 54 பேர்களில் 38 பேர், அன்று அத்துறையின் அமைச்சராக இருந்த வேலுமணியின் தொகுதியைச் சேர்ந்தவர்கள். பெரும்பாலானவர்கள் அதிமுக கவுன்சிலர்கள் மற்றும் நிர்வாகிகளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.” என்றார்.
கடந்த 2021 ஆம் ஆண்டில் இந்த பணி நியமனத்துக்கான நேர்காணல் நடக்கும் முன்பே, அதை நிறுத்தக்கோரி ஜெய்கிருஷ்ணன் என்பவரால் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் நேர்காணலில் தவறு நடந்தால் பின்பு முறையிடலாம், இந்த மனுவில் முகாந்திரமில்லை என்று நீதிபதி அந்த மனுவை தள்ளுபடி செய்தார்.
அதன்பின் நேர்காணல் நடந்த மறுநாளே பணி நியமனம் தரப்பட்டதால், பாதிக்கப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் சார்பில் மற்றுமோர் மனு, உயர்நீதிமன்ற அமர்வில் தாக்கல் செய்யப்பட்டு, அவ்வழக்கில்தான் கடந்த ஜூன் 18 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
”முதல் மனு தள்ளுபடி செய்யப்பட்ட பின்பு, அமர்வில் நாங்கள் மனு தாக்கல் செய்ததும் நேர்காணல் நடத்தி மதிப்பெண் வழங்கிய விபரங்களை நீதிபதிகள் கோரினர். ஆனால் அது அவர்களிடம் இல்லாததால் சிக்கிக் கொண்டனர். பின்வாசல் வழியாக வந்தவர்கள், பின்வாசல் வழியாகத்தான் செல்ல வேண்டும் என்று நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், தன் கருத்தை வெளியிட்டார். அதிகாரம் என்ற ஒன்றை வைத்து எது வேண்டுமானாலும் செய்யலாம் என்று முடிவெடுத்து மற்றவர்களின் வாய்ப்பைப் பறித்துள்ளனர் என்பதையும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.” என்றார் வழக்கறிஞர் பன்னீர் செல்வம்.

உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு!
கடந்த ஜூன் 18 வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு அல்லது மாநகராட்சி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யாத நிலையில், பணி நியமனம் பெற்ற 54 பேர்களில் மாற்றுத்திறனாளிகள், கணவனை இழந்தவர் என 6 பேர் மட்டும் மேல் முறையீடு செய்தனர்.
அந்த மனு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் விஸ்வநாதன், அருண்பாலி ஆகியோர் அடங்கிய அமர்வால், ஜூலை 14 அன்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
”எதிர்தரப்பினர் மேல் முறையீடு செய்யும்முன்பே எங்கள் தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்துவிட்டோம். வழக்கின் விபரங்களைப் பார்த்த நீதிபதிகள், எங்களால் 65 வழக்கையே ஒரு நாளில் பார்க்க முடியவில்லை. நீங்கள் ஒரே நாளில் 654 விண்ணப்பங்களை பரிசீலித்து நேர்காணலை முடித்திருக்கிறீர்கள். டீ குடிக்கக்கூடப் போகாமல் ஒரே நாளில் நேர்காணலை நடத்தி முடித்தீர்களா என்று கேள்வி எழுப்பி, தங்கள் அதிருப்தியைத் தெரிவித்தனர்.” என்றார் வழக்கறிஞர் பன்னீர்செல்வம்.
கருணை அடிப்படையில் கோரிக்கையைப் பரிசீலிக்க வேண்டுமென்பது மேல்முறையீடு செய்த தரப்பு வாதமாக முன் வைக்கப்பட்டுள்ளது.
அந்த வாதத்தைக் கேட்ட நீதிபதி அருண்பாலி, ”அதே கருணையைத்தான் இந்த நியமனத்தால் பாதிக்கப்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கும் காண்பித்திருக்க வேண்டும்.” என்று கூறியதை பிபிசியிடம் பேசிய தூய்மைப் பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் குறிப்பிட்டனர்.
உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2 வழக்குகளிலும் மாற்றுத்திறனாளிகள் என்ற விஷயத்தை முன் நிறுத்தாத நிலையில், உச்சநீதிமன்றத்தில் மட்டும் மாற்றுத்திறனாளிகளை முன்னிறுத்தி மேல் முறையீடு செய்ததாகச் சொல்கிறார் வழக்கறிஞர் பன்னீர் செல்வம்.
அதேபோன்று பணி நியமனத்தில் இடஒதுக்கீட்டைப் பின்பற்றுவதிலும் ஏராளமான விதிமீறல் இருந்ததாக அவர் கூறுகிறார்.
பணி நியமனத்தை எதிர்த்து தாக்கல் செய்த மனுதாரர்களில் முதல் மனுதாரரான ஈஸ்வரி (வயது 43), கணவனை இழந்தவர். தூய்மைப் பணியாளராகப் பணியாற்றிய அவருடைய கணவர் இறந்ததன் காரணமாக இவருக்கு கருணை அடிப்படையில் தூய்மைப்பணியாளர் பணி வழங்கப்பட்டுள்ளது.
பிபிசியிடம் பேசிய ஈஸ்வரி, ”என் கணவர் 2015 ஆம் ஆண்டில் இறந்தபோது, எனக்கு கருணை அடிப்படையில் அதே பணியைக் கொடுத்தனர். நான் பட்டதாரி என்பதால் எனக்கு வேறு வேலை வாய்ப்பு தருமாறு கோரி, முதல் முறை அந்த பணி வேண்டாமென்று கூறிவிட்டேன். அதன்பின் என் கோரிக்கை ஏற்கப்படாததால் என்னுடைய 2 குழந்தைகளை வளர்க்க வேறு வழியின்றி கடந்த 2016 ஆம் ஆண்டில் அதே தூய்மைப் பணியாளர் பணியில் சேர்ந்தேன்.” என்றார்.
பட்டதாரி என்பதன் அடிப்படையில், தற்போது இவருக்கு தூய்மைப் பணி மேற்பார்வையாளர் பணி ஒதுக்கப்பட்டாலும், இப்போதும் தூய்மைப்பணியாளருக்கான ஊதியமே தனக்கு வழங்கப்படுவதாகக் கூறுகிறார். தன்னைப்போல நூற்றுக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் மற்றும் கல்வித்தகுதியுள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு இளநிலை உதவியாளர் பணியை வழங்காததால்தான் அந்த நியமனத்தை எதிர்த்து நீதிமன்றம் சென்றதாக அவர் விளக்கினார்.
”என்னைப் போன்ற கல்வித்தகுதியும் மூப்புரிமையும் உள்ளவர்களுக்கு கடந்த 2021 ஆம் ஆண்டில் இளநிலை உதவியாளர் பணியை வழங்கியிருந்தால் இப்போது எங்களுக்கு 40 ஆயிரம் முதல் 45 ஆயிரம் ரூபாய் ஊதியம் கிடைத்திருக்கும். ஆனால் இப்போதும் எனக்கு தூய்மைப் பணியாளருக்கு வழங்கப்படும் ரூ.27 ஆயிரம் ஊதியம் மட்டுமே கிடைக்கிறது. இந்த தீர்ப்புக்குப் பின்பாவது எங்களுக்கு இந்தப் பணியை ஒதுக்க வேண்டும்.” என்றார் ஈஸ்வரி.
நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின் ஜூலை 15 வரையிலும் அவர்கள் யாருமே பணியில் இருந்து விடுவிக்கப்படவில்லை. அவர்களில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் பணியாற்றும் ரமேஷ் என்பவரிடம் பிபிசி பேசியபோது, ”இதுவரை எங்களுக்கு எந்தத் தகவலும் வரவில்லை. அதனால் இப்போது வரை பணியில் இருக்கிறோம். இந்த தீர்ப்பு தொடர்பாக தமிழக அரசு என்ன முடிவெடுக்கிறது என்பதற்காக காத்திருக்கிறோம்.” என்றார்.
பட மூலாதாரம், X/SP Velumani
கே.என்.நேருவும், எஸ்.பி.வேலுமணியும்
இளநிலை உதவியாளர் பணியிடத்துக்கு எட்டாம் வகுப்பு அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சியே போதுமென்ற கல்வித்தகுதி நிர்ணயிக்கப்பட்ட நிலையில், பணியில் சேர்ந்தவர்களில் பலரும் பட்டதாரிகள் என்பதும் தெரியவந்துள்ளது. அவர்களில் சுதந்தபிரியன் என்பவர், சட்டப்படிப்பு முடித்துள்ள பட்டதாரி. ஆனால் வழக்கறிஞராக எங்கும் பணி புரியவில்லை.
பிபிசியிடம் பேசிய சுதந்தபிரியன், ”இந்த வழக்கில் சட்டப்படி மேல் முறையீடு செய்து வாதாடியிருக்க வேண்டிய பொறுப்பு, மாநகராட்சி நிர்வாகத்தினுடையது. ஆனால் அவர்கள் அதைச்செய்யவில்லை. 103 இளநிலை உதவியாளர் பணி நியமனங்கள் நடந்துள்ளன. அதில் மூப்பு அடிப்படையில் பலருக்கும், கருணை அடிப்படையில் சிலருக்கும் பணி வழங்கப்பட்டது. ஆனால் மனுவின் அடிப்படையில் எங்கள் 54 பேருடைய பணி நியமனங்கள் மட்டுமே ரத்து செய்ய உத்தரவு வழங்கப்பட்டுள்ளதுதான் பெரும் வருத்தமளிப்பதாகவுள்ளது.” என்றார்.
”தேர்வு முறை சரியில்லை என்று நிரூபித்திருக்க வேண்டிய வாய்ப்பை மாநகராட்சி தவறவிட்டுள்ளது. எங்களைப் பொருத்தவரை, 54 பேருடைய பணி நியமனங்களிலும் எந்த விதிமீறலும் இல்லை. கட்சிக்காரர் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது, பணம் வாங்கி நியமிக்கப்பட்டனர் என்ற குற்றச்சாட்டுகள் பொய்யானவை. எங்களில் பெரும்பாலானவர்கள் ஏழைக்குடும்பத்தினர்தான். அதனால் எங்களுடைய நிலையையும் கருத்தில் கொண்டு அரசு ஒரு நல்ல முடிவெடுக்க வேண்டும்.” என்றார் சுதந்தபிரியன்.
இவர்கள் உட்பட பிபிசியிடம் பேசிய இளநிலை உதவியாளர்கள் பலரும், கடந்த 6 ஆண்டுகளில் தாங்கள் அனைவருமே மிகக்கடுமையாக பணிகள் செய்திருப்பதாகவும், பல்வேறு துறைகளிலும் பணி அனுபவம் பெற்றிருப்பதாகவும் தெரிவித்தனர்.
ஆனால் நீதிமன்ற உத்தரவின்படி 54 பேரை பணி நீக்கம் செய்து, அதற்குப் பதிலாக தூய்மைப் பணியாளர்களில் மூப்புரிமையில் இருப்பவர்களுக்கு அந்தப் பணிகளை வழங்க வேண்டுமென்பது ஈஸ்வரி உள்ளிட்ட 11 மனுதாரர்களின் கோரிககையாகவுள்ளது.
நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், இவர்களின் பணி நியமனங்களை ரத்து செய்வதுடன், இந்த முறைகேடுகளுக்குக் காரணமான அமைச்சர் வேலுமணி மற்றும் அப்போதிருந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கையை திமுக முன் வைத்துள்ளது. திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மீது பாய்ந்த அமலாக்கத்துறை நடவடிக்கையை இதற்குக் காரணமாகக் கூறுகின்றனர்.
திமுக ஆட்சியில் இதே துறையில் பணி 2538 பணி நியமனங்களுக்கு ரூ.888 கோடி லஞ்சம் பெறப்பட்டதாக அத்துறையின் அமைச்சராக இருந்த கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்யுமாறு அப்போதிருந்த டிஜிபி (பொறுப்பு) வெங்கட்ராமனுக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியது. அதிமுக எம்பி இன்பதுரை சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பின்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிபிசியிடம் பேசிய திமுகவை சேர்ந்த கோவை நாடாளுமன்ற உறுப்பினரும், கோவை மாநகராட்சி முன்னாள் மேயருமான ராஜ்குமார், ”பணி நியமனங்களில் முறைகேடு நடந்ததாக கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்யுமாறு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அழுத்தம் கொடுத்த அமலாக்கத்துறை, இப்போது வேலுமணி அமைச்சராக இருந்தபோது பணி நியமனத்தில் முறைகேடு நடந்ததை உச்சநீதிமன்றமே உறுதி செய்துள்ள நிலையில், அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது. கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்தது போல, இந்த 54 பணி நியமனங்கள் தொடர்பாக வேலுமணி மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்யவேண்டும்.” என்றார்.
இதுதொடர்பாக கருத்துக்கேட்பதற்காக முன்னாள் அமைச்சர் வேலுமணியை தொடர்பு கொண்டபோது, அவரிடம் பதில் பெறமுடியவில்லை. இதுபற்றி சில பத்திரிக்கைகளுக்கு அவர் அளித்துள்ள விளக்கத்தில், ”அந்த பணி நியமனத்தைச் செய்தது அதிகாரிகள்தான். அதில் நான் எந்த வகையிலும் தலையிடவில்லை. எந்த பணமும் வாங்கவில்லை. நேர்மையாக நேர்காணல் நடத்தி ஆட்களை தேர்வு செய்தனர்.” என்று கூறியுள்ளார்.
மேலும் ”திமுக ஆட்சியில் சிலரை தூண்டிவிட்டு வழக்குத் தொடுத்தனர். நேர்காணல் சார்ந்த கோப்புகளை திருடிவிட்டனர். மார்க் ஷீட்டை காணவில்லை. இதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்று மாநகராட்சி நிர்வாகம் நீதிமன்றத்தில் வாதாடி நிரூபித்திருக்க வேண்டும். திமுக ஆட்சியில் அதைச் செய்யவில்லை. இப்போதாவது உச்சநீதிமன்றத்தில் மாநகராட்சி நிர்வாகம் மேல் முறையீடு செய்து, ஊழியர்களைத் தேர்ந்தெடுத்த நடைமுறையைத் தெளிவுபடுத்தியிருக்க வேண்டும்.” என்றும் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின், 54 இளநிலை உதவியாளர்கள் மீது எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன என்பது குறித்துக் கருத்துக் கேட்பதற்காக, கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜாவை தொடர்பு கொண்டபோது, அவரும் பதில் தெரிவிக்கவில்லை. மாநகராட்சி உதவி ஆணையாளர் (நிர்வாகம்) பிரகாஷை தொடர்பு கொள்ளுமாறு அவர் தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டது. அவரிடம் பேசியபோது, இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர்தான் பதில் தரவேண்டுமென்று கூறினார்.
செய்தியாளர்களிடம் இதுபற்றிப் பேசிய மாநகராட்சி ஆணையாளர் ரவி தேஜா, ”உயர்நீதிமன்ற உத்தரவு குறித்து சட்டப்பிரிவின் கருத்து கோரப்பட்டிருந்தது. அதற்குள் 54 பணியாளர்களில் 6 பேர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துவிட்டனர். உச்சநீதிமன்ற உத்தரவு தொடர்பாக நகராட்சி நிர்வாக இயக்குநர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. தமிழக அரசுக்கும் இதுபற்றி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அங்கிருந்து வரும் அறிவுறுத்தலின்படி ஒரு வாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு